Primary tabs
2.1 பொதுவணியியல்
தண்டியலங்காரம், பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் முதலாவதாகத் திகழ்வது பொதுவணியியல் ஆகும். இது, பொதுவியல் எனவும் கூறப்படும்.
பொருளணியியலுக்கும், சொல்லணியியலுக்கும் பொதுவான இலக்கணத்தை எடுத்துரைப்பதால் இது, பொதுவணியியல் எனப் பெயர் பெற்றது.
தனிப்பாடல், தொகைப்பாடல் எனப் பல நிலைகளிலும் இலக்கியங்கள் அமைகின்றன. சொல்லால் தொடர்தலும், பொருளால் தொடர்தலும் எனச் செய்யுள்கள் தொடர்புடையன வாக அமைவதை அறிந்து கொள்வதும் இன்றியமையாதது ஆகும்.
காப்பியம், அந்தாதி போன்றவற்றிற்கான அமைப்பையும், செய்யுளுக்கான சொல்லமைப்பு வகைகளையும் அறிவிப்பது பொதுவணியியலாகும். இதனை அறிந்து கொண்டால்தான் பழைய இலக்கியங்களின் சிறப்பை உணர்ந்து அவற்றைப் படிக்கவும், புதியதாக இலக்கியங்களை படைக்கவும் இயலும். எனவே, பொதுவணியியல் மிக அவசியமாகின்றது.
2.1.3 பொதுவணியியலும் தண்டியலங்காரமும்
தண்டியலங்காரத்தின் பொதுவணியியல், 25 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. செய்யுள்வகை, செய்யுள் நெறி என்னும் இருபெரும் பிரிவுகளாக இது அமைந்துள்ளது. அவற்றுள் செய்யுள் வகைப்பகுதி, காப்பிய இலக்கணம் போன்றவற்றை விவரிக்கின்றது. தமிழில் காப்பிய இலக்கணம் குறித்து எடுத்துரைக்கும் முதல் இலக்கண நூல் தண்டியலங்காரமே ஆகும். இதனைப் பின்பற்றியே மாறனலங்காரம், பாட்டியல் நூல்கள் போன்றன காப்பியம் பற்றி விளக்கம் அளிக்கின்றன.
செய்யுள் நெறிப்பகுதி, செய்யுளின் சொல்லமைப்பு குறித்த வைதருப்ப நெறி, கௌடநெறி என்னும் இருவகை நெறிகளைப் பற்றி விவரிக்கின்றது.