Primary tabs
பாடம் - 3
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?புறநானூற்றில் இரண்டு பாடங்கள் முன்பு வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக அமைந்த மூன்றாவது பாடம் இது.
எட்டுப் பாடல்கள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.
1) அரசர்க்குரிய நீதி
2) குழந்தைப் பேற்றின் பெருமை
3) பிறர்க்குப் பொருளைக் கொடுத்து வாழ்தலில் உள்ள சிறப்பு
4) அமைதியான வாழ்க்கைக்கு வேண்டுவன
5) அவரவர் வினைகளே அவரவர் நிலைக்குக் காரணமாதல்
6) புகழ்பெற வாழ்ந்து இறத்தலே சிறப்புடையது.
7) போர்க்களத்தில் மார்பிற் புண்பட்டு இறத்தல் புகழுடையது
8) ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனை வீரனாக உருவாக்கும் பொறுப்புப் பலர்க்கும் உள்ளது
என்ற எட்டுச் செய்திகளை இப்பாடம் விவரிக்கின்றது.
இப்பாடத்தில் இடம் பெற்றுள்ள பாடல் எண்கள் 184, 188, 189, 191, 192, 214, 278, 312 ஆகியன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்னபயன் பெறலாம்?பழந்தமிழகத்தில் தவறு செய்யும் பெருவேந்தர்களையும் அஞ்சாது கண்டித்துரைக்கும் திறம் புலவர்க்கிருந்தது. கல்வி, புலமையின் சிறப்பை இதன் வழி அறியலாம்.
குழந்தைப் பேறு எவ்வகை இன்பம் தரவல்லது என்பதை ஓர் அருமையான பாட்டோவியத்திலிருந்து அறியலாம்.
பொருளைச் சேர்த்து வாழ்தலில் சிறப்பில்லை; பிறர்க்குக் கொடுத்து வாழ்தலிலேயே சிறப்புள்ளது என்ற நீதி அறியலாம்.
நம் வாழ்வின் ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் நம் செயல்களே காரணம் என்ற அறக்கருத்து பண்டைத் தமிழர் வாழ்வில் அழுத்தமாக இருந்தமை அறியலாம்.
குடும்ப அமைதியும் நாட்டின் அமைதியும் வாழ்வில் இறுக்கமற்ற மனச்சூழலையும் இளமை கொழிக்கும் உடல் நலத்தையும் அளிக்க வல்லன என அறியலாம்.