Primary tabs
-
5.0 பாட முன்னுரை
ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்ற வகைமைக்குள் தொழிலாளர், கூலி விவசாயி, புலம்பெயர்ந்தோர், மற்றும் பெண்கள், தலித்துக்கள் முதலியோருடைய பிரச்சனைகள் குறித்த எழுத்துக்கள் அடங்கும். சென்ற பாடத்தில் பெண்ணியம் பற்றிப் பார்த்தோம். அது எப்படி ஒடுக்கப்பட்டோர் வழிச் சிந்தனை முறையோ அதுபோன்று தலித்தியம் என்பதும் அத்தகைய பண்பு கொண்டதேயாகும். பெண்ணியம், மனிதகுலத்தில், பால் வேறுபாடு எப்படிப் பல கொடுமைகளுக்குரியதாக ஆகிறது என்பது பற்றிப் பேசுகிறது. தலித்தியம் என்பது சாதியப் படிநிலைகள் கொண்டு மனித சமூகம் பிரிக்கப்பட்டிருப்பதன் அவலங்களைப் பற்றிப் பேசுகிறது. பெண்ணியம் உலகளாவியது; ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குமேல் பல வடிவங்களில் - பல குரல்களில் பேசப்பட்டு வருவது. தலித்தியம், வருணாசிரம தருமம் வேரூன்றியுள்ள இந்தியப் பெருநாட்டில் பரவிக்கிடப்பது. இதற்கும் ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு கூறப்பட முடியும் என்றாலும், மிக அண்மைக் காலத்தில்தான், அது ஒரு கொள்கை வடிவமாகவும் போராட்டக் கருவியாகவும் ஆகியுள்ளது. இலக்கியத்திலும் தலித்து- தலித்தியப் பார்வை ஆழமாகவும் கூர்மையாகவும் இடம் பெற்று வருகிறது. எனவே, திறனாய்வு இதில் அக்கறை கொள்வது இயற்கையே.