Primary tabs
4.7 வீரர்களின் நிலை
தனிப்பட்ட வீரர்களின் மனநிலையை விளக்கும் துறைகளும் உண்டு. அவற்றை இனிப் பார்ப்போம்.
ஒரு தனி நிலை - ஓர் ஒப்பற்ற நிலைமை. வீரன் ஒருவன், தனக்கு நிகர் தானே என்னும்படி பகைப் படையொடு போரிடுவது ஆதலின், ஒரு தனி நிலை எனப் பெற்றது.
- கொளுப் பொருளும் கொளுவும்
போரில் வஞ்சி மறவன் ஒருவன், விசையொடு பெருகி வரும் கடும்புனலைக் கல்லால் கட்டிய அணை தடுத்து நிறுத்துமாறு போலத் தன்மேல் விரைந்து பெருமளவில் வரும் பகைமறவரைத் தான் ஒருவனாக நின்று தடுத்த நிலைமையைச் சொல்வது ஒரு தனி நிலை என்னும் துறையாம்.
பொருபடையுள் கற்சிறைபோன்று
ஒருவன்தாங்கிய நிலையுரைத்தன்று- எடுத்துக்காட்டு வெண்பா
வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாமால் இந்நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார்
பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம்- இதன் கருத்து
கடுகிவரும் வெள்ளத்தைத் தாங்கும் கற்சிறை போலப் பகை மறவர் வெள்ளத்தைத் தாங்கியவன், முன்னம் இருந்த இடம், மறத்தியின் வயிறாகிய சிறிய இடம் ஆம். வயிற்றின் சிறுமையும் வீரனின் பெருமையும் சேர்த்தே எண்ணியதாக இப்பாடல் அமைகிறது.
தழிஞ்சி - தழுவுதல். இங்குத் தழுவுதல் என்பது உடலையன்று ; வீரம் தவறாத மானத்தைத் தழுவுதல் காரணமாகப் பெற்ற பெயர் தழிஞ்சி யாம்.
- கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சியாரின் போர்ச் செயலுக்கு ஆற்றாது பகை மறவர் முதுகிடும் போது, அவர்மேல் கூரிய வாளினை எறிதல் வீறு அன்று என்ற மறப்பண்பை விரும்பி உரைப்பது தழிஞ்சி என்னும் துறையாம்.
அழிகுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறு கண்மை காதலித்து உரைத்தன்று(அழிகுநர் = போரில் தோற்று ஓடுவோர்)
- எடுத்துக்காட்டு வெண்பா
கான்படு தீயின் கலவார்தன் மேல்வரினும்
தான்படை தீண்டாத் தறுகண்ணன் - வான்படர்தல்
கண்ணியபின் அன்றிக் கறுத்தார் மறம்தொலைதல்
எண்ணியபின் போக்குமோ எஃகு- எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
காட்டின்கண் தோன்றும் நெருப்பு விரைந்து பரவுவதாகும். இந்நெருப்பைப் போல் பகைவர் தன்மேல் மீதூர்ந்து வந்த இடத்தும், போர் செய்து மாள்வதனால் விண்ணுலகம் எய்த வேண்டும் என்று துணிந்த இடத்தும் அல்லாமல், தன்னுடைய படையைத் தொடாத மறப்பண்புடைய வஞ்சி மறவன், வெகுண்டு போரிட்ட பகைமறவர் ஆற்றாது முதுகிட்டு ஓடுவதை எண்ணிய பின்னரும் அவர்மேல் தனது எஃகத்தைப் (வாளினைப்) போக்குவானோ? போக்கான்.