தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படைப்பாக்க உத்திகள்

  • 6.4 படைப்பாக்க உத்திகள்

    ஜெயகாந்தன் ‘கலை கலைக்காகவே’ என்ற நோக்கம் உடையவர் அல்லர். ‘கலை வாழ்க்கைக்காக’ என்ற நோக்கமுடையவர். ஒருபிடி சோறு, இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, சுமைதாங்கி, உண்மை சுடும், சுயதரிசனம் என்ற தொகுதிகளில் உள்ள சிறுகதைப் படைப்புகளில் முக்கியமாக வாழ்வியல் போராட்டங்கள், வர்க்க முரண்பாடுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஏழைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இறைவனால் உருவாக்கப்படுவன அல்ல. மனிதனால் விளைவன என்று வர்க்கப் பேதத்தைத் தம்முடைய கதைகளில் அடையாளம் காட்டுகிறார். ஜெயகாந்தன், தம் படைப்பாக்க நோக்கிற்கேற்பத் தம் நடையையும், படைப்பாக்க உத்திகளையும் அமைத்துக் கொண்டுள்ளார்.

    6.4.1 நடை

    ஜெயகாந்தனின் நடை கருத்தாழம் மிக்கது; விறுவிறுப்பானது; வேகமானது; கவர்ச்சியான உணர்ச்சித் துடிப்புள்ள தம் நடையின் மூலம், அவர் வாழ்வின் அவஸ்தைகளை - முக்கியமாக அவலங்களை மனத்தில் பதியும் முறையிலே சித்திரித்துள்ளார். அதாவது, இவருடைய நடை, படிப்பவரிடத்து அவர் ஏற்படுத்த விரும்பிய உணர்வை ஏற்படுத்தி விடுகின்றது. ஜெயகாந்தன் நடை உரத்துப் பேசும் நடை. ஆனாலும், அதில் ஓர் இனிமை இருக்கிறது. மிக வலுவாய் முடுக்கிவிட்ட தந்தியில், கனமான வில்லிழுப்பால் வரும் நாதம் போல் மிடுக்காய்ச் செல்கிறது அவருடைய நடை. தந்தி அறுந்துவிடுமோ என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. அறாத பேருறுதி அதற்கு இருக்கிறது. ஜெயகாந்தன் பலரும் பயன்படுத்தத் தயங்கும் சொற்களைத் தம் நடையின் ஊடே அங்கங்கே எடுத்தாண்டுள்ளார். அவர், பல இடங்களில் பேச்சுத் தமிழை எடுத்தாண்டுள்ளார். அதைப் பற்றி அவர் கூறும் போது, ‘பிறந்த குழந்தையின் உயிர்தான் சுத்தம் ; உடம்பு அல்ல. அதுமாதிரி என்னிடம் பிறக்கிற கதைகள் இலக்கியச் சுத்தம் உடையவை. மொழிச் சுத்தம் உடையவை அல்ல. என் கதைகள் நஞ்சுக் கொடியோடு, நாற்ற நீரோடு, உதிரக் காட்சியோடு, உரத்த குரலுடன் பிறக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

    ஜெயகாந்தன் கையாளும் தொடர்கள் மிக நீண்டவை. அந்த நீண்ட தொடர்கள் சொல்லப்படும் செய்திகளுக்கு ஒரு செறிவையும், குவி மையத்தையும் கொடுத்து வாசகர்களைக் குறிப்பிட்ட நோக்கு நிலைக்கு இழுத்துச் செல்ல உதவுகின்றன. ஜெயகாந்தன் நடையின் மற்றொரு சிறப்பு தர்க்க வாத முறையாகும். காரண காரிய முறைப்படி அமைந்த வேகமான விவாதமும், இடையிடையே பொறி பறப்பது போன்ற சிந்தனைகளும், புதுமையாகப் புகுத்தப்பட்ட சொற்பிரயோகமும் ‘இது ஒரு தனி நடை’ எனப் பிரகடனப் படுத்துகின்றன.

    அக்கினிப் பிரவேசம் கதையில், கதைநாயகி மழையில் நனைந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்பதை வர்ணிக்கும் போது இவருடைய நடை வழக்கமான நடையிலிருந்து வேறுபட்டுள்ளது. ‘...புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்பொழுது மழையில் நனைந்து ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும், பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில் அப்படியே தூக்கிக்கொண்டு போய்விடலாம் போலக் கூடத் தோணும். ’இப்படி இந்நடை இலக்கியப் பாங்காக அமைந்துள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இவருடைய பல கதைகளில் சென்னைப் பேச்சுத் தமிழ் இடம்பெற்றுள்ளது. பார்ப்பனக் குடும்பத்தைப் பற்றிய கதைகளில் பார்ப்பனத் தமிழ் இடம்பெற்றுள்ளது.

