Primary tabs
2.2 அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்
தமிழ் எழுத்துகள் எல்லாமும் உயிர் - மெய் - ஆய்தம்- உயிர்மெய் என்னும் நான்கு வகைக்குள் அடங்கும்.
யாப்பு இலக்கணப்படி ஓசையூட்டி அசை காண்பதற்குக் குறில், நெடில், ஒற்று (மெய்) என்ற பகுப்புத் தேவைப்படுகின்றது.
காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரும் வெண்பாவின் இறுதிச்சீர், குற்றியலுகர எழுத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
குற்றியலிகரம் குற்றியலுகரம் முதலியன இவ்விடத்து அலகு பெறும்; இவ்விடத்து அலகு பெறா; என்று எடுத்தோதுவதற்குச் ‘சிறிய இ உ அளபு’ (ஒழிபு - 1) (அதாவது, குற்றியலுகரம், குற்றியலிகரம்) என்னும் பகுப்புத் தேவை.
இவ்வாறே, வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்றனோடும் தூங்கிசை முதலிய ஐந்தும் உறழ்ந்து பல வண்ணங்கள் உருவாகும் என்று சொல்லும்போது, மெய் என்று கூறுவது மட்டும் போதாது.
இவையும் இவைபோன்ற காரணங்கள் பிறவும் மனத்தில் கொண்டு, ‘அசை’ என்னும் செய்யுள் உறுப்புக்குரிய எழுத்துகளை யாப்பிலக்கண நூலார் பதினாறு வகை, பதினைந்து வகை, பதின்மூன்று வகையென வேண்டியவாறு கொண்டுள்ளனர்.
தொல்காப்பியர் பதினைந்து வகைகளைக் கொண்டார். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் பதினாறு வகைகளைக் கொண்டார். அமிதசாகரர் தாமியற்றிய ‘யாப்பருங்கலம்’ என்ற நூலில் பதினைந்து வகைகளைக் கொண்டார். இவரே, தமது ‘யாப்பருங்கலக் காரிகையில் பதின்மூன்று வகையெனக் கொண்டுள்ளார். அவை,
- குறில்
- நெடில்
- உயிர்
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஆய்தம்
- மெய்
- வல்லினமெய்
- மெல்லினமெய்
- இடையினமெய்
- உயிர்மெய்
- அளபெடை
என்பனவாம்.
அன்பார்ந்த நண்பர்களே! இப்பதின்மூன்று வகை எழுத்துகளையும் கீழ்வரும் தலைப்புகளுள் அடக்கி, அவற்றைத் தனித்தனியே நாம் காண்போம்.
- தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன (இயல்பு வகை)
- மெய்யும் உயிருமாகிய கூட்டில் ஒலிப்பது (கூட்டவகை)
- தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன (குறுக்கம்)
- தமக்குரிய மாத்திரையின் நீண்டொலிப்பன (அளபெடை)
2.2.1 தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன
செய்யுள் அடியில் தமக்குரிய மாத்திரையில் ஒலிக்கப் பெறும் எழுத்துகள் ஏழு ஆகும்.
1. குறில்
2. நெடில்
3. உயிர்
4. மெய்
5. வல்லினம்
6. மெல்லினம்
7. இடையினம்- குறில்
இங்குக் ‘குறில்’ என்றது உயிர்க்குறிலை ஆகும். அவையாவன: அ, இ, உ, எ, ஒ, என்னும் ஐந்தாம். இவற்றுக்குத் தனித்தனி மாத்திரை ஒன்று ஆகும். இப்பாடத்தின் இறுதியில் எந்த எந்த எழுத்திற்கு எவ்வளவு எவ்வளவு மாத்திரை என்று படிக்க இருக்கின்றோம்.
- நெடில்
இங்கு ‘நெடில்’ என்றது உயிர்நெடிலை ஆகும். அவையாவன, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழாம். இவற்றுக்குத் தனித்தனி மாத்திரை இரண்டு ஆகும். உயிர்க்குறில் தன்னினும் மிக்க ஓசை வேண்டின், நெடில் அதனை நிறைவு செய்யும் என்பது பற்றி உயிர்க்குறில் அளவு எடாது; நெடிலே அளபெடுக்கும் என்றமையை நினைவில் கொள்ளுங்கள்.
