Primary tabs
-
3.2 வாழ்வின் பேருண்மைகளை விளக்கும் பாடல்கள்- I (188, 189, 191)
இப்பகுதியில் பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் மக்களின் வாழ்க்கைக்குரிய மூன்று பேருண்மைகளை அழகுற எடுத்துக் கூறுவதை நாம் காணலாம். இப் பாடல்கள் முறையே வாழ்க்கையின் நிறைவுக்குக் குழந்தைப்பேறு மிகவும் இன்றியமையாதது (188); செல்வத்தின் பயன் இல்லாதவர்க்குக் கொடுத்தலேயாகும் (189); குடும்பத்தினரும் ஊராரும், அரசனும் நல்லவராக உள்ள சூழலில் வாழ்க்கை இனியதாகும்; உடற்கூறு கூடக் கெடாத நலம் உடையதாகும் (191) என்ற உண்மைகளை எடுத்துரைக்கின்றன.
3.2.1 நூற்று எண்பத்து எட்டாம் பாட்டு
படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும் என்று தொடங்குவது இப்பாட்டு. ஏழடிகளைக் கொண்டது. இப்பாட்டு பாண்டியன் அறிவுடை நம்பியால் பாடப் பெற்றது. “படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் கொண்டு, பலரோடு சேர்ந்து உண்ணத் தக்க நிரம்பிய செல்வத்தை உடையவராயினும், மெல்லவும், குறுகக் குறுகவும் நடந்து சென்று தம் சிறிய கையை நீட்டி உணவு உள்ள கலத்தில் உள்ளதைத் தரையிலே எடுத்துப் போட்டும், கையை விட்டுத் தோண்டியும், வாயால் கவ்வியும், கையால் துழாவியும் நெய்யை உடைய சோற்றை உடம்பெங்கும் சிதறிக் கொள்ளும் குழந்தைகளைப் பெறாத நிலை பயனற்றது. அச்சிறுவர்கள் தம் இன்பமான செயல்களால் நம் அறிவை மயக்குவர். அத்தகைய புதல்வரைப் பெறாவிட்டால் நாம் உயிர் வாழும் நாளில் நம் வாழ்க்கைப் பயன் என்று கூறுதற்குரிய பொருள் இல்லையாகும்” என்பது இப்பாடலின் பொருள். பலரோடு சேர்ந்து உண்டாலும் குழந்தைகளோடு சேர்ந்து உண்ணும் இன்பம் தனியானது. அக்குழந்தைகள் சோற்றைப் பிசைந்து, துழாவி, சிதறி, உடம்பெல்லாம் பூசிக்கொண்டாலும், பெற்றோர்க்கு அக்காட்சி இன்பமே உண்டாக்கும். அதனால் ‘மயக்குறு மக்கள்’ என்று பாடினார் அரசப் புலவர் அறிவுடை நம்பி.
3.2.2 நூற்று எண்பத்து ஒன்பதாம் பாட்டு
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி எனத் தொடங்குவது இப்பாட்டு. எட்டடிகளைக் கொண்ட இதனைப் பாடிய புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார்.
“தெளிந்த நீரால் சூழப்பட்டது இவ்வுலகம். இதனைப் பிறவேந்தர்க்கு உரிமையின்றித் தமக்கே உரியதாகக் கொண்டு வெண்கொற்றக் குடையால் ஆட்சியாகிய நிழல் செய்யக் கூடிய தன்மை உடைய பெருவேந்தர் இருப்பர்; அவர்கள் அல்லாமல் நடு இரவிலும், கடும்பகலிலும் தூங்காமல் விரைந்து செல்லக் கூடிய ஆடுமாடு போலும் விலங்குகளைப் பாதுகாக்கும் கல்வியறிவற்றவனான நிரை மேய்ப்பனும் உள்ளான். இவ்விரு வகைப்பட்ட மனிதர்க்கும் உண்ணப்படும் உணவு ஒருநாழி அளவினதே ஆகும். உடுக்கப்படும் உடைகளும் மேல், கீழ் என இரண்டேயாகும். எனவே செல்வத்தாற் பெறும் பயனாவது பிறர்க்கு ஈதலேயாகும். நாமே அனுபவிப்போம் என்று ஒருவர் கருதினால் அவரால் அனுபவிக்க முடியாதவாறு தவறுவன பலவாகும்” என்பது இப்பாட்டின் பொருள்.
அரசர்க்கும் ஆனிரை மேய்ப்பார்க்கும் உண்பனவும் உடுப்பனவும் ஒரு தன்மையனவேயாகும். நாழி அளவே ஒருவர் உண்ணலாம்; இரண்டு ஆடைகளையே உடுக்கலாம். பசி போக்க நாழி அளவு உணவு, மானம் காக்க இரண்டு ஆடைகள் இவைகளே ஒருவர்க்குரியன. இவற்றுக்கு மேலிருப்பனவற்றைப் பிறர்க்குக் கொடுப்பதே வாழ்வின் பயன். இவ்வாறு நக்கீரர் அறிவுறுத்துகின்றார்.
