தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-6.2

  • 6.2 முதற் பாட்டும் இரண்டாம் பாட்டும்

    முதல் இரண்டு பாடல்களில் இடம் பெற்றுள்ள கருத்துகளைப் பார்ப்போம்.

    6.2.1 புலாஅம் பாசறை (முதற்பாட்டு)

    புலா அம்பாசறை என்பது பாட்டின் பெயர். புலால் (ஊன்) நாற்றம் பொருந்திய பாசறை என்பது இதன் பொருள். பாசறை என்பது போர் செய்வதற்காக வீரர்கள் தங்கியிருக்கும் இடம்.

    பாட்டின் கருத்து

    ''பலா மரத்தில் அதன் பழம் பழுத்து வெடித்து, புண் போன்ற அவ்வெடிப்பிலிருந்து தேன் ஒழுகும்; அத்தேனை வாடைக் காற்று சிதறும். இவ்வாறு தேன் மழை பொழியும் பறம்பு மலைக்குரிய பெருவீரனும், ஓவியத்தில் வரைந்தது போன்ற வேலைப்பாடு கொண்ட வீட்டிலிருக்கும் கொல்லிப் பாவை போன்ற அழகிய நல்ல பெண்ணுக்குக் கணவனுமான பாரி, பொன் போன்ற நிறம் கொண்ட பூவினையும் சிறிய இலையினையும் பொலிவு இல்லாத அடிமரத்தையும் உடைய உன்ன மரத்துக்குப் பகைவன். காய்ந்த சந்தனத்தையும், ஈரம் மிக்க வள்ளல் தன்மையையும் தன் அகன்ற நெஞ்சில் உடையவன். அந்தப் பெருவள்ளல் பாரி, சென்றவர் திரும்பி வராத மேல் உலகம் சென்று விட்டான். அதனால் இசைக்கலைஞர்கள் பாடுவதை மறந்தனர்.

    இசைக்கப் படாததால் அவர்களின் முழவுகளின் மார்ச்சினை என்னும் மண் காய்ந்து போனது. பரிசில் பெற்று வாழும் எங்கள் கலைஞர் கூட்டமே காய்ந்து, வாடி வருந்துகிறது. “பாரி இறந்துவிட்டான், அதனால் எனக்கு நீ உதவுவாயாக” என்று உன்னிடம் இரந்து கேட்க வரவில்லை.

    அதற்காக, உண்மை இல்லாததைப் புனைந்து உன்னைப் புகழ மாட்டேன். உன் பெருமையைக் குறைத்தும் கூறமாட்டேன். “செல்வக் கடுங்கோ வாழியாதன் பிறர்க்குக் கொடுப்பதால் தன் செல்வம் குறைகிறதே என்று வருந்த மாட்டான். கொடுக்கும் போதெல்லாம், ‘நாம் வாரிக் கொடுக்கிறோம்’ என்ற பெருமை கொண்டு மகிழ்ச்சி அடையவும் மாட்டான். ஒவ்வொரு முறை கொடுக்கும் போதும் மிகுந்த செல்வத்தைக் கொடுக்கும் பெரிய வள்ளல்” என்று உயர்ந்தவர்கள் உன்னைப் புகழ்ந்து கூறும் உண்மை மொழிகளைக் கேட்டேன். பாரியின் இந்தப் பண்புகள் உன்னிடமும் இருப்பதால் உன்னிடம் வந்திருக்கிறேன்.

    ஒளிமிக்க வாள்களால் வெட்டுப்பட்ட வன்மையான களிறுகளும் வீரர்களும் பெற்ற புண்களில் இருந்து புலால் நாற்றம் வீசும் பாசறை! அதில் நிலவின் வெளிச்சம்போல ஒளி வீசும் உன் வேல்படை! அதைப் புகழ்ந்து பாடினி பாடுகிறாள். அப்பாடலுக்குத் தாள ஒலி தரும் முழவின் இசைக்கு ஏற்ப ஆடும் வெள்ளை நிறம் கொண்ட கைகளால் உன் அரசவை விழாக்கோலம் பூண்டு மகிழ்ந்து இருக்கிறது. இந்த அவையில் உன் புகழ்பாட வந்திருக்கிறேன்.''

    இவ்வாறு கபிலர் பாடுகிறார். இப்பாடலில் கூறப்படும் உன்னம் என்பது ஒரு மரம். இது தளிர்த்தால் மன்னனுக்கு வெற்றி உண்டாகும்; வாடினால் தீமை உண்டாகும் என்பது அக்கால நம்பிக்கை. பாரி அந்த மரம் எப்படி இருந்தாலும் வெற்றியும் புகழுமே அடைபவன் என்பதால் அவனை உன்னத்துப் பகைவன் என்று கூறினார்.