- உயிர்
இங்கு ‘உயிர்’ என்றது உயிர்க்குறிலும் (5) உயிர்நெடிலும் (7) ஆகிய பன்னிரண்டு எழுத்தை ஆகும். அவையாவன: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள. உயிரெழுத்துகளையே குறில் என்றும், நெடில் என்றும், உயிரென்றும் பகுத்துக் கொண்டதன் அவசியத்தை (இன்றியமையாமையை) முன்னர்ப் பார்த்தோம். எண்ணிப் பாருங்கள். உயிர்நெடில்களுக்குத் தனித்தனியே மாத்திரை இரண்டு என்பதும் குறில்களுக்கு மாத்திரை தனித்தனியே ஒன்று என்பதும் முன்னர் மொழியப்பட்டதால், பொதுப்படச் சொன்ன உயிர்க்காம் மாத்திரை தெளிவாம்.
- மெய்
‘க்’ என்னும் எழுத்து முதலாக ‘ன்’ என்னும் எழுத்து ஈறாகத் தமிழ் நெடுங்கணக்கில் அமைந்துள்ள பதினெட்டு எழுத்துகளும் மெய்யெழுத்துகள். இவற்றுக்குத் தனித்தனியே மாத்திரை அளவு அரை ஆகும். மெய்க்கு உடம்பு, புள்ளி, ஒற்று, முதலிய பிற பெயர்களும் உண்டு.
கைக்குழந்தைக்காரி ஒருத்தி பேருந்தில் பயணித்தால் அவளுக்கே கட்டணம்; குழந்தைக்குக் கட்டணம் இல்லை. இரட்டைக் குழந்தையைப் பெற்றவள் ஒருத்தி அந்த இரண்டு குழந்தைகளுடன் பயணித்தாலும் அவளுக்கே கட்டணம். அவ்விரு குழந்தைகளுக்கும் இல்லை. அதுபோலச் செய்யுள் எனும் பேருந்தில் குறிலை அல்லது நெடிலைத் தொடர்ந்து வரும் ஒரு மெய்க்கும் அலகு கொள்ளப்படுவதில்லை; இருமெய்க்கும் அலகு கொள்ளப்படுவதில்லை. ஆனால் அலகிடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
பக் / கம்- தனிக்குறில் ஒற்று,
தனிக்குறில் ஒற்று- நேர்நேர்பாக் / கம்- தனி நெடில் ஒற்று,
தனிக்குறில் ஒற்று- நேர்நேர்பீர்க் / கு- நெடில் ஒற்று ஒற்று
(தனிநெடில் ஈரொற்று)- நேர்ஒற்று கணக்கில் கொள்ளப்படாமையும் அசைப் பிரிப்புக்குப் பயன்படுவதையும் காண்கின்றோம். ஒற்று (மெய்) அளபெடுக்கும் போது ஒரு மாத்திரையாகின்றது. அப்போது ஓரலகாகக் கொள்ளப்படுகின்றது.
- வல்லினம், மெல்லினம், இடையினம்
மேற்கூறிய உயிர், மெய் ஆகிய எழுத்துகளைப் பொதுவாகப் பிறப்பிடம், முயற்சி, மாத்திரை அளவு, பொருள், வடிவம் ஆகியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ அளவாகக் கொண்டு இலக்கண ஆசிரியர்கள் இனம் காண்கின்றனர் அல்லது இனம் பிரிக்கின்றனர்.
இவ்வகையில் பதினெட்டு மெய்யெழுத்துகளையும் அவை ஒலிக்கப்படும் அளவு, பிறக்கும் இடம், மேற்கொள்ளப்படும் முயற்சி போன்றவைகளை அளவாகக் கொண்டு வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூவகையாகப் பகுத்துள்ளனர்.
- வல்லின எழுத்துகள் : க், ச், ட், த், ப், ற்.
- மெல்லின எழுத்துகள் : ங், ஞ், ண், ந், ம், ன்.
