தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    அன்பார்ந்த மாணாக்கர்களே! சென்ற முதற்பாடத்தில், இலக்கணங்கள் காலந்தொறும் பாகுபட்டு மூன்று வகை என்றதுபோய் ஆறு வகை என்றாயின; தொல்காப்பியருக்கு முன்னரும் செய்யுள் இலக்கண நூல்கள் இருந்துள்ளன; தொல்காப்பியர் தம் காலத்தில் செய்யுள் இலக்கணத்தைப் பொருளதிகாரத்துள் ஓர் இயலாக வைத்தார்; அவர் காலத்திற்குப் பின் அது யாப்பிலக்கணம் என்று நான்காவது வகை இலக்கணமாகியது; செய்யுள் குறித்த இலக்கண நூல்கள் பின்னரும் பல எழுந்தன; எழுந்த அந்தப் பல நூல்களுள்ளும் பெரிதும் இன்று வகை பயன்பாட்டில் இருந்து வருவன அமிதசாசரர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இவ்விரண்டு நூல்களுமே; இவற்றுள்ளும் யாப்பருங்கலக் காரிகை சிறந்த இடத்தைப் பெற்றுத் தமிழ் மாணாக்கர் எல்லாராலும் படிக்கப் பெறும் நூலாக விளங்குகின்றது; இக்காரிகை நூல் பாயிரப்பகுதியோடு உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது; உறுப்பியல், செய்யுள் உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறனைப் பற்றிய இலக்கணத்தைச் செப்புகின்றது என்னும் செய்திகளைப் படித்து முடித்தீர்கள். இந்த இரண்டாம் பாடத்தில், முதலாவது உறுப்பாகிய எழுத்துப் பற்றிய செய்திகளைப் படிக்க இருக்கின்றீர்கள்.

    மொழியின் தோற்றம் குறித்து ஆராய்ந்த மொழியியல் அறிஞர் சிலர், கருதுகோள்களின் அடிப்படையில் மொழித்தோற்றக் கோட்பாடுகள் சிலவற்றை முன்வைத்துள்ளனர். இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே சொற்கள் எல்லாமும் தோன்றின என்று கூறிவிட முடியாது; இக்கோட்பாடுகளிலும் சொற்கள் பல தோன்றியிருக்கலாம்; அவ்வளவே.

    உடம்பை இடமாகக் கொண்டு பத்து வகைக் காற்றுகள் உள்ளன. இவற்றுள் ஒன்று, உதானன் என்னும் காற்று. இஃது உந்தியை இடமாகக் கொண்டு பிறப்பதாகும். இதனையே தொல்காப்பியர், ‘உந்தி முதலா முந்துவளி தோன்றி’ என்னும் தொடரில் சுட்டுகின்றார் எனக் கொள்ளலாம். (எழுத்து. பிறப்பியல்) 1) இக்காற்று, உரம் (நெஞ்சு) முதலிய பல இடங்களில் நிலைக்கின்றது; நிலைத்துப்பின், வெளியே வரும் போது பல், நா, அண்ணம், இதழ் முதலான எட்டு உறுப்புகளின் தொழிற்பாட்டில் எழுத்தோசை ஆகின்றது. அஃதாவது, அவ்வெழுத்தோசையே மொழிக்கு முதற்காரணமாவதாம். இதனையே ‘மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலியெழுத்து’ என்கின்றார், நன்னூலார். ‘ஒலியெழுத்து’ என்றவுடன், இதனின் வேறாகிய ‘வரிஎழுத்து’ என்று ஒன்றுள்ளமை உங்களுக்குப் புலனாகின்றது அல்லவா? ஆகவே, எழுத்து, ஒலிவடிவம் வரிவடிவம் என இரண்டு வடிவங்களை உடையது என்பதும் தெரிய வரும். ஒலி வடிவம் முன்னது; வரிவடிவம் பின்னது.

    செய்யுளின் அடிக்கு உறுப்பு சீர்; சீர்க்கு உறுப்பு அசை; அசைக்கு உறுப்பு எழுத்து. அசைக்கு உறுப்பாகும் எழுத்துகளைத்தாம், நாம், இங்குப் படிக்க இருக்கின்றோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 10:49:53(இந்திய நேரம்)