    பாட்டின் துறை முதலியன

    இப்பாட்டின் துறை காட்சி வாழ்த்து. அரசனை நேரே கண்டு வாழ்த்துதல் எனப் பொருள்படும். கபிலர் கடுங்கோவை நேரிற் கண்டு வாழ்த்தியமையின் இத்துறை பெற்றது. வண்ணம் ஒழுகுவண்ணம். ஒழுகுவண்ணமாவது, ஆற்றின் ஓட்டம்போல ஒழுகிய ஓசை உடையது. தூக்கு செந்தூக்கு; செந்தூக்கென்பது ஆசிரியப்பா. பாட்டின் பெயர் புலா அம் பாசறை. பிளந்த புண்களில் இருந்து வந்த ஊனின் நாற்றம் வீசும் பாசறையை, நிலவொளி வீசுகின்ற நறுமணம் கமழும் சோலை போன்று கற்பனை செய்து பாடியிருப்பதால் இந்த அழகிய தொடர் இப்பாடலின் பெயர் ஆகிறது.

    6.2.2 வரைபோல் இஞ்சி (இரண்டாம் பாட்டு)

    வரைபோல் இஞ்சி என்பது இப்பாட்டின் பெயர். மலையைப் போன்ற மதில் என்பது இதன் பொருள். சேர அரசனின் பகைவருடைய மதில்கள் வரை (மலை) போல் இருந்தன என்பதற்காக இத்தொடர் கூறப்பட்டது.

    பாட்டின் கருத்து

    ''பசுமையான பொறிகளைச் சிதறும் ஒளிமிக்க நெருப்பு, பல சூரியன்கள் வந்த ஊழிக்காலம் போன்ற மாயத் தோற்றத்தோடு எங்கும் பரவி விளங்க, உயிர்களுக்குப் பொறுக்க முடியாத அழிவைச் செய்யும் கூற்றுவன் போல முழங்கி, மிக்க வன்மையோடு போர்த்துறையில் வெற்றி கண்ட அரசே!.

    பொன்னோடை, பொன்னரி மாலை என அணி பல பூண்டு எழுகின்ற யானைகளின் பெரிய படையும், மழைமேகம் திரண்டு வந்தது போலத் தோன்றும் கரிய பெரிய கேடயங்களையும், வேலையும் வாளையும் ஏந்திய வீரரின் பெரும் படையும், நறுக்கிய பிடரி மயிர் கொண்ட குதிரைப் படையும் என்ற இம்மூன்றும் கொண்ட உனது சேனை பகைவரின் மதிலை நெருங்க வளைத்து மதிலின் புறத்தே தங்கி இருக்கும். அப்போது, நீர் மிகுந்து மதிலை மோதும் அலைகளை உடைய அகழியையும், மலைத்தொடர் போன்ற மதிலையும், பிறரை அழிக்கும் ஆற்றல் மிக்க பெரிய கையையும் உடைய அரசர் உன்னிடம் வந்து, வணங்கிய மொழிகளைக் கூறி உனக்குப் பணிந்து திறை செலுத்தினால், அந்தப் பகைவர் நாடு அழிவு அடையாது. மாறாக, கள் உண்டு மகிழும் வலிமையான கைகள் கொண்ட உழவர்கள், புல்நிறைந்த அகன்ற இடத்தில் ஆநிரைகளை மிகுதியாக மேய விடுவர். வயலின் கதிர்களிலிருந்து உதிர்ந்த, களத்தில் தூற்றப்படாத நெற்குவியலைக் காஞ்சி மரத்தின் அடியிலே சேரத் தொகுப்பர். கிடைத்தற்கரிய ஆம்பல் மலரைத் தலையில் சூடுவர். வண்டுகள் சிறகு விரித்துப் பறந்து அந்த ஆம்பல் மலர்களை மொய்க்கும். அவற்றை ஓட்டிப் பாடுவர். இவ்வாறு விரிந்த இடத்தையுடைய அந்தப் பகைவர் நாடுகள் மகிழ்ச்சிப் பாடல்கள் மிக்கனவாக ஆகும்.'' இவ்வாறு கபிலர் செல்வக் கடுங்கோவின் வீரத்தைப் புகழ்கிறார்.

    பாட்டின் துறை முதலியன

    இப்பாட்டின் துறை செந்துறைப் பாடாண்பாட்டு. விளக்கம் ஐந்தாம் பாட்டில் (5,3,2) காண்க. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் வரைபோல் இஞ்சி. வரைபோல் இஞ்சி என்னும் அழகிய தொடர். சேரனின் படைகளால் சூழப்பட்ட பெரிய கோட்டை மதிலை, கடலால் சூழப்பட்ட பெரிய மலைத்தொடர் போன்று காட்சிப் படுத்தும் ஓவியத் தொடராக உள்ளது அல்லவா? அதனால் இப்பாடல் இப்பெயர் பெறுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:44:38(இந்திய நேரம்)