- இடையின எழுத்துகள் : ய், ர், ல், வ், ழ்,
ள்.
- ஆய்தம்
மாணவ நண்பர்களே! முன்பே ஆய்த எழுத்து உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? இவை இரண்டுமேயா? என்று பார்த்தோம். யாப்பிலக்கணத்தார் சில போது உயிரென்றும் சிலபோது மெய்யென்றும் கருதியுள்ளனர். இப்போது இத்தலைப்பின்கீழ், ஆய்தம் இருவகைப்படும் என்பதனையும் அதன் விரியையும் பார்க்க இருக்கின்றோம்.
அரைமாத்திரை அளவில் ஒலிப்பது முற்றாய்தம் என்றும், அரையளபினின்றும் குறுகிக் கால்மாத்திரை அளவில் ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் என்று வழங்கப் பெறுகின்றது. முற்றாய்தம் எட்டு என்பது நன்னூலார் முடிபு.
குற்றெழுத்தை அடுத்தும், உயிரெழுத்தோடுகூடிய வல்லின உயிர்மெய்களுக்கு முன்னும் வரும் ஆய்தம் ஆறு ஆகும்.
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் ஆறன் மிசைத்தே(நன்னூல், 80)
காட்டு : எஃகு , கஃசு, கஃடு, கஃபு, கஃது, பஃறி
(பஃறி = படகு)
அவ்+கடிய = அஃகடிய; இவ் + கடிய = இஃகடிய எனத் திரிதல் என்னும் புணர்ச்சி விகாரத்தால் வரும் ஆய்தம் ஒன்று;
‘செய்வது’ என்பது ‘செய்வஃது’ என விரித்தல் என்னும் செய்யுள் விகாரத்தால் வருவது ஒன்று; (6+1+1+= 8) ஆக எட்டு. ஆய்தக் குறுக்கமாவது, ல, ள ஈற்று நிலைமொழியின் முன் தகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட வருமொழி வந்து புணரும் போது
அல் + திணை = அஃறிணை
எனவும்,
முள் + தீது = முஃடீது
எனவும், திரிய வரும் ஆய்தமாகும். இதனை, நன்னூலார்
ல, ள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும் என்னும் நூற்பாவால் (97) குறிப்பார்.
2.2.2 மெய், உயிர் ஆகிய கூட்டில் ஒலிப்பது
உயிரும் மெய்யும் கூடிப்பிறக்கும் எழுத்து உயிர்மெய் எழுத்து எனப்படும்.
‘க’ என்பது, ‘க்’ என்னும் மெய்யெழுத்தும் ‘அ’ என்னும் உயிரெழுத்தும் கூடிப்பிறந்த உயிர் மெய்யெழுத்து ஆகும். ‘க்’ என்ற ஒரு மெய்யுடன் அகரம் முதல் ஒளகாரம் ஈறான பன்னிரண்டு உயிர்களும் கூட, க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ எனப் பன்னிரண்டு எழுத்துகள் உண்டாகும் அல்லவா? பதினெட்டு மெய்யெழுத்துகளோடும் பன்னிரண்டு உயிரெழுத்துகளும் கூட இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகள் உளவாகின்றன (18x12 = 216).
பதினெட்டு மெய்யுடன் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து உயிர்க்குறில்கள் கூடுவதனால் (18x5) தொண்ணூறு உயிர்மெய்க் குறில்களும், பதினெட்டு மெய்யுடன் ஆ, ஈ , ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழு உயிர்நெடில்கள் கூடுவதனால் (18x7=126) நூற்று இருபத்தாறு உயிர்மெய் நெடில்களும் பிறக்கும்.
மெய்க்கு மாத்திரை அரை உயிர்க்குறிலுக்கும் உயிர்நெடிலுக்கும் மாத்திரைகள் முறையே ஒன்றும் இரண்டுமாகும். ஆதலால், உயிர்மெய்க் குறிலுக்கு ஒன்றரை மாத்திரை ஆகல் வேண்டும்.
