Primary tabs
-
3.4 முதுபெண்டிர் வீரம் (278, 312)
பழந்தமிழ் நாட்டு மக்கள் புகழ் விருப்பம் உடையவர்கள். போரில் புறமுதுகு காட்டுவதை மானக் கேடாகக் கருதினர் அவர்கள். மார்பில் புண்பட்டுப் போர்க்களத்தில் இறப்பதே புகழ் மிக்க துறக்க உலகத்திற்குச் (வீட்டுலகம்) செலுத்துமென்றும் அவர்கள் எண்ணினர். அக்கால மறக்குடி மகளிர் வீரம் மிகவும் போற்றத் தக்கதாக அமைந்தது. கணவன், மகன் ஆகியோர் இயற்கைச் சாவு எய்துவதைவிடப் போர்ப்புண் ஏற்றுப் புகழோடு இறப்பதையே அவர்கள் விரும்பினர். அத்தகைய மறக்குடி மகளிரின் வீரம் பற்றி இரண்டு பாடல்கள் வழி அறியலாம்.
3.4.1 இருநூற்று எழுபத்தெட்டாம் பாட்டு
278ஆம் பாட்டு நரம்பு எழுந்து உலறிய எனத் தொடங்குவது; ஒன்பது அடிகளைக் கொண்டது. இது காக்கை பாடினியார் நச்செள்ளையாரால் பாடப் பெற்றது.
இப்பாட்டைப் பாடிய புலவரின் இயற்பெயர் நச்செள்ளை என்பது. இவர் பெண்பாற் புலவர். இவர் ‘விருந்து வருவதை அறிவிக்கும் வகையில் காக்கை கரைகிறது’ என்று பாடிய பாடல் குறுந்தொகையில் உள்ளது. காக்கையைப் பற்றிப் பாடியமையால் இவர் காக்கை பாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
“நரம்புகள் மேலே தோன்றுமாறு வற்றிய, வலிமையற்ற மெல்லிய தோளையும், தாமரை இலை போன்ற அடி வயிற்றையும் உடைய முதியவள் ஒருத்தியிடம் சென்று “உன் மகன் பகைவரின் படைக்கு அஞ்சி முதுகிட்டு மாண்டான்” என்றனர், உண்மை அறியாத பலர். அதற்கு அவள் “நெருங்கிய போரில் என் மகன் அஞ்சி முதுகிட்டிருப்பின் என்னிடத்து அவன் பால் உண்ட என் மார்புகளை அறுத்தெறிவேன்” என்று வஞ்சினம் கூறிக் கையில் கொண்ட வாளோடு களத்திற்குச் சென்றனள். அங்கு வாளினால் பிணங்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே வந்தவள் பிணங்களை மேலும் துழாவும்போது, குருதியால் சிவந்துபோன அப்போர்க்களத்தில் மார்பிற் புண்பட்டு உடல் சிதைந்து வெவ்வேறு பகுதியாகத் தன் மகன் கிடப்பதைக் கண்டு அவனைப் பெற்ற நாளில் அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்ந்தனள்” என்பது இப்பாட்டின் கருத்துரை.
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே(படுமகன் = வீழ்ந்த மகன் ; காணூஉ = கண்டு; ஞான்றினும் = பொழுதினும்)
என்று முதிய மறக்குல மங்கை அவன் இறந்த நாளைப் பிறந்த நாளை விட மகிழ்ச்சி கொள்ளும் நாளாகக் கருதுகின்றாள்.
திணை, துறை விளக்கம்
இப்பாட்டின் திணை தும்பை; துறை உவகைக் கலுழ்ச்சி. தும்பைத் திணை என்பது கடும்போர் நிகழ்வுகளைக் கூறும் திணையாகும்.
செங்களத்து மறம்கருதிப்
பைந்தும்பை தலைமலைந்தன்றுஎன்பர் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர். இப்பாட்டில் தாயின் மறவுணர்வும் மகனின் வீரமும் வெளிப்படுத்தப் பெற்றமையால் இது தும்பைத் திணை பெற்றது. இப்பாட்டின் துறையாகிய உவகைக் கலுழ்ச்சி என்பது மகிழ்ந்து கலங்குதல் என்னும் பொருளுடையது. மகன் வீரச் சாவு பெற்றமை குறித்து மகிழ்வும், தொடர்ந்து நாடு காக்க அவன் இல்லாமற் போயினானே என்றதால் உண்டான கலக்கமும் குறித்தமையால் இஃது உவகைக் கலுழ்ச்சியாயிற்று.
3.4.2 முந்நூற்றுப் பன்னிரண்டாம் பாட்டு
312ஆம் பாட்டு ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே எனத் தொடங்குவது; ஆறடிகளை உடையது, இப்பாட்டைப் பாடியவர் பொன்முடியார் என்னும் புலமகள்.
“பெற்றுப் பாதுகாத்தல் எனக்குரிய கடமையாகும்; தன் குலத்துக்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி அதற்குரிய தகுதிகள் ஆகியவற்றால் நிறைவுடையவனாகச் செய்தல் தந்தைக்குரிய கடமையாகும்; போர் செய்வதற்குரிய படைக்கலத்தைத் திருத்தமாகச் செய்து கொடுத்தல் கொல்லனுக்குரிய கடமையாகும்; நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமையாகும்; ஒளிவிடுகின்ற வாளைக் கையில் ஏந்திச் சென்று போர் புரிதற்கேற்ற களத்தில் பகைவரோடு மாறுபட்டுக் களிற்று யானையைக் கொன்று வெற்றியோடு மீளுதல் காளையாகிய வீர மகனுக்குரிய கடமையாகும்” என்பது பாட்டின் கருத்துரை.
'என் தலைக்கடனே' எனத் தாய் கூறுமாறு பாடியுள்ளமையால் இப்பாட்டை இயற்றிய பொன்முடியார் பெண்பாற் புலவர் என்பது அறியப்படும். போர்ப்பயிற்சி அளித்தல் தந்தையின் கடமையாகும். நன்னடை என்பதற்கு மாறாகச் சிலர் தண்ணடை என்று கொண்டு வீரர்களுக்குக் குளிர்ந்த நிலங்களை (தண்ணடை) வழங்குதல் வேந்தனின் கடமையென்பர். ‘ஒளிரு’ என இடம்பெற வேண்டிய சொல் பின்னர் வரும் ‘களிறு’ என்பதற்கேற்ப ‘ஒளிறு’ எனத் திரிந்தது. இங்குச் ‘சான்றோன்’ என்ற சொல்லுக்குப் போர்வீரன் என்பது பொருள்.
312 ஆம் பாட்டுக்குரிய திணை வாகை. துறை மூதின் முல்லை. வாகைத்திணை என்பது ஒரு படையின் வெற்றியைக் கூறுவது. அலைகடல் போன்ற தானை வாகைப் பூவைச் சூடி ஆரவாரித்து வெற்றியைக் கொண்டாடுதலை வாகைத்திணை மொழியும். வீரன் களிற்று யானையை வென்று வருதல் பற்றிக் கூறினமையின் இப்பாட்டு வாகைத்திணைக்கு உரியதாயிற்று. மூதின் முல்லைத் துறை என்பது மறக்குடியில் ஆடவரைப் போலவே மகளிர்க்கும் வீரமுண்டு என்பதைக் காட்டுவதாகும். மகனின் போர்க் கடமையைத் தாய் பெருமையுடன் பேசுவதால் இப்பாட்டு மூதின் முல்லையாயிற்று (மூதில் = முதுமை+இல் = பழங்குடி).