தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விதப்புக்கிளவி (சிறப்பித்து மொழிதல்) தரும் விளக்கம்

  • 2.3 விதப்புக்கிளவி (சிறப்பித்து மொழிதல்) தரும் விளக்கம்

    இலக்கண ஆசிரியர் யாதேனும் ஒரு காரணம் பற்றித் தாமியற்றும் நூற்பாவில் எடுத்துமொழியும் சொற்களை ஆளுவார். அச்சொற்கள், எதுகை முதலிய நோக்கம் பற்றிப் பாடலை நிறைக்க வருஞ்சொற்கள் அல்ல. ஆசிரியன் சொல்ல எண்ணும் செய்தியை வாசகனோ உரையாசிரியனோ கருதிக் கொள்ளவேண்டும். அஃதாவது உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் பெய்வனவாகும். இவ்விதப்புக் கிளவிகள் நாம் வேண்டியனவற்றைப் பயக்கும் ஆற்றலை உடையனவாம். அசைக்கு உறுப்பாம் எழுத்துகளைச் சொல்லவரும் அமிதசாகரர் மறுவறு மூவினம், மைதீர் உயிர்மெய், அறிஞர் உரைத்த அளபு என மூன்று விதப்புக் கிளவிகளை ஆண்டுள்ளார். ஆதலால், அவை தரும் செய்திகளையும் காண்பது நமது கடமையாகும்.

    2.3.1 மறுவறு மூவினம்

    மெய்யெழுத்து வல்லினம் மெல்லினம் இடையினம் என மூவகைப்படும்; இவையும் அசைக்குறுப்பாவனவாம் என்னும் செய்தியைச் சொல்ல, ‘மூவினம்’ என்றாலே போதும். அதனை ‘மறுவறு’ என்று அடைகொடுத்துச் சிறப்பிக்கின்றார். இங்ஙனம், விதந்து - எடுத்து - சிறப்பித்து மொழிவதன் நோக்கம் என்ன? அது, இம்மூவின மெய்யும் உயிர்மெய்யாகிய காலத்தும் வல்லின உயிர்மெய், மெல்லின உயிர்மெய், இடையின உயிர்மெய் என்று மெய்யின் பெயராலேயே வழங்கப்படும் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்பதே நோக்கமாம்.

    2.3.2 மைதீர் உயிர்மெய்

    ‘உயிர்மெய்’ என்று சொல்வதே போதும். ‘மைதீர்’ என்னும் அடையைச் சேர்த்துள்ளார். இது, இங்கு, விதப்புக்கிளவி. இவ்விதப்புக் கிளவியைக் கொண்டு காரிகை ஆசிரியர் உணர்த்த விரும்புவது, ஏறிய உயிரின் மாத்திரையே உயிர்மெய்க்கும் அளவு என்பதைச் சொல்ல வேண்டும் என்பதேயாகும்.

    க் - மெய் - அரைமாத்திரை
    அ - உயிர் - ஒரு மாத்திரை

    க்+அ - மெய் + உயிர் - அரை + ஒன்று - ஒன்றரை மாத்திரையென்று கருதி விடுவோம் அல்லவா? அவ்வாறு கருதக்கூடாது; உயிர்மெய்யின் மாத்திரை, மெய்யேறிய உயிரின் மாத்திரையே என்று நினைதல் வேண்டும்.

    2.3.3 அறிஞர் உரைத்த அளபு

    துணியை அளக்க ‘மீட்டர்’ என்ற அளவையும், எண்ணெயை முகக்க ‘லிட்டர்’ என்ற அளவையும், நிறுத்தளக்கக் ‘கிலோ’ என்ற அளவையும் கொள்கின்றோம். அதுபோல, நம் முன்னோர் எழுத்தொன்று ஒலிக்கப்படுவதற்கு ஆகும் கால அளவையும் கணக்கிட முயன்றார். முயன்று, ‘மாத்திரை’ என்ற அளவைக் கண்டனர். அவர்களுடைய கொள்கைப்படி இயல்பாகக் கண்ணை இமைப்பதற்காகும் கால அளவும், இயல்பாக விரலை நொடிப்பதற்காகும் கால அளவும் மாத்திரையாகும்.

    ‘இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை’

    என்றார் நன்னூலார் (100).

    உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
    - ஒருமாத்திரை
    உயிர்நெடில், உயிர்மெய்நெடில்
    - இரண்டுமாத்திரை
    உயிரளபெடை
    - மூன்று மாத்திரை என்பது பெரும்பான்மை; சிறுபான்மை நான்கு மாத்திரையுமாம்
    ஒற்றளபெடை
    - ஒரு மாத்திரை
    ஒற்று
    - அரைமாத்திரை
    ஆய்தம்
    - அரைமாத்திரை
    குற்றியலிகரம்
    - அரைமாத்திரை
    குற்றியலுகரம்
    - அரைமாத்திரை
    ஐகாரக்குறுக்கம்
    - சொல்லின் முதலில் ஒன்றரை மாத்திரை;சொல்லின் இடையிலும் இறுதியிலும் ஒருமாத்திரை
    (ஒளகாரக்குறுக்கம்
    - சொல்லின் முதலில் ஒன்றரை மாத்திரை, காரிகையாசிரியர் இதனைக் கொள்ளவில்லை)
    ஆய்தக்குறுக்கம்
    - கால்மாத்திரை
    மகரக்குறுக்கம்
    - கால்மாத்திரை

    மாத்திரை என்றால் என்ன? ஒவ்வொரு வகை எழுத்துக்கும் தனித்தனி எவ்வளவு மாத்திரை? என்பன பற்றிக் காரிகையாசிரியர் பேசவில்லை. எனினும், இவை குறித்து முன்னையோர் கூறிய இலக்கணத்தையே தழுவிக் கொள்கின்றார். தழுவிக் கொள்வதற்காக விதந்து சொன்ன கிளவியே ‘அறிஞர் உரைத்த அளபும்’ என்னும் விதப்புச்சொல்.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 12:23:04(இந்திய நேரம்)