தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 5.4 தொகுப்புரை

    மாணாக்கர்களே! நீங்கள் மனத்தில் நிறுத்த வேண்டிய அடி, தொடை ஆகியன பற்றிய செய்திகள் கீழ்வருவன:

    அடி என்பது செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது.

    சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலிஒழுக்கு தளை; சீர்களின் தொடர் இயக்கம் செய்யுளுக்கு வடிவியக்கம். இவ்வடிவியக்கம் ‘அடி’ என்பதாகும்.

    அடி என்பது, பாவின் அடி; சீரடி என்பது பாவின் ஓரடி, சீரடி வகைகள் ஐந்து. அவை: குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி, இப்பெயர்கள் அளவடியின் குறைவு, மிகுதி ஆகியவை கருதி வைத்த பெயர்கள்.

    ஒரு தளையை உண்டாக்குவது குறளடி; இருதளையை உண்டாக்குவது சிந்தடி; மூன்று தளையை உண்டாக்குவது அளவடி; நான்கு தளையைத் தோற்றுவிப்பது நெடிலடி; ஐந்தின் மிக்க தளைகளை உண்டாக்குவது கழிநெடிலடி.

    வெண்பாவிற்குச் சிற்றெல்லை இரண்டடி; ஆசிரியப்பாவிற்குச் சிற்றெல்லை, மூன்றடி; கலிப்பாவிற்குச் சிற்றெல்லை நான்கடி; வஞ்சிப்பாவிற்குச் சிற்றெல்லை மூன்றடி என்பது, அமிதசாகரரின் மதம்(கொள்கை). இரண்டடி என்பது மயேச்சுரர் மதம். சிந்தடியால் இயன்றால் இரண்டடி; குறளடியால் இயன்றால் மூன்றடிச் சிற்றெல்லை என்பாரும் உளர்.

    படைப்பாளிகளாகிய கவிஞர்களுக்கு யாப்புலகம் வழங்கியுள்ள சலுகைகள் பல. அவற்றுள் ஒன்று எவ்வகைப் பாவையும் கவிஞர்கள் தம்முள்ளத்து அளவையாகக் கொண்டு எல்லை வரம்பின்றிப் பாடலாம் என்பது.

    தொடுக்கப்படுவது தொடை. கவிஞர்கள் தாம் படைக்கும் செய்யுளைச் செவிநுகர் கனிகளாக்க, எழுத்து சொல் பொருள் இலக்கணங்களில் இடம்பெறும் மொழிக்கூறுகள் சிலவற்றை ஆள்கின்றனர். அம்மொழிக்கூறுகள் செய்யுளை அழகும் சுவையும் உடையதாக்குகின்றன. அதை / அந்த உத்தியைத் தொடை என்கிறோம்.

    தொடைகள், மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடைகள் என எட்டு வகைப்படும்.

    எண்வகைத் தொடைகளை மொழியிலக்கணக் கூறுகள் அடிப்படையில் புரிதல் பயன் கருதி ஐந்து வகையாகப் பகுத்துப்படித்தோம். இத்தொடைகள் வேறுவகையாகவும் பகுக்கப்படும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    தொடை என்பதில் வரும் ஐ விகுதி என்ன பொருளில் வருகின்றது?
    2.
    எழுத்து என்னும் நிலையில் அமையும் தொடைகள் யாவை? அல்லது எழுத்துப் பற்றிய மொழியிலக்கணக் கூறுகொண்டு அமைக்கலாகும் தொடைகள் யாவை?
    3.
    சொல் நிலையில் அமையும் தொடை எது?
    4.
    எழுத்தும் சொல்லும் என்னும் நிலையில் அமையும் தொடைகள் யாவை?
    5.
    சொல்லும் பொருளும் எனும் நிலையில் அமையும் தொடை யாது?
    6.
    யாதொரு தொடையும் அமையப்பெறாது வருவது என்ன தொடை எனப்பெறும்?
    7.
    செந்தொடையை மொழிநூல் பார்வையில் என்ன தொடை என்று பெயர் வைக்கலாம்?
    8.
    மோனையாவது யாது?
    9.
    கட்டு என்பதற்குப் பாட்டு அல்லது காட்டு என்பது எதுகை ஆகுமா?
    10.
    இயைபு என்பது யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 15:50:13(இந்திய நேரம்)