Primary tabs
3.3 வாழ்வின் பேருண்மைகளை விளக்கும் பாடல்கள் - II (192, 214)
மேற்கண்ட பாடல்களைப் போலவே வாழ்வின் பேருண்மைகளை விளக்கும் இரு பாடல்களை இங்குக் காணலாம். இவை என்ன கூறுகின்றன? இவை முறையே 1) உயிர் என்பது ஊழின் வழியே செல்வது; 2) புகழ் பெற வாழ்ந்து இறப்பது சிறப்புடையது என்ற உயர் நெறிகளைக் கூறுவனவாக அமைந்தன.
3.3.1 நூற்றுத் தொண்ணூற்று இரண்டாம் பாட்டு
பாட்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்குவது. இது பதின்மூன்றடிகளைக் கொண்டது. இதனை இயற்றிய புலவர் கணியன் பூங்குன்றனார்.
கணியர் என்பார் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்கால நிகழ்வுகளையும் கணித்துக் கூறும் சோதிட நூலாராவர். இக்கணியன் பூங்குன்றனார் சமண சமயத்தவரென்று சிலரும் ஆசீவக சமயத்தவரென்று சிலரும் கூறுவர். “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் உறவினர்; கேடும் நன்மையும் தாமே வரும். அவை பிறர் நமக்குத் தர வருவன அல்ல. அவற்றைப் போன்றே துன்பப்படுதலும் துன்பம் தீர்தலும் தாமே நிகழ்வனவாகும். இறப்பு என்பது இவ்வுலகிற்குப் புதியதன்று; அவ்விறப்பு உயிர் கருவில் தோன்றிய நாள் தொடங்கியே உள்ளது. வாழ்வதை இனியதென்று மகிழ்ந்ததும் இல்லை. அதனை வெறுத்துத் துன்பமானது என்றும் கருதவில்லை. மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்யும்; அது பெருகி அடங்காமல் கல்லை உருளச் செய்து ஒலிக்கும் வளமையான பேராறாக உருவெடுக்கும்.
அப்பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும் என அறிவுமிக்கவர் கண்டறிந்து கூறினர். அவ்வறிவைத் தெளிவாக அறிந்து கொண்டோம். ஆகவே பெருமை மிக்க பெரியோரை நாம் வியந்து போற்றுதலும் இல்லை; சிறியோரைப் பழித்தல் அப்போற்றுதலை விடவும் இல்லை” என்பது இப்பாட்டின் கருத்து.
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்.....(புணை = தெப்பம்; முறை = ஊழ், விதி)
என்பது ஊழின் (விதி) ஆற்றலை எடுத்துரைப்பதாகும். தத்தம் வினைகளாலேயே ஒருவர்க்கு நன்மை தீமைகள் வருமே அல்லாமல் பிறர் உண்டாக்க வருவன அல்ல என்பதால். உலகில் உள்ள எல்லாரையும் எமக்கு உறவினர் என்று கூறும் நிலை ஏற்பட்டது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாராஎன்பது ஊழின் மேற்கொண்ட நம்பிக்கையால் தோன்றிய பக்குவமுற்ற நெஞ்சின் வாழ்க்கைப் பார்வையாகும்.
3.3.2 இருநூற்றுப் பதினான்காம் பாட்டு
214ஆம் பாட்டு செய்குவம் கொல்லோ நல்வினை எனவே எனத் தொடங்குவது. இது பதின்மூன்று அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் கோப்பெருஞ்சோழன்.
கோப்பெருஞ்சோழன் சோழநாட்டு அரசன். தன் புதல்வர்களோடு கருத்து வேறுபட்ட நிலையில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர்விட முயன்றான். சான்றோர் பலரும் அவன் உயிரைப் போக்கிக் கொள்ளுதல் தகாது என்று கூறினர். அதற்கு மறுமொழியாகக் கூறப் பெற்றது இப்பாட்டு.
“நல்வினையைச் செய்வோமோ, மாட்டோமோ என்று எண்ணி ஐயம் கொள்பவர்கள் அழுக்குடைய காட்சி நீங்காத உள்ளத்தினை உடையோர் ஆவர்; அவர்கள் கருத்துத் தெளிவற்றவர்கள். யானை வேட்டைக்குச் செல்பவன் எளிதாக யானையைப் பெறக்கூடும்; ஆனால் குறும்பூழ்ப் பறவை (காடை) வேட்டைக்குச் செல்பவன் அது கிடைக்காமலும் திரும்பக் கூடும். அதனால் உயர்ந்த குறிக்கோள் உடையவர்களுக்குத் தாம் செய்த நல்வினைப் பயனை அனுபவிக்கும் பேறு கிடைக்குமாயின் அவர்களுக்கு வானுலக இன்பம் கிட்டும்; ஒருவேளை வானுலக இன்பம் கிடைக்காது போயினும் மறுபடி பிறந்து வரும் நிலைமை இல்லையாகும். மறுபடியும் பிறக்காவிடினும், இமயமலை போன்று உயர்ந்த தம்புகழை இவ்வுலகில் நிலை நிறுத்திக் குற்றமற்ற தம் உடம்போடு இறந்து படுதல் மிகச்சிறந்ததாகும். அது நல்வினைப் பயனால் விளைவது. எனவே நல்வினை செய்தல் தக்கது” என்பது பாட்டின் கருத்தாகும்.
வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் உயர்ந்த குறிக்கோள் வேண்டும். அதனை அடைய முடியாவிட்டாலும் குற்றமில்லை நல்வினை செய்தால் வானுலகப் பேற்றை எய்தலாம். அதனை எய்தா விட்டாலும் மறுபடிப் பிறவாமை கிடைக்கும். எனவே புகழோடு வாழ்ந்து இறந்துபடல் இனிது எனப் புகழ்மிக்க வாழ்க்கையை வாழத் தூண்டுகிறது இச் செய்யுள்.
யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ்
வேட்டுவன் வறுங்கையும் வருமேஎன உயர்ந்த குறிக்கோளோடு வாழ்தலை இப்பாட்டு வற்புறுத்தியது. பெரிய யானையைக் கருதிச் செல்லும் வேட்டையில் அது கிடைக்காவிட்டாலும் குற்றமில்லை. ஆனால் ஒரு காடையைப் பற்றி வருவேன் என்ற பெருநோக்கமில்லாத செயல் புகழ்தருவதன்று என்று கூறினார். யானை கிடைத்தாலும் கிடைத்துவிடக் கூடும்; காடைப் பறவை கிடைக்காமற் போனாலும் போகும். எனவே நோக்கம் உயர்ந்ததாக இருத்தல் நல்லது; முடிவைப் பற்றிக் கவலைப் படுதல் வேண்டா என்று அறிவுறுத்தினார்.
3.3.3 பாடல்களின் திணை, துறை விளக்கம்
192, 214 ஆகிய இரு பாடல்களும் பொதுவியல் திணைக்குரியன; பொருண்மொழிக் காஞ்சித் துறைக்குரியன. மாந்தர் அனைவர்க்கும் உரிய பொது அறங்களைக் கூறியமையின் இவை பொதுவியல் திணைக்குரியன. உயிர் விதி வழிப்பட்டது; நாம் அடையும் இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம் என்றும், புகழ் பெற வாழ்தலே தக்கது என்றும் சான்றோர் கண்ட பொருண்மைகளை இப்பாடல்கள் கூறுதலின் இவை பொருண்மொழிக் காஞ்சித் துறை பெற்றன.