க் - மெய்; மாத்திரை 0.5
அ - உயிர்க்குறில் மாத்திரை 1
க் + அ = க. உயிர்மெய்க்குறிலின் மாத்திரை 1.5
என்று ஆகல் வேண்டும். ஆனால் ஆவதில்லை. ஒரு மாத்திரையாகவே நிலைக்கின்றது. மெய், தன் வடிவத்தைக் கொள்கின்றது. மாத்திரையை விட்டுக் கொடுக்கின்றது. உயிர் தனது வடிவை விட்டுக் கொடுக்கின்றது; தனக்குரிய மாத்திரையை நாட்டுகின்றது. ஒருவர் பொறை இருவர் நட்பு!
இவ்வாறே, உயிர்மெய் நெடிலுக்கும் உயிர்நெடிலின் அளவே அளவு. அஃதாவது இரண்டு மாத்திரை.
2.2.3 தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன
உயிர் எழுத்துகளுள் இ, உ, ஐ, ஒள என்பனவும், உயிரும் மெய்யுமாக கொள்ளப்பெறும் ஆய்தமும், மெய்களுள் ‘ம்’ என்னும் எழுத்தும் தமக்குரிய மாத்திரையினின்றும் குறைந்து ஒலிப்பனவாம். இவை, இடம், சார்பு, பற்றுக்கோடு ஆகியவைகளை உடையன, சொல்லிடைப் படுங்கால். இவற்றை முறையே குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக் குறுக்கம் என்பார்கள்.
யாப்பருங்கலக்காரிகை ஆசிரியர், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஐகாரக்குறுக்கம் ஆகிய மூன்றனையே கொள்கின்றார். ஒளகாரக்குறுக்கம் ஆய்தக் குறுக்கம், மகரக்குறுக்கம் ஆகிய மூன்றனைக் கொள்ளவில்லை.
ஆகையால், நண்பர்களே! ஆசிரியரால் ஏற்கப்பட்ட குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் ஆகிய மூன்றனை மட்டும் இப்பகுதியில் நோக்குவோம்.
- குற்றியலுகரம்
‘குற்றியலுகரம்’ என்ற பெயரே இதன் இலக்கணத்தைச் சொல்வதாய் அமைந்துள்ளது. குறைந்து இயல்கின்ற அல்லது நடக்கின்ற உகரம் என்ற பொருளைத் தருகின்றதல்லவா? குறுமை + இயல் + உகரம் என்றவாறு பிரித்துப் பாருங்கள் விளங்கும்.
‘உ’ என்பது உயிர்க்குறில். இது உயிர்க்குறில் எழுத்துகள் ஐந்தனுள் ஒன்று. இதன் மாத்திரை ஒன்று. இதனை, ‘உ’ என்று தனித்தோ, ‘உலகு’ என்று மொழி முதல் படுத்தியோ ஒலித்துப் பாருங்கள். இதன் ஒலிக்கப்படும் கால அளவு ஒன்று என்பது விளங்கும்.
‘உலகு’ என்பதை மீண்டும் ஒருமுறை ஒலியுங்கள். முதலில் நின்ற ‘உ’ வை ஒலித்த அளவிலா மொழியின் இறுதியில் நின்ற ‘கு’ வை ஒலித்தீர்கள்? இல்லை. அதற்குரிய ஒரு மாத்திரையினின்றும் குறைந்தே ஒலித்ததை உணர்வீர்கள்.
- நாகு
- எஃகு
- வரகு
- கொக்கு
- குரங்கு
- தெள்கு
என்னும் இவற்றைப் படியுங்கள். ஈரெழுத்து ஒரு மொழியின் இறுதிக் கண்ணும், ஆய்தம், உயிர், வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகிய ஐவகைத் தொடர் மொழி இறுதிக் கண்ணும் நின்ற (‘க்’ ஐ ஊர்ந்த) உகரம் குறைந்து ஒலிக்கப் பெறுவதை உணர்வீர்கள்.
