தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-நூற்று எண்பத்து நான்காம் பாட்டு

  • 3.1 நூற்று எண்பத்து நான்காம் பாட்டு

    இப்பாடல் பதினோரடிகளைக் கொண்டது. பாட்டை முழுமையாக நூலகப் பகுதியிலிருந்து அறியலாம். இனி, பாட்டின் கருத்து வருமாறு:

    “காய்ந்த நெல்லை அறுத்து ஒவ்வொரு கவளமாகக் கொடுத்தால், ஒரு மாவை விடக் குறைந்த நிலத்தில் விளையும் நெல்கூட யானைக்குப் பல நாள் உணவாக ஆகும். ஆனால் நூறு வயல்களாக இருந்தாலும் யானை அவ்வயல்களில் தானே புகுந்து தனித்துண்ண முற்படுமானால், அந்த யானையின் வாயில் புகக்கூடிய நெல்லைவிடக் காலால் மிதிபட்டு அழிவது அதிகமாகும். இது போலவே அறிவுடைய அரசன் குடிமக்களிடமிருந்து வரித்தொகையை வாங்கும் வழியறிந்து செயல்பட்டால் அவன் நாடு கோடிப் பொருளை உண்டாக்கிக் கொடுப்பதோடு தானும் வளமடையும். அவ்வாறு செய்யாமல் அரசன் அறிவற்றவனாகி நாள்தோறும் அவனுக்கு வேண்டும் உறுதிப் பொருளைக் கூறாமல் அவன் விரும்பும் செய்திகளையே கூறும் ஆரவாரமான சுற்றத்தோடு கூடி அன்பு இல்லாமல் கொள்ளும் பொருளை விரும்பினால் அவனுக்கும் பயனில்லை; உலகமும் கெடும்.”

    இப்பாட்டு எந்தச் சூழலில் தோன்றியது தெரியுமா? பாண்டி நாட்டினை அறிவுடை நம்பி என்ற அரசன் ஆண்டு கொண்டிருந்தான். இவ்வரசன் நல்ல புலவனுமாவான். இவன் பாடிய பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இவ்வரசன் தன் அதிகாரிகள் கூறியனவற்றை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு மக்களிடம் அளவின்றி வரித்தொகையைப் பெறுமாறு ஏவினான். மக்கள் அல்லல் உற்றனர். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு மனித நேயம் மிக்க புலவர் அமைதியாக இருக்க முடியுமா? அந்நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையார் அரசனிடம் சென்றார் அஞ்சாமல் அவனுடைய செயல் தவறானது என அறிவுறுத்தினார்.

    சிறிய அளவு நிலத்தில் விளையும் நெல்லைச் சோறாக்கி உருண்டை உருண்டையாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாள் உணவாக ஆகும். ஆனால் யானையே வயலில் புகுந்தால் உண்பதை விட மிதிபட்டு அழிவதே மிகுதியாகும் இது உவமை. அரசன் மக்களை ஒரே சமயத்தில் அலைத்து வரி வாங்குவதை விட நிலம் விளையும் போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது முறையானது இது உவமேயம். பழைய நிலவரிக் கடனை ஒரே சமயத்தில் பெற அரசனுடைய அதிகாரிகள் முனைந்தபோது இப்பாட்டுப் பிறந்ததென்பர் அறிஞர்.

    3.1.1 செவியறிவுறுத்தல்

    அறவோர் மற்றவர்களுக்கு நல்ல நெறிகளைக் கற்பித்து அவற்றின் வழி நடக்க அறிவுறுத்துவர். இவ்வாறு செய்யும் செயல் செவியறிவுறுத்தல் எனப்படும். “அன்பும் அறமும் மறவாது போற்றுக” என்றும், “கொள்கை மிக்க சான்றோர் கூறும் வழியில் நடக்க” எனவும், “ஞாயிறு போன்ற வீரத் திறமையும், திங்களைப் போலக் குளிர்ந்த நோக்கமும் கொண்டு வறுமைப்பட்டோர்க்கு உதவி வாழ்க” எனவும், “உலகம் நிலையாதது என்பதை உணர்ந்து, நிலையான அறச்செயல்களைப் பேணுக” எனவும் கூறுதல் செவியறிவுறுத்தல் எனப்படும்.

    3.1.2 பாட்டின் திணை துறை விளக்கம்

    இப்பாட்டின் திணை பாடாண்; துறை செவியறிவுறூஉ. பாடாண் என்பது பாடப்பெறும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறும் திணை என்பதை நீங்கள் அறிவீர்கள். செவியறிவுறுத்தல் என்பது இங்குச் செவியறிவுறூஉ எனப் பெற்றது. இது துறையின் பெயர்.

    “அரசனே! நெறியறிந்து வரி கொண்டால் நீ போற்றப் பெறுவாய். எனவே நன்னெறியைப் பின்பற்றி வாழ்க என்று கூறும் இப்பாட்டில், அரசன் ஒழுக வேண்டிய நெறியைக் கூறியமையால் இப்பாட்டுப் பாடாண் திணைக்குரியதாயிற்று.

    “அரசனே! அறிவுடைய அரசன் வரி பெறும்போது குடிகள் துன்புறா வண்ணம் வரித்தண்டுதல் நிகழும். ஆனால், உன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் தவறான அறிவுரைகளுக்கு ஆட்பட்டுச் செயல்பட்டால் உனக்கும் பயனில்லை, நாடும் கெடும்” என்று அறிவுறுத்தியமையால் இது செவியறிவுறூஉத் துறைக்குரியதாயிற்று.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:40:28(இந்திய நேரம்)