தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமாகித அணி

  • 4.7 சமாகித அணி

    முன்பு ஒரு பயனை விரும்பி ஒரு செயல் செய்யப்படுகிறது; ஆனால் அப்பயன் கிட்டவில்லை. பின்னர் அச்செயலால் அல்லாமல், வேறொரு செயலால் அப்பயன் தானே கிட்டுவதாகக் கூறி முடிப்பது சமாகிதம் என்னும் அணி ஆகும்.

    முந்துதான் முயல்வுறூஉம் தொழில்பயன் பிறிதுஒன்று தந்ததா முடிப்பது சமாகிதம் ஆகும்
    (தண்டி, 73)

    எடுத்துக்காட்டு

    அருவியம் குன்றம் அரக்கன் பெயர்ப்ப,
    வெருவிய வெற்பு அரையன் பாவை - பெருமான் அணி ஆகம் ஆரத் தழுவினாள், தான்முன்
    தணியாத ஊடல் தணிந்து
    (குன்றம் = கயிலை மலை; அரக்கன் = இராவணன்;
    வெருவிய
    = அஞ்சிய; வெற்பு = மலை; அரையன் = அரசன்;
    பாவை
    = பார்வதி; பெருமான் = சிவபெருமான்; ஆகம் - மார்பு.)

    பாடலின் பொருள்

    பார்வதி கங்கை காரணமாகச் சிவபெருமானிடம் ஊடல் கொண்டாள், சிவன் எவ்வளவோ முயன்றும் அவளுடைய ஊடல் தணியாதிருந்தது. அந்நேரத்தில் அருவி பாயும் கயிலை மலையை இராவணன் பெயர்த்து எடுத்தான், அதனால் ஏற்பட்ட நடுக்கத்தினால் அஞ்சிய பார்வதி தான் முன்பு தணியாத ஊடல் தணிந்து சிவபெருமானுடைய அழகிய மார்பினை ஆரத் தழுவிக் கொண்டாள்.

    . அணிப்பொருத்தம்

    இப்பாடலில் சிவபெருமான் முன்னதாக முயன்ற செயல் பார்வதி தன்மீது கொண்ட ஊடலைத் தணிவித்தல். அத்தொழிலினது பயன் பார்வதி ஊடல் தணிதல் ஆகும். ஆனால் இப்பயன் சிவபெருமான் முயன்ற தொழிலால் கிடைக்கவில்லை. அப்பயன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தலாகிய வேறு ஒரு காரணத்தால் கிடைத்ததாகக் கூறப்பட்டிருத்தலின் இது சமாகித அணி ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 12:00:51(இந்திய நேரம்)