க் ச் ட் த் ப் ற் என்னும் வல்லின மெய்யை ஊர்ந்து வரும் உகரம் வன்மை ஊர் உகரம் எனப் பெறும். அவை: குசுடுதுபுறு. இவ்வன்மை ஊர் உகரங்கள் மேற்கூறிய ஆறுவகை மொழியின் இறுதிக் கண் வரும்போது தமது மாத்திரையினின்றும் குறைந்து ஒலிக்கப் பெறுகின்றன. ஆகவே இவற்றைக் குற்றியலுகரங்கள் என்றனர். எனவே, குசுடுதுபுறு என்ற ஆறும் குற்றியலுகர எழுத்துகள்.
கு சு டு து பு று - என்னும் குற்றியலுகரங்கள் என்றவை கூடச் சிலபோது முற்ற ஒலிப்பது உண்டு.
பசு - அசு - இது - கடு - என்னும் இவற்றை ஒலித்துப் பாருங்கள், தம் மாத்திரை முழுதும் ஒலிக்கப் பெறுவதை உணர்வீர்கள். இதனின்றும் குறிலைத் தொடர்ந்து வரும் போது கு சு டு து பு று என்பன குறுகி ஒலிப்பதில்லை என்பது புரியும். இவை முற்றியலுகரங்கள் எனவும் உணர்வீர்கள்.
மொழியிலக்கண நூலார் குற்றியலுகர எழுத்துகள் ஆறு; அவை, நெடில் ஆய்தம், உயிர், வல்லின மெல்லின இடையின எழுத்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மொழியின் (சொல்லின்) இறுதிக்கண் வரும்; நெடிலைத் தொடர்ந்து குற்றியலுகர எழுத்துகள் ஆறும் ‘நாகு’ ‘காசு’ ‘சூடு’ ‘காது’ ‘காபு’ ‘சோறு’ என்றவாறு இறுதியில் வருவது போல ஏனைய ஐந்தனொடும் தொடரும்; இறுதியிலும் வரும். தொடர, 6x6=36 என குற்றியலுகரம் ஆகும்; என்ற இவற்றையெல்லாம் கருதியவர்களாய்க் குற்றியலுகர்,
- நெடில் தொடர்க் குற்றியலுகரம்
- ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
- வன்தொடர்க் குற்றியலுகரம்
- மென்தொடர்க் குற்றியலுகரம்
- இடைத்தொடர்க் குற்றியலுகரம்
என ஆறு வகைப்படும் என்றும், இதன் விரி முப்பத்தாறு என்றும் சொல்லி வைத்தனர்.
யாப்பிலக்கணக்காரர்கள் அசை உண்டாகும் வகையை அடிப்படையாகக் கொள்கின்றனர். நேரசை உண்டாகும் வகை நான்கு. அவை, குறில், குறில் ஒற்று, நெடில், நெடிலொற்று என்பன. நிரையசை உண்டாகும் வகை நான்கு. அவை: இணைக்குறில், இணைக்குறில் ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று. இவற்றுடன் குறில் தவிரப் பிறவற்றுடன் வரும் வன்மை ஊர் உகரமே குற்றியலுகரங்களாகும். அவை (7x6) 42 ஆகும்.
- குற்றியலிகரம்
உயிர்க்குறில் எழுத்துகளுள் ஒன்றான இகரத்தைத் தனித்தும், சொல்லின் முதலில் வைத்தும், சொல்லின் இறுதியில் வைத்தும் ஒலித்துப் பார்ப்போம்.
- இ - ஒரு மாத்திரை (தனித்து)
- இலை - ஒரு மாத்திரை (மொழிமுதல்)
- கதலி - ஒரு மாத்திரை (மொழியிறுதி)
இவற்றுள் இகரம் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கிறது. முன்னிலை அசைச்சொல்லான ‘மியா’ என்பதிலும் ஒரு மாத்திரையே ஒலிக்கிறது.
