Primary tabs
-
6.1 ஜெயகாந்தன் - அறிமுகம்
தமிழ் மக்களின் இலக்கிய ரசனையையும் சிந்தனையையும் பாதித்த எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனும் ஒருவர். இவர் நவீன இலக்கியம், அரசியல், கலை மற்றும் பத்திரிகை உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். தமிழ்ச் சிறுகதை உலகில், இன்றுள்ள காலக் கட்டத்தை ஜெயகாந்தனின் காலம் என்று குறிப்பிடும் அளவிற்கு ஜெயகாந்தன் கதைகள் இலக்கியத் தரமும், ஜனரஞ்சகமும் உடையனவாகத் திகழ்கின்றன.
ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் கடலூரில் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் பிறந்தார். ஜெயகாந்தனின் தந்தை பெயர் தண்டபாணிப் பிள்ளை, தாயார் மகாலெட்சுமி அம்மாள். பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மூவர்ணக் கொடி பிடித்து, பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர் அவர். ஜெயகாந்தன் பள்ளி சென்று கல்வி பயின்றவர் அல்லர். தம்முடைய பதினான்காவது வயதிலேயே சொந்த ஊரை விட்டுச் சென்னைக்கு வந்தார். சௌபாக்கியம் என்ற இதழில் ஆசிரியராக இருந்த பி.சி.லிங்கம் என்ற புலவரிடம் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டார். பின்பு, தமிழ்ப் புலவர் க.சொக்கலிங்கத்திடம் முறையாகப் பாடம் கேட்டுத் தம் மொழியறிவை வளர்த்துக் கொண்டார். கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் கதைகள் எழுதும் மன்னார்குடி நாராயணசாமி என்ற வைதீக பிராமணரிடம் பழகிப் பிராமண மொழியைக் கையாளுவதில் வல்லமை பெற்றார். ஜெயகாந்தன் சிறுவனாக இருக்கும் போதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்ததனால் மார்க்சியச் சித்தாந்தக் கருத்தோட்டம் உடையவராக வளர்ந்தார்.
ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை சௌபாக்கியம் என்ற இதழில், 1950இல் வெளிவந்தது. அது ‘மாதர் நல இலாக்கா’ நடத்திய பத்திரிகை ஆகும். பின்பு தொடர்ந்து வசந்தம் என்ற இதழிலும், விந்தன் நடத்திய மனிதன் இதழிலும், இஸ்மத் பாஷா ஆசிரியராக இருந்த சமரன் என்ற இதழிலும், மாஜினி நடத்திய தமிழன் இதழிலும், பின்னர் விஜய பாஸ்கரன் நடத்திய சரஸ்வதி இதழிலும் தொடர்ந்து எழுதினார். சரஸ்வதி இதழில் எழுதும் பொழுதுதான் இவர் எழுத்தாற்றல் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. அதன் பின்னர் வெகுஜன இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி என்பவற்றில் எழுதத் தொடங்கினார்.
- எழுத்து வளர்ச்சி
தொடக்கத்தில் ஜெயகாந்தன் எழுத்துகள் தத்துவ நோக்குடையனவாகவும் பரிசோதனை முயற்சிகளாகவும் அமைந்தன. சரஸ்வதியில் வெளியான கதைகள் பாலுணர்ச்சி பற்றிப் பேசுவன. கண்ணம்மா, போர்வை, சாளரம், தாம்பத்தியம், தர்க்கம் போன்ற கதைகள் இதற்குத் தக்க சான்றுகளாகும். இவை தரமானவை என்றாலும் ஜனரஞ்சகமாக அமையவில்லை. அதற்கு அடுத்து வந்த காலக் கட்டத்தில், அவர் தம் எழுத்துகளை ஜனரஞ்சகமாக அமைத்துக் கொண்டார். ஜெயகாந்தன் தொடக்கக் காலத்தில் சிறுகதை படைப்பதிலேயே மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்திருக்கிறார். 1958ஆம் ஆண்டு, ஒருபிடி சோறு என்ற அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. விந்தனின் தமிழ்ப்பண்ணை பதிப்பகம் அதை வெளியிட்டது. தி.ஜ.ர. அத்தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியுள்ளார். அத்தொகுதிக்குக் கண்ணதாசன் கவிதையில் புகழாரம் சூட்டியுள்ளார். சிறுகதை மன்னன் என்று சுட்டும் அளவிற்கு, சிறுகதைப் படைப்புகளில் தன் திறமையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளார் ஜெயகாந்தன். ‘தமிழ்நாட்டில் இன்றுவரை தோன்றியுள்ள மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலருள் ஜெயகாந்தன் ஒருவர்’ என்று கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால், காலம் செல்லச் செல்ல ஜெயகாந்தன் சிறுகதை எழுதுவதைக் குறைத்துக் கொண்டு நாவல் மற்றும் குறுநாவல் படைப்பில் ஆர்வம் காட்டலானார். ஆனாலும் கூட, அவர் படைத்த சிறுகதைகள் இன்றும் அவர் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன.
