தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சுவை அணி

  • 4.4 சுவை அணி

    சுவை = அச்சம், வியப்பு முதலிய மெய்ப்பாடுகள்.

    கவிஞர் பாடலில் தாம் கூறும் கருத்தினை எண்வகைச் சுவை தோன்றப் பாடுவதால் அப்பாடலில் பொருள் அழகு பெற்றுத் திகழ்கின்றது. இதுவே சுவை அணி ஆகும்.

    4.4.1 சுவை அணியின் இலக்கணம்

    உள்ளத்திலே நிகழும் உணர்வு வெளியிலே எட்டுவகைப்பட்ட மெய்ப்பாட்டினாலும் புலப்பட்டு விளங்கும். அவ்வாறு வெளிப்படுவதை எடுத்துரைப்பது சுவை என்னும் அணி ஆகும்.

    உள்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
    எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே
    (தண்டி, 69)

    . அணியின் வகைகள்

    மேலே கூறிய எண்வகை மெய்ப்பாடுகள் வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், சினம், நகை என்பனவாம். எனவே சுவை அணி எட்டு வகைப்படும். இவற்றுள் சிலவற்றைச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.

    4.4.2 அச்சச் சுவை அணி

    அச்சம் காரணமாகத் தோன்றும் சுவை அச்சச் சுவை ஆகும். அச்சம் தரும் தெய்வம், விலங்கு, கள்வர், இறை (அரசன்) என்னும் நான்கும் காரணமாக அச்சம் பிறக்கும் என்பர் தொல்காப்பியர்.

    எடுத்துக்காட்டு:

    கைநெரித்து, வெய்துயிர்ப்ப, கால்தளர்ந்து,மெய்பனிப்ப,
    மை அரிக்கண் நீர்ததும்ப, வாய்புலர்ந்தாள் - தையல்
    சினவேல் விடலையால் கை இழந்த செங்கண்
    புனவேழம் மேல்வந்த போது
    (வெய்துயிர்ப்ப = பெருமூச்சுவிட்டு; பனிப்ப = நடுங்க;
    தையல் = தலைவி; விடலை = தலைவன்;
    கை இழந்த = துதிக்கையை இழந்த;
    புனவேழம் = காட்டு யானை.)

    இப்பாடலின் பொருள்

    சினம் மிக்கவனும் வேலை ஏந்தியவனும் ஆகிய தலைவனால் துதிக்கை இழந்த சிவந்த கண்களை உடைய காட்டு யானை தன் எதிரே வந்த பொழுது, தலைவி, தன் கைகளை நெரித்துக் கொண்டு, பெருமூச்சு விட்டு, கால்கள் தளர்ந்து, உடல் நடுங்க, மை தீட்டிய செவ்வரி படர்ந்த கண்களில் நீர் ததும்ப, வாய் பசையற்று உலர்ந்து விட்டாள்.

    . அணிப்பொருத்தம்

    இப்பாடலில் தலைவிக்கு, யானை என்னும் விலங்கு காரணமாக அச்சம் பிறந்தது. மனத்தில் தோன்றிய அச்சம் கைநெரித்தல், பெருமூச்சுவிடல், கால்தளர்தல், உடல்நடுங்கல், கண்ணீர் ததும்பல், வாய்புலர்தல் ஆகிய மெய்ப்பாடுகள் மூலம் வெளிப்பட்டது எனக் காட்டுவதால் இது அச்சச் சுவை அணி ஆயிற்று.

    4.4.3 காமச் சுவை அணி

    காமம் காரணமாகத் தோன்றும் சுவை காமச் சுவை ஆகும். காமமாவது காதல் விருப்பம். தொல்காப்பியர் இதனை 'உவகை' என்று கூறுகிறார். இது செல்வம், புலன், புணர்ச்சி, விளையாட்டு என்னும் நான்கும் காரணமாகத் தோன்றும் என்றும் கூறுகிறார்.

    எடுத்துக்காட்டு:

    திங்கள் நுதல் வியர்க்கும்; வாய்துடிக்கும்;கண்சிவக்கும்;
    அங்கைத் தளிர்நடுங்கும்; சொல்அசையும்;- கொங்கை
    பொருகாலும் ஊடிப் புடைபெயரும் காலும்
    இருகாலும் ஒக்கும் இவர்க்கு.
        
    (திங்கள் = பிறை நிலவு; நுதல் = நெற்றி;
    அங்கை
    = அழகிய கைகள்; அசையும் = தடுமாறும்;
    பொருகாலும்
    = தழுவும் போதும்;
    புடைபெயரும் காலும்
    = விலகும் போதும்)

    பாடலின் பொருள்:

    கொங்கைகள் என்மீது அழுந்துமாறு இவர் (தலைவி) என்னைத் தழுவும் காலத்திலும், என்பால் ஊடல் கொண்டு என் பக்கத்திலிருந்து நீங்கிச் செல்லும் காலத்திலும் இவர்க்கு, பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி வியர்க்கும்; வாய் துடிக்கும்; கண்கள் சிவக்கும்; அழகிய கைகளாகிய தளிர்கள் நடுங்கும்; சொல் தடுமாறும். இம்மெய்ப்பாடுகள் தழுவும் காலத்திலும், பிரியும் காலத்திலும் இவர்க்கு ஒரு தன்மையன ஆகும்.

    இப்பாடல் ஒரு தலைவன் தன் தலைவியின்பால் உள்ள காதல் மகிழ்ச்சி புலப்படக் கூறியதாகும்.

    . அணிப்பொருத்தம்

    இப்பாடலில், நுதல் வியர்த்தல், வாய் துடித்தல், கண் சிவத்தல் கைநடுங்கல், சொல்தளர்தல் ஆகிய காமச் சுவைக்கு உரிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. ஆகவே இது காமச் சுவை அணி ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 11:15:42(இந்திய நேரம்)