ஆனால் ‘மியா’ என்னும் அசைச்சொல் தனியே வாராது. ஏவல் வினையை அடுத்தே வரும். செல், கேள் என்னும் ஏவல் வினைகளோடு சேர்ந்து சென்மியா, கேண்மியா எனவரும். இவற்றில் மகரத்தை ஊர்ந்துவரும் இகரம் (மி) தனக்குரிய ஒரு மாத்திரையினின்றும் குறுகி அரைமாத்திரை அளவாகக் குறுகி ஒலிப்பதை உணர்வீர்கள். இது ஒருமொழி அல்லது தனிமொழிக் குற்றியலிகரம் எனப்படும். யகர வருமொழி ஏற்படுத்துகிற குற்றியலிகரத்திற்கு எடுத்துக்காட்டு:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்
கியாண்டும் இடும்பை இலசேர்ந்தார்க் - நிலைமொழி (இறுதி - குற்றியலுகர எழுத்து)
யாண்டும் - வருமொழி (யா - முதல் எழுத்து)
சேர்ந்தார்க் கி யாண்டும் (கி - குற்றியலிகரம்)யாப்பிலக்கணத்தில் அசைகளின் கீழ்வரும் குற்றியலுகரம் 42 என்றதனால், யகர வருமொழி ஏற்படுத்துகிற குற்றியலிகரமும் 42 என்றனர். அத்துடன் தனிமொழிக் குற்றியலிகரத்தையும் சேர்த்து 43 என்பர்.
- ஐகாரக்குறுக்கம்
‘ஐ’ என்னும் எழுத்து உயிர்நெடில்கள் ஏழனுள் ஒன்று. நெடில் எனவே, இதற்குரிய மாத்திரை இரண்டு என்பதனை அறிவீர்கள். இரண்டு மாத்திரை என்றாலும் மொழியின் (சொல்லின்) முதல், இடை, கடை ஆகிய எல்லா இடங்களிலும் இது, இரண்டு மாத்திரை அளவினதாய் ஒலிக்கும் என்று கூறிவிட முடியாது.
‘ஐ’- (ஒலித்துப் பாருங்கள். இரண்டு மாத்திரைக்கால அளவு ஒலிக்கப் பெறுவதை உணர்வீர்கள். இங்குத் தன்னையே சுட்டி வருகின்றது)
ஐப்பசி- (இங்கு மொழியில் முதலிடத்து வருகின்றது. ஓசை குறைகின்றது. ஒலித்துத்தான் உணர வேண்டும்)இடையன்- (இங்கு மொழியின் இடையில் வருகின்றது. இங்கும் தனக்குரிய ஒலியில் குறைகின்றது.)குவளை- (இங்கு மொழியின் இறுதியில் வருகின்றது. இங்கும் தனக்குரிய இருமாத்திரையினின்றும் குறைந்தே ஒலிக்கின்றது)ஆதனால், எழுத்திலக்கணத்தார், ஐ என்ற எழுத்துத் தன்னைச் சுட்டிவரும் போதும் அளபெடுக்கும் போதும் மட்டும்தாம் தனக்குரிய இரண்டு மாத்திரையில் ஒலிக்கும்; (ஏனைய மூவிடமாகிய) மொழியின் முதல், இடை, கடைகளில் ஒரு மாத்திரையளவிலேயே ஒலிக்கும் என்றனர்.
மொழியில் ஐகாரம் வருமிடத்தை நினைக்க ஐகாரக்குறுக்கம் மூன்றாகின்றது. ‘ஐகான் மூன்றே ஒளகான் ஒன்றே’ என்கின்றார் நன்னூலார்.
2.2.4 தமக்குரிய மாத்திரையில் நீண்டொலிப்பன
செய்யுளில் இசை நிரப்புவதற்காக உயிர் நெட்டெழுத்தும் மெய்யும் (ஒற்று) அளபெடுக்கும். உயிர்எழுத்து அளபெடுத்தால் உயிரளபெடை என்றும் ஒற்று அளபெடுத்தால் ஒற்றளபெடை (மெய்யளபெடை) எனக் கூறப்படும். எந்த எழுத்து அளபெடுத்ததோ அதற்கு இனமாகிய குற்றெழுத்தை அருகில் எழுதிக்காட்டல் மரபு.
- உயிரளபெடை
நெடில் அளபெடுக்கும் என்பதை அறிவீர்களல்லவா?
நெடில் ஏழு. அவை: ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள. இவற்றுள், ‘ஆ’வுக்கு ‘அ’ இனம். இவ்வாறே ஈகார ஊகார ஏகார ஓகாரங்கட்கு இனக்குறில் முறையே இகர உகர எகர ஒகரங்கள் ஆகும். ஐக்கு இ; ஒளக்கு உ இனக்குறில்களாம்.
