Primary tabs
2.2 செய்யுள் வகை
செய்யுள் அமையும் முறையைச் செய்யுள் வகை என்னும் பகுதி எடுத்துரைக்கின்றது. செய்யுள் அமைப்பை அறிந்து கொண்ட பிறகே, அணியிலக்கணம் பற்றிய கருத்துப் பயன் தரும் ஆதலின் செய்யுள் வகை முதலில் கூறப்படுகின்றது.
எவ்வகைப்பட்ட பாடல்களும் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய நான்கு வகைகளுள் ஒன்றாக அமையும். இவற்றுள், முத்தகம். குளகம் ஆகியன வடமொழிப் பெயர்கள் என்பர். தொகைநிலை, தொடர்நிலை ஆகியன தமிழ்ப் பெயர்களாகும்.
செய்யுள் என்பவை தெரிவுற விரிப்பின்
முத்தகம் குளகம் தொகைதொடர் நிலைஎன
எத்திறத் தனவும் ஈரிரண் டாகும்(தண்டியலங்காரம் : நூற்பா :2)(தெரிவுற = விளக்கமாக
விரிப்பின் = விவரித்தால்
ஈரிரண்டு = நான்கு)செய்யுள் வகை நான்கும் குறித்து இனி விரிவாகக் காண்போம்.