தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சினம்ஆறாத வஞ்சி வேந்தன்

  • 4.8 சினம் ஆறாத வஞ்சி வேந்தன்

    பாசறையில் தங்கியுள்ள மன்னன் செயற்பாடுகள் பற்றிய செய்திகள் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

    4.8.1 பாசறை நிலை

    பகைவரைப் பணிவித்த பின்னரும் வஞ்சி வேந்தன் பாசறைக்கண் இருந்த தன்மையை உரைப்பது பாசறை நிலை. பாசறையின் தன்மையை உரைப்பது குறுவஞ்சி ; பாசறையின் கண் இருந்த வேந்தனின் தன்மையை உரைப்பது பாசறை நிலை.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    வஞ்சி வேந்தன், தன் பகைவேந்தர் எல்லாரும் தனது வெண் கொற்றக் குடைக்குக் கீழே அடங்கித் தமது இகல் (பகை) துறந்து நின்ற போதும், தன்னுடைய நகரத்திற்குப் பெயராதவனாய்ப் பாசறையில் தங்கியதைச் சொல்வது பாசறை நிலையாம்.

    மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லாம் மறம்துறப்பவும்
    பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை இருந்தன்று
    • வெண்பாவின் கருத்து

    பகைவரது வீரத்தைச் சாய்த்து, வயல், விளைநிலம் ஆகியவற்றை எரித்து, நீர்நிலைகளைக் கெடுத்து வென்ற வஞ்சியான் ஊர்க்கு மீளாமல், பாசறையில் தங்கியுள்ளான். இன்னும் எவற்றை எல்லாம் அழிப்பதற்காக?

    4.8.2 பெரு வஞ்சி

    முன்னர் இல்லங்களை எரியூட்டி மயிலன்னாரை மன்றம்படரச் (மகளிரை வெளியிடம் செல்லுமாறு) செய்த வஞ்சி வேந்தன், பின்னரும் வளங்களைக் கவர்ந்தான் ; வயல்களில் எரியூட்டினான் ; நீர்நிலைகளை அழித்தான் ; திறைப்பொருளை யேற்றான் ; இவ்வளவும் நடந்தும் பாசறையினின்றும் ஊர்க்குப் பெயராதவனாய் ஆறாப் பெருஞ்சினத்தால் மீளவும் எரியூட்டுகின்றான். அவன் கொண்ட பெருஞ்சினம் பற்றி இத்துறை பெருவஞ்சி எனப் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    ‘நீயே புகல்’ என்று சொல்லிப் புகாத பகைவரது வளமிக்க நாட்டை வஞ்சி வேந்தன் முன்னர் ஒருமுறை எரியூட்டியதோடு அமையாமல் இரண்டாவதாகவும் சினந்து கொளுத்தியதை மொழிவது பெருவஞ்சியாகும்.

    முன்அடையார் வளநாட்டைப்
    பின்னரும்உடன்று எரிகொளீஇயன்று
    • வெண்பாவின் கருத்து

    பகை மன்னர் அஞ்சும் வண்ணம், வஞ்சி வேந்தன் அவர்களது நாடு முழுமையும் நெருப்புக்கு உள்ளாக்கினான்.

    4.8.3 பெருஞ்சோற்று நிலை

    பெருமை+சோறு+நிலை = பெருஞ்சோற்று நிலை. சோற்றின் பெருமை, வரிசை (தகுதி) அறிந்தும் முகமன் கூறியும் வழங்கும் மன்னவனால் வருவதாகும். படைஞருடன் கூடி, மன்னன் அவரவர்க்கென வைத்த உணவை உடனிருந்து உண்பான். மறவர்க்கு மன்னன் செய்யும் இச்சிறப்புப் பற்றிப் பெருஞ்சோற்று நிலை எனப்பட்டது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    பகைப்புலத்தை இம்மறவர்கள் அழித்துத் தருவர் எனப் பாராட்டி, அம்மறவர்களுக்கு உருட்டி வைத்த சோற்றை வஞ்சி வேந்தன், அவர்கள் பெற வேண்டிய வரிசை முறைமையின் கொடுப்பது, பெருஞ்சோற்று நிலையாம்.

    திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப்
    பெருஞ்சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று.
    • எடுத்துக்காட்டு வெண்பா
    இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்
    குயவரி வேங்கை அனைய - வயவர்
    பெறுமுறையான் பிண்டம்கோள் ஏவினான் பேணார்
    இறும் முறையால் எண்ணி இறை.
    • எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்

    வஞ்சி வேந்தன், பகைவர்கள் அழியும் வகையை எண்ணி, இசைக் கருவிகளை இயக்குவோர் புகழும்படியும், கொட்டுகின்ற முரசு ஆரவாரிக்கும்படியும், வரிகளையுடைய புலியைப் போன்ற வஞ்சி மறவர்கள் பெறத்தகும் முறைப்படியே பெருஞ்சோறு பெறுமாறு பணித்தான்.

    4.8.4 நல்லிசை வஞ்சி

    வஞ்சி வேந்தனின் நல்ல வென்றிப் புகழைச் சிறப்பித்தலின் நல்லிசை வஞ்சி எனப் பெற்றது. (வென்றி = வெற்றி)

    • கொளுப் பொருளும் கொளுவும்

    பகைமன்னருடைய வேற்றுப்புலம் கெடும்படி வெற்றி தங்கிய வேலினைக் கொண்ட வஞ்சி வேந்தனின் வெற்றியை மிகுதியும் சிறப்பிப்பது, நல்லிசை வஞ்சி என்னும் துறையின் பொருளாம்.

    ஒன்னாதார் முனைகெடஇறுத்த
    வென்வேல்ஆடவன் விறல்மிகுத்தன்று
    • வெண்பாவின் கருத்து

    மேன்மேலும் பெருகும் படையைக் கொண்ட வஞ்சி வேந்தனுக்குப் பகைவர் நாட்டை அழித்த பின்னரும், அசைந்தெரியும் தீயைப் போலச் சினம் மிகுகின்றது, மீளவும் அவர்கள் மேல் போரிடுவதற்காக.

    • இதுவும்அது (நல்லிசை வஞ்சி)

    வென்றவரது வீரத்தைப் புகழ்வது ஒருவகைப் புகழ்ச்சி. இம்மன்னனால் பகைவர் அழிந்துபட்டமை கூறி அவர்தம் அழிவுக்கு இரங்குவதும் ஒருவகையால் புகழ்ச்சியே. பகைவர்நாடு அழிந்தமைக்கு இரங்குவதிலும் வென்ற வேந்தின் புகழ் உறைவதால் இரங்குவதும் நல்லிசை வஞ்சி எனப் பெறுகின்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    வஞ்சி மன்னன் படையோடு சென்று பகைவர் நாட்டின்கண் தங்கிய பின்னர், அவனை நேர்முகமாகப் புகழ்வதை விட்டு, அவனால் வெல்லப்பட்ட பகைவரின் நாடு கெட்டமைக்கு வருந்துதலைக் கூறினாலும், வெளிப்படுவது வஞ்சி வேந்தனின் நல்லிசையே. ஆதலின் அழிவுக்கு இரங்கலும் நல்லிசை வஞ்சியே ஆகும்.

    இறுத்தபின் அழிபுஇரங்கல்
    மறுத்துரைப்பினும் அத்துறையாகும்.
    • எடுத்துக்காட்டு வெண்பா
    குரைஅழல் மண்டிய கோடுஉயர் மாடம்
    சுரையொடுபேய்ப் பீர்க்கும் சுமந்த - நிரைதிண்தேர்ப்
    பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றுஇறுப்ப
    நல்லிசை கொண்டுஅடையார் நாடு.
    • வெண்பாவின் கருத்து

    தேரும் புகழும் படையும் உடைய வஞ்சியரசன் பாடி வீட்டில் தங்கிய அளவில், பகைவர் நாட்டில் மலைபோல் உயர்ந்த மாடங்கள் அழிக்கப் பெற்றமையால், அவ்விடத்தே சுரை, பீர்க்கு முதலியன முளைத்தன.

    அடையார் (பகைவர்) நாட்டு மாடங்கள் சுரையும் பீர்க்கும் சுமந்தன என அவற்றின் அழிவுக்கு இரங்கும் வகையில், வென்ற மன்னனைப் புகழும் மறைமுகப் புகழ்ச்சி தென்படுவதால் துறைக் கருத்துப் புலனாகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 17:05:03(இந்திய நேரம்)