தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வணிகப் பொருள்கள்

  • 6.4 வணிகப் பொருள்கள்

    வணிகப் பொருள்களை வண்டிகளிலும், பொதி எருதுகளின் மீதும் ஏற்றிச் சென்றுள்ளனர். அவைகளின் மூட்டைகள் பொதி என்றும், பாக்கம் என்றும் அழைக்கப்பட்டன. தலைச்சுமையாகவும் பொருள் கொண்டு செல்லப்பட்டது. பொதிகள் மூலைப்பொதி, நிசப்பொதி என இருவகைப்பட்டன.
     

    6.4.1 விற்பனையும் வாங்குதலும்

    வணிகர்கள் ஓர் ஊருக்குப் பொருள்களைக் கொண்டு சென்று விற்பதுடன், அங்கு கிடைக்கும் பொருள்களைத் தம் ஊர்க்கும் வாங்கி வந்தனர். எனவே அவர்கள் இருவழி வணிகமும் செய்தனர் எனலாம். ஒரு கல்வெட்டு
     

    'தீவாந்தரங்களில் வியாபாரிகட்கும், பட்டணங்
    களில் நாநாதேசி வியாபாரிகளுக்கும் சரக்கு
    வேண்டினபடி வேண்டுவார்க்கு விற்றும் மறு
    சரக்குக் கொண்டும்'
    என்று கூறுகிறது.
     
    6.4.2 சந்தைப் பொருள்கள்

    வணிகப் பொருள்கள் சாத்து எனப்படும். அதனால் வணிகர்கள் சாத்தர் எனப்பட்டனர். ஐம்பெரும் காப்பியத்துள் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டார். கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும் பெயராகும். தானியங்கள் 18 வகைப்படும் என்பர். ஏற்றுமதிப் பொருள்கள் ஏறுசாத்து என்றும், இறக்குமதி பொருள்கள் இறங்குசாத்து என்றும் கூறப்படும். சோழநாட்டு வணிகப் பொருளுக்குப் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது.

    வணிகக்குழு
    குறியிடுகள்

    கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுப் பிரான்மலை என்னும் திருக்கொடுங் குன்றத்தில் மிகப் பெரிய வணிகச் சந்தை கூடியது. அங்கு விற்கப்பட்ட பொருள்களை அக்கல்வெட்டு பட்டியலிட்டுக் காட்டுகிறது. உப்பு, அரிசி, பயிற்றம், அவரை, ஆமணக்கு, பாக்கு, மிளகு, மஞ்சள், சுக்கு, வெங்காயம், கடுகு, சீரகம், இரும்பு, பருத்தி, நூல், புடவை, மெழுகு, தேன், சந்தனம், அகில், பன்னீர், சவரிமயிர், கற்பூரத்தைலம், சாந்து, புனுகு, சவ்வாது, மாடு, குதிரை, யானை ஆகியவை விற்கப்பட்டதாக அக்கல்வெட்டுக் கூறுகிறது. தேன், பன்னீர் ஆகியவை குடத்திலும், சாந்து, புனுகு, சவ்வாது ஆகியவை கொம்பு மூலமும் கொண்டு வரப்பட்டன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:15:35(இந்திய நேரம்)