உயிர்நெடில் ஏழும் அளபெடுக்கும்போது எத்தனை மாத்திரை எடுத்தது என்பதைக் காட்ட அவ்வவற்றின் இனக்குற்றெழுத்தை அத்தனை மாத்திரைக்கேற்ப அருகில் இட்டு எழுதுவது வழக்கம்.
காட்டு:
தொழாஅர் எனின் (ஒரு மாத்திரை மிகுதி என்பதைக் காட்ட ‘அ’ எனும் எழுத்தை (இனக்குறிலை) ஒரு தடவையே எழுதப்பட்டுள்ளது)
செறாஅஅய் வாழிய (இரண்டு தடவை இட்டு எழுதப்பட்டுள்ளது)
சில இடங்களில் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீண்டு அளபெடுப்பதையும் காண முடிகின்றது. மகடு - மகடூ - மகடூஉ.ஏழு நெட்டெழுத்துகளும் தனித்து நின்றும் அளபெடுக்கும். சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் நின்றும் அளபெடுக்கும். அவ்வாறு ஏழு எழுத்துகளும் மேற்சொன்ன நான்கு இடங்களிலும் அளபெடுக்க உயிரளபெடை இருபத்தெட்டாம்.
- காட்டு:
ஆஅ, ஈஇ- தனிநிலையில் அளபெடுத்தல்ஆஅரிடம், ஈஇரிலை- சொல்லின் முதலில் அளபெடுத்தல்படாஅைக, வளைஇய- சொல்லின் இடையில் அளபெடுத்தல்குரீஇ, கடாஅ- சொல்லின் இறுதியில் அளபெடுத்தல்- ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்றாலும் மெய்யளபெடை என்றாலும் ஒன்றே. மெய்கள் பதினெட்டு. இவற்றுள். வல்லின மெய்யாகிய கசடதபற என்னும் ஆறு எழுத்துகளுடன் இடையின எழுத்துகள் ர, ழ என்ற இரண்டும் ஆக எட்டு எழுத்துகளும் அளபெடுக்கா. இவையெட்டும் நீட்டி ஒலிக்க முடியாதவை என்பர்.
மேற்சொன்ன எட்டு எழுத்துகள் ஒழிந்த ஏனைய பத்து மெய்களும் அளபெடுக்கும். ஆய்தமும் அளபெடுக்கும். இங்கு ஆய்தத்தை மெய்யில் சேர்த்திருப்பதை நீங்கள் நினைவுகூர்தல் வேண்டும்.
மெல்லினமெய்:ங ஞ ண ந ம ன- 6இடையினமெய்:வ ய ல ள- 4(ர, ழ - தவிர்ந்தவை)ஆய்தம்:ஃ- 1ஆக மொத்தம்11இவை அளபெடுக்கும் போது தமக்குரிய அரை மாத்திரையினின்றும் மிக்கு ஒரு மாத்திரை அளவாக ஒலிக்கும். அளபெடுத்தமைக்கு அடையாளமாக அதே மெய்யெழுத்தை மீண்டும் ஒரு முறை அதனை அடுத்து எழுதிக்காட்டுவர்,
ஒற்றுஎழுத்து, (சொல்லில்) குறில் அடுத்தும், குறிலிணையை அடுத்தும் அளபு எடுக்கும்.
காட்டு :
மங்ங்கலம்- (‘ங்’ குறிலை அடுத்து அளபெடுத்தது)அரங்ங்கம்- (‘ங்’ குறிலிணையை அடுத்து அளபெடுத்தது)அளபெடுக்கும் ஒற்றெழுத்துப் பதினொன்று; ஒற்று அளபெடுக்கும் இடம் குறில் அடுத்து (குறில்கீழ்), குறிலிணையை அடுத்து (குறிலிணைக்கீழ்) என இரண்டும். எழுத்தும் இடமும் உறழ (11 எழுத்து x 2 இடம்) ஒற்றளபெடை மொத்தம் இருபத்திரண்டு ஆகும்