- கையாண்ட இலக்கிய வகைகள்
ஜெயகாந்தன் சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற இலக்கிய வடிவங்களைப் படைத்ததுடன் நின்றுவிடாமல், சுவை ததும்பும் கட்டுரைகளையும், ஆழமான அறிவுபூர்வமான கட்டுரைகளையும் படைத்துள்ளார். அவற்றில் சுயதரிசன, சுயவிமரிசனக் கட்டுரைகளும் உண்டு. மேலும் அரசியல், சமூகம், கலை இலக்கியம் மற்றும் பத்திரிகை அனுபவம் என்று கட்டுரைகளின் பொருள் விரிந்து பரந்ததாக அமைந்துள்ளது. ஜெயகாந்தன் சில ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார். திரைப்படக் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் சிறந்துள்ளார். ஜெயகாந்தன் சிறந்த மொழி பெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார். ராமன் ரோலண்ட் எழுதிய நூலை மகாத்மா என்ற பெயரிலும், புஷ்கின் எழுதிய நூலைக் கேப்டன் மகள் என்ற பெயரிலும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அவருடைய சிறுகதைகள் மற்றும் நாவல்கள் அனைத்திந்திய மொழிகளிலும், உலக மொழிகள் பலவற்றிலும் குறிப்பாக ஆங்கிலத்திலும், உக்ரைன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜெயகாந்தன் தம் சிறுகதைத் தொகுப்புகளுக்கும் நாவலுக்கும் எழுதிய முன்னுரைகள் விமர்சனப் பார்வையில் அமைந்து சிறந்தன. அவை அனைத்தும் ஜெயகாந்தன் முன்னுரைகள் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டு 1978இல் வெளிவந்தன. ஜெயபேரிகை என்ற நாளிதழிலும், ஞானரதம், கல்பனா என்ற இலக்கிய இதழ்களிலும் இறுதியாக நவசக்தி நாளிதழிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
ஜெயகாந்தன் 13 சிறுகதைத் தொகுதிகளும், 25-க்கும் மேற்பட்ட குறுநாவல்களும், 17 நாவல்களும், 25 கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். ஒருபிடி சோறு (1958), இனிப்பும் கரிப்பும் (1960), தேவன் வருவாரா? (1961), மாலை மயக்கம் (1962), சுமை தாங்கி (1962), யுகசந்தி (1963), உண்மை சுடும் (1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969), குருபீடம் (1971), சக்கரம் நிற்பதில்லை (1975), புகை நடுவினிலே (1990), உதயம் (1996) ஆகியன ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுதிகளாகும். Game of Cards (1969) என்பது ஆங்கில மொழியில் வெளியான சிறுகதைத் தொகுதியாகும். ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்ற பெயரில் இவருடைய சிறுகதைகள் 15 அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, 1973இல் வெளியாகின. அதூரே மனுஷ்யா (1989) என்ற பெயரில் இந்தி மொழியில் இவருடைய மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுதி வெளியாகி உள்ளது. வாழ்க்கை அழைக்கிறது ஜெயகாந்தனின் முதல் நாவலாகும். பாரிஸுக்குப் போ, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சுந்தரகாண்டம், ஜெய ஜெய சங்கர என்பன இவருடைய புகழ்பெற்ற நாவல்களாகும். கைவிலங்கு, விழுதுகள், யாருக்காக அழுதான், ரிஷிமூலம், கோகிலா என்ன செய்துவிட்டாள், சினிமாவுக்குப் போன சித்தாளு, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து போன்றவை இவருடைய குறுநாவல்களுள் சிலவாகும். ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள், ஒரு பிரஜையின் குரல், யோசிக்கும் வேளையில் என்பன இவருடைய கட்டுரை நூல்களுள் சிலவாகும்.
ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வையில் மார்க்சியமும் உண்டு. ஆன்மிகமும் உண்டு. இரண்டு வேறுபட்ட தளங்களிலும் கிடைத்த அனுபவங்களை அவர் தம் கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் மார்க்சிய அரசியல் பார்வை உடையவராக இருந்தாலும் காங்கிரசையும் விரும்பியுள்ளார். லெனினைப் போற்றும் இவர், காமராஜரையும் போற்றுகிறார். பாரதி, காந்தி, விவேகானந்தர் ஆகியோர் எழுத்துகளில் நல்ல பரிச்சயம் உடையவர். ஓங்கூர் சாமியார் என்பவரோடு தொடர்பு கொண்டு, சிலகாலம் சித்தர் மரபில் பிடிப்புக் கொண்டிருந்தார். திரைப்படத் துறையிலும் நாட்டம் கொண்டு அதில் ஈடுபட்டு விருதுகளும் பெற்றுள்ளார். அத்துடன், அவர் உரத்த ஆளுமை, விரிவான வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றவராகவும் திகழ்கிறார். இடைவிடாத படைப்பாக்கம் உடையவராகத் தனித்திறன் பெற்று விளங்குகிறார். ஜெயகாந்தனின் ஆளுமையின் பெரும் பகுதி அவருடைய புற உலகத் தொடர்பால் கிடைத்தது. ஜெயகாந்தன், ஒரு முற்போக்கு எழுத்தாளராவார். மனிதனுக்கு மனிதன் கொண்டிருக்கும் நேசம், உள நெகிழ்வு, வாழ்க்கையில் ஒருவனுக்கு இருக்கும் பற்று, ஒருவரின் துயர் போக்க மற்றொருவர் பாடுபடுவது -இதுவே முற்போக்கு எழுத்துக்கு இலக்கணம் என்று மாலை மயக்கம் சிறுகதைத் தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இவ்விலக்கணத்திற்கு அவர் மிகப் பொருத்தமானவராகத் திகழ்கிறார். புதுமைப்பித்தனுக்கு அடுத்து ஏற்புக்கும் மறுப்புக்கும் அதிக அளவு இலக்கானவர் இவர்தான்.
1964இல் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் இந்திய ஜனாதிபதியின் விருதினைப் பெற்றது. 1972ஆம் ஆண்டு சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் சாகித்திய அக்காதெமி விருதினைப் பெற்றது. 1978இல் அது திரைப்படமாக வெளிவந்தபோது சிறந்த திரைக்கதைக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றது. அதே ஆண்டு அவரது இமயத்துக்கு அப்பால் என்ற நாவல் சோவியத் நாடு நேரு விருது பெற்றது. 1979ஆம் ஆண்டு கருணை உள்ளம் என்ற திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த கதைக்கான தமிழ்நாடு அரசு விருதினைப் பெற்றது. 1986இல் ஜெய ஜெய சங்கர நாவலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதும், சுந்தரகாண்டம் நாவலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜ சோழன் விருதும் கிடைத்தன. கடந்த ஓரிரு ஆண்டுகளாக சாகித்திய அக்காதெமியின் உயர் சிறப்பிற்குரிய பெல்லோசிப் என்ற இடத்தையும் பெற்றுள்ளார்.
2005ஆம் ஆண்டில் இந்திய இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதும் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் எழுத்தாளர் அகிலனுக்குப் பிறகு இவ்விருதினைப் பெறும் சிறப்பிற்குரியவராகத் திகழ்கிறார். இவ்வாறு ஜெயகாந்தன் தமிழக அளவிலும், இந்திய அளவிலும், ஆசியக் கண்ட அளவிலும் பல விருதுகளைப் பெற்றுச் சிறந்துள்ளார். 1980, 1983, 1984 ஆம் ஆண்டுகளில் சோவியத் ரஷிய நாட்டின் அழைப்பின் பேரில் ரஷியப் பயணம் மேற்கொண்ட சிறப்பும் இவருக்கு உண்டு.