    சில இடங்களில் ஜெயகாந்தன் நடையில் தத்துவப் பாங்கும் உள்ளது. சான்றாக ஒன்றைக் காணலாம். ‘ஆயிரம் விழுதுகள் இருக்கட்டுமே, ஒரு மூலமரம் தழைக்க முடியுமா’ என்றும், 'பாவம் மனிதர்கள்! சாவு வரும் வரை, அதற்குள் செத்து விடமாட்டோம் என்று நம்பி, சாவு விரித்த வலையில் நடந்து கொண்டே செல்கிறார்கள். பிறகு என்றோ ஒரு நாள் மரணம் என்னும் மாய நிழலாட்டத்தின் கீழே சிக்கி மறைந்து விடுகிறார்கள்’ என்றும் ஆலமரம் கதையில் நிலையாமைத் தத்துவத்தைப் பேசியுள்ளார்.

    6.4.2 முரண்

    ஜெயகாந்தன் கதைகளில் முரண் என்ற உத்தி பரவலாகக் காணப்படுகிறது. அதாவது, எந்த ஒரு வாழ்வியல் பிரச்சினையையும் உடன்பாடு, எதிர்மறை என்ற இரு நோக்குகளில் தம் கதைகள் மூலம் பார்த்துள்ளார் ஜெயகாந்தன். ஒருவருக்கு உடன்பாடாக இருக்கும் ஒன்று இன்னொருவர் வாழ்க்கைக்குப் பொருந்தாது போய்விடும். அவரவருக்கு எந்தக் கருத்தோட்டம் ஏற்புடையதோ, அதன்படி வாழ்வது அவரவர்களுக்குப் பொருந்தும். அதை வற்புறுத்தச் சமுதாயத்தில் யாருக்கும் உரிமை இல்லை. ஒருமித்த கண்ணோட்டம் என்பதை மனிதர்களிடையே காணுதல் இயலாது என்பதைத் தம் சில படைப்புகளின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன்.

    இருளைத் தேடி என்ற கதையில் இருவேறு பெண்களைப் படைத்துள்ளார். ஒரு பெண் இருளில் தொழில் நடத்துபவள். மற்றொரு பெண் இருளில், ஒளி நிறைந்த மின் விளக்கு முன்னால் நிர்வாணமாக நிற்பவள். அவளைப் பார்த்துப் பல ஆண்கள் சித்திரம் வரைவர். இதை அவள் ஒரு தொழிலாக மட்டுமன்றிக் கலைப்பணியாகவும் நினைக்கிறாள். இரண்டு பெண்களும் இருளில் தொழில் செய்தாலும் இருவரின் நோக்கங்களும் வேறு என்று காட்டுகிறார் ஜெயகாந்தன். இவை, ஒரே கதைக்குள் படைக்கப்பட்ட இரு முரண்பட்ட பாத்திரங்களாகும்.

    ஜெயகாந்தன் இரு மாறுபட்ட அல்லது முரண்பட்ட கதைக் கருக்களைத் தேர்ந்தெடுத்துக் கதைப்படுத்துவதும் உண்டு. அதற்கு யுகசந்தி, உடன்கட்டை, ஆளுகை, பிம்பம் என்ற கதைகளைச் சான்றுகளாகச் சுட்டலாம். யுகசந்தி கதையில், விதவை மறுமணத்தை வற்புறுத்தும் ஜெயகாந்தன். அதே தொகுதியில் உடன்கட்டை கதையில், மணமகன் திருமணத்திற்கு முன் இறந்துவிட, கதைநாயகி அவனுக்காக விதவைக் கோலம் பூணுவதாகக் காட்டுகிறார். இரண்டு கதைகளையும் அடுத்தடுத்துப் படிக்கும் வாசகர்கள், ஆசிரியர் எக்கருத்துத் தளத்தில் இயங்குகிறார் என்று புரிபடாமல் திணறுவர். யாருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை அப்படியே செய்ய விடுவதுதான் நல்லது. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்ய விரும்பினாலும் கைம்மைக் கோலம் பூண்டாலும் அது அவளுடைய தனிப்பட்ட அல்லது மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். சமூகம், அவர்கள் மீது தன் கருத்தைத் திணிக்கக் கூடாது என்பதே ஜெயகாந்தனின் வாதம். அதேபோல், பிம்பம், ஆளுகை என்ற கதைகள் சமூக முரண்களுக்குக் காட்டுகளாக அமைகின்றன. பிம்பத்தில், கணவனை இழந்த பெண் 10ஆண்டுகளாகியும் அவனை மறக்க இயலாது மறுமணம் செய்துகொள்ள மறுப்பதும், ஆளுகையில், மனைவியை இழந்த ஆண் ஒரே மாதத்தில் மறுமணம் செய்து கொள்வதும் சுட்டப்படுகிறது. இதுவும் அவரவர் மனப்பக்குவத்தையும் தேவையையும் குறித்த ஒன்று என்று ஜெயகாந்தன் சுட்டிக் காட்டுகிறார். இப்படி வாழ்வியல் முரண்களை, முரண் உத்தியாகத் தம் கதைகளில் அவர் பதிவு செய்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:04:18(இந்திய நேரம்)