தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- தலித்தியம் - ஒருவிளக்கம்

  • 5.1 தலித்தியம் - ஒரு விளக்கம்

        அண்மைக்காலத்தில்,     சமூக - பண்பாட்டுத்தளத்தில் தோன்றியுள்ள தலித் எழுச்சி, கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. பரவலாகவும் சற்று ஆழமாகவும் உரத்த குரலில் இது தன்னைக் காட்டி வருகிறது. ‘தலித்’ என்ற சொல் மராட்டியச் சொல். ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ என்பது இதன் பொருள். இது சாதியைக் குறிப்பதல்ல. ஆனால், இன்று, ‘தாழ்த்தப்பட்ட மக்கள்’ என்ற பொருளை இது உணர்த்துகிறது. பஞ்சமர், அட்டவணைச் சாதிகள் (Sheduled castes and tribes), அரிசனங்கள், ஆதி திராவிடர்கள் என்றெல்லாம் முன்னர் அழைக்கப்பட்டு வந்த (அரசு நிலையில்     இன்றும் அப்படித்தான்) வகுப்பினர், அண்மைக்காலமாகத் ‘தலித்துகள்’ என்று அடையாளப்படுத்தப் படுகின்றனர். இன்று தலித் என்ற சொல், தாழ்த்தப்பட்ட சில சாதிகளின் ஒரு கூட்டுவடிவ இலச்சினையாகவும், சற்று விரிவான பொருளில் ஒரு பண்பாட்டு அரசியலின் அடையாளமாகவும் இருக்கின்றது. மேலும், இந்தச் சொல்லோடு, போராடுகிற ஒரு பண்பு, கூர்மையான ஒரு கருத்தாடல், ஒரு கலகக் குரல் என்ற பொருண்மைகளும் இணைந்துள்ளன. தலித் என்ற வழக்கு, குறிப்பிட்ட சில தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் குறித்தாலும், இன்று சமூகச் சிந்தனையாளர்கள் பலரும் இந்தச் சொல்லை, சமூக விழிப்புணர்ச்சி பற்றிய சூழலில் பயன்படுத்துகின்றனர்.

    5.1.1 தலித்திய வரலாறு

        இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் சூழலில், சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து எழுச்சியின் அசைவுகளும் அறிகுறிகளும் தோன்றின.     அவற்றில்     முக்கியமானது, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியாகும். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர், தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி. ராஜா முதலியோர் தலித்து எழுச்சிக்கு வித்திட்டவர்கள்; அதுபற்றிய சிந்தனையையும் முன்வரைவுத் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தவர்கள். கோயில் நுழைவுப் போராட்டங்கள் உள்ளிட்ட “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே     ஏற்பட்டுவிட்டது என்றாலும், தொடர்ந்து விடுதலைப்     போராட்டக் காலத்தில் அவ்வப்போது தலைகாட்டியது என்றாலும், 1990 - களில்தான் தலித் எழுச்சி, குறிப்பிடத்தக்க உணர்வு நிலையாகவும் போராட்டப் பண்பாகவும் ஆகியது. 1991, 1992 ஆகிய இரண்டு ஆண்டுகள் அம்பேத்கர் நூற்றாண்டு     விழா நடந்தது. இதனுடைய தூண்டுதல், தலித்தியத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. முக்கியமாக, ஜனநாயகம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலையைத்     தரவில்லை; இந்திய அரசியல் கட்சிகள் தங்களைப் பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவுமே (vote bank) பயன்படுத்துகின்றன என்ற உணர்வு தலித் மக்களை வெகுவாகப் பாதித்த சூழல், அது. எனவே தலித்தியம், ஒரு     வேகத்தோடு     எழுந்தது.     முக்கியமாகச் சிந்தனையாளர்களையும்     இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஈடுபட்டோரையும் இது அதிகமாகப் பாதித்தது. இதற்குமுன்     பிரபலமடைந்திருந்த பெண்ணியத்தைவிடத் தலித்தியமே     பரவலாகவும்     கூர்மையாகவும் படைப்பிலக்கியத்திலும் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் தடம் பதித்திருக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:53:05(இந்திய நேரம்)