3.2.3 நூற்றுத் தொண்ணூற்று ஒன்றாம் பாட்டு
பாட்டு யாண்டு பலவாக எனத் தொடங்குவது. இப்பாட்டு ஏழடிகளைக் கொண்டது. இப்பாட்டைப் பாடிய புலவர் பிசிராந்தையார்.
பிசிராந்தையாரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவர் பாண்டி நாட்டுப் புலவர். இவர் சோழ நாட்டரசன் கோப்பெருஞ்சோழனைக் காணாமலே நட்புக் கொண்டவர்.
கோப்பெருஞ்சோழன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கும் அவனுடைய புதல்வர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. சோழன் மனம் கொதித்தான். தன் புதல்வர் இருவரையும் போரில் சந்திக்கத் துணிந்தான். அந்த நேரத்தில் புல்லாற்றூர் எயிற்றியனார் என்ற புலவர் சோழனைப் பார்த்து “இஃது உனக்குப் புகழ் தரும் போர் ஆகாது; இதனைவிட்டு மேல் உலகம் உன்னை விரும்பிக் கொள்வதற்குரிய செயலைச் செய்க” என்று அறிவுறுத்தினார். சோழன் உண்ணா நோன்பிருந்து உயிர்விட முனைந்தான். அப்போது அவன் தன் உடனிருந்த சான்றோரிடம் “பிசிராந்தை என்னைத் தேடி வருவான். நான் இறந்தபின் வரப்போகும் அவனுக்கு எனக்குப் பக்கத்தே இறக்க இடம் தருக” என்று கூறி உயிர் நீத்தான். சோழன் கூறியவாறே ஆந்தையார் வந்தார். அவரைக் கண்டு சான்றோர் வியப்படைந்தனர். அவருடைய இளமைத் தோற்றம் அவர்களை வியக்க வைத்தது. “பல ஆண்டுகளாக உங்களைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கின்றோம். அதற்கு மாறாக இளமையான தோற்றம் உடையவராய் இருக்கின்றீர்களே” என அவர்கள் கேட்டதற்கு விடையாகப் பிசிராந்தையார் கூறியதே இந்தப் பாட்டு,
“உங்களுக்குச் சென்ற ஆண்டுகள் பலவாக இருக்கவும், உங்களுக்கு நரையில்லையே அது எப்படி என நீங்கள் கேட்பீராயின் கூறுவேன். என் மனைவி மாட்சிமைப்பட்ட பண்புகளை உடையவள்; அவளோடு என் மக்களும் அறிவு நிரம்பியவர்கள். எனக்கு ஏவலர்களாக அமைந்தவர்கள் நான் கருதியதையே செய்பவர்கள். என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன். இவற்றுக்கும் மேலாக, நற்குணங்கள் நிரம்பிய, அடக்கம் உடையவராய், ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழும் நல்ல நெறியுடைய சான்றோர் பலர் என் ஊரில் உள்ளனர்” என்பது இப்பாட்டின் கருத்து.
வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது போல் ஏவலர் குறிப்பறிந்து நடப்பவர். எனவே வீட்டில் சிக்கல் இல்லை. அக அமைதி கூடிற்று. புறத்தேயும் அரசன் நல்லவன், ஊரார் சான்றோர். புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை என்பது பாட்டின் தெளி பொருள்.
3.2.4 பாடல்களின் திணை, துறை விளக்கம்
188, 189, 191 ஆகிய மூன்று பாடல்களுக்கும் திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
மாந்தர் அனைவர்க்கும் பொதுவாகிய மகப்பேற்றுச் செல்வம், ஈத்துவக்கும் இன்பம், வாழ்க்கையின் இனிய சூழல் ஆகியன பற்றிக் கூறுவதால் இம்மூன்று பாடல்களும் பொதுவியல் என்ற திணைக்கு உரியன ஆயின. இது வெட்சி முதலாகப் பாடாண் ஈறான திணைக்குரிய செய்திகளை ஒழித்த பொதுச் செய்திகளைக் கூறும் திணையாகும்.
சான்றோர் தம் வாழ்வில் உண்மை எனக் கண்டு உணர்ந்து அனுபவித்த மெய்ப் பொருளைக் கூறுவது பொருண்மொழிக் காஞ்சித் துறையாகும். மகப்பேறற்ற வாழ்க்கை நிறைவுடைய தன்று, செல்வத்துப் பயனே ஈதல், வீடும் நாடும் இனிய எனின் வாழ்க்கை இனிதே என்ற மெய்ப்பொருள்களைக் கூறுவதால் இப்பாடல்கள் பொருண்மொழிக் காஞ்சித் துறைக்குரியன.