Primary tabs
-
6.3 ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வை
ஜெயகாந்தன் மக்களுக்காக மக்களைப் பற்றி எழுதுபவர். இவருடைய எழுத்துகள் பொழுதுபோக்கு எழுத்துகள் அல்ல. ‘என் கதைகள் இருந்து பொழுதைக் கழிக்கவும், உயிர் சுமந்து நாட்களைப் போக்கவுமான பொழுதுபோக்கு இலக்கியம் அல்ல’ என்கிறார் ஜெயகாந்தன். அவர் கதைகள் - அவரே சொல்வது போல - சமுதாயத்தை வெளிப்படுத்திக் காட்டும் கருவியாய், கண்ணாடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய் அமைந்திருக்கின்றன. சமுதாயத்தில் அடக்கப்பட்டவர்கள், சுரண்டப் பட்டவர்கள், அநீதிக்கு உள்ளானவர்கள் ஆகியோர் பக்கம் சார்ந்து தன் படைப்புகளைத் தந்துள்ளார் ஜெயகாந்தன். இவர்களையெல்லாம் தம் கதைப்பாத்திரங்களாகப் படைத்து, அவர்களுக்கு இலக்கிய அந்தஸ்து தந்துள்ளார். அதன் மூலம் அவர்களுடைய பிரச்சினைகளை மக்கள் முன் எடுத்துரைத்துச் சிந்திக்க வைக்கின்றார். சமூகத்தில் உள்ள பழைய பழக்கவழக்கங்களையும், சமூக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள கருத்துகளையும் வன்மையாகத் தன் கதைகள் மூலம் கண்டித்துள்ளார்.
ஜெயகாந்தனின் மனிதநேயம் பரந்துபட்டது. ஆண்மை நீக்கப்பட்ட காளை மாடுகளையும், நகராட்சி வண்டியில் பிடித்துச் செல்லப்பட்ட தெரு நாயையும் தம் மனித நேய எழுத்தில் அழியாத ஓவியமாய்ப் படைத்துக் காட்டியுள்ளார். பால்பேதம், இதோ ஒரு காதல் கதை என்பவை இரண்டும் மாட்டைப் பற்றியும், தோத்தோ, நிக்கி ஆகியவை இரண்டும் நாயைப் பற்றியும் எழுதப்பட்ட கதைகளாகும். இவற்றில், ஆதரவு இல்லாத தனிமை ஊடுருவி இருக்கிறது. இக்கதைகளில் எல்லாம் மாட்டையும், நாயையும் மட்டுமே பேசியிருப்பதாகக் கருத முடியாது. அவற்றை விடக் கேடான நிலையில் வாழும் மனிதனைப் பற்றியே பேசியுள்ளார்.
டிரெடில் என்ற கதையின் நாயகன் விநாயக மூர்த்தி ஓர் அச்சகத் தொழிலாளி. அவன் இயந்திரத்திடம் பழகிப் பழகி இயந்திர கதியிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தன் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அச்சகமே தன் உறைவிடமாக, உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறான். அவனுக்குத் திருமணம் நிச்சயமானது. ஆனால், சக்திக்கு மீறிய உழைப்பு அவனைத் திருமண வாழ்விற்குப் பொருந்தாதவனாக்கி விடுகிறது. அதனால் திருமணம் நின்று விடுகிறது. இக்கதையில், ஜெயகாந்தன் ஒரு தொழிலாளியின் அந்தரங்கப் பிரச்சினையை மனித நேயத்தோடு கண்டு உணர்ந்து எழுதியுள்ளார்.
போர்வை என்ற மற்றொரு கதையில் வரும் கோபாலன் மன வக்கிரம் பிடித்தவன். அவன் ராஜம் என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தான். சரசா என்ற பெண் குளிக்கும் போது ரகசியமாகப் பார்க்கிறான். இப்படிப்பட்ட கீழ்மையான குணம் உடைய அவன், நிர்வாணமான பைத்தியக்காரியைப் பார்க்கும்போது, தலைகுனிந்து, தன் வேட்டியைக் கழற்றி அவளிடம் கொடுத்து அவள் நிர்வாணத்தை மறைக்க முயல்கிறான். கயவனாக இருந்தாலும் அவனிடமும் மனிதாபிமானம் இருக்கிறது என்று காட்டுகிறார் ஜெயகாந்தன். இதுபோன்றே, ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில், எத்தனைக் கோணம் எத்தனைப் பார்வை என்ற கதைகளையும் மனிதாபிமானத்தை மையமாக வைத்துப் படைத்துள்ளார்.
பெண்களைப் பற்றிய ஜெயகாந்தன் சிந்தனைகளை அவரது படைப்புகள் முழுவதிலும் பார்க்க முடியும். ஜெயகாந்தன் பார்வையில் இந்தியப் பெண்கள் எல்லாரும் அசோக வனத்துச் சீதைகள். அதாவது, குடும்பத்திற்குள் சிறைப்பட்டவர்கள். பெண் என்பவள் சமூகத்தின் கைதி மாதிரிக் கண்காணிக்கப்படுகிறாள். இரண்டு பக்கமும் அறியாமை அவதூறு என்கிற வேலியைப் பற்றிக் கொண்டு, அதன் வழியே இப்பக்கம் அப்பக்கம் திரும்பாமல் நடந்து செல்ல அவள் அனுமதிக்கப்படுகிறாள். கொஞ்சம் சுயேச்சையாக அவள் விலகி நடந்தாலும் அந்த முட்கம்பிகள் அவள் மீது கீறிவிடும். கீறிவிடும் என்ற பயமுறுத்தல் சதா சர்வகாலமும் அவளை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கீறிக்கொண்டு விட்டால் இந்தச் சமூகமாகட்டும், அவள் சார்ந்த குடும்பமாகட்டும், புண்ணை ஆற்ற வேண்டும் என்று நினைப்பதே இல்லை. மாறாக, அவளையே பலியாக்கும். அக்கினிப்பிரவேசத்தில், கதைநாயகியைத் தூய்மைப்படுத்த விரும்புகிறாள் அவள் தாய். ஆனால் உறவும் சமூகமும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவே அவள் தனக்குள் சிதைந்து, விடுதலைக்கு வழியில்லாமல், இடையில் கிடைக்கும் சிறு விடுதலையையும் பிறர் தட்டிப் பறிக்க, இறுதியில் புனித கங்கையில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறாள் (சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் ஆகிய நாவல்கள்). அக்கினிப் பிரவேசம் தொடங்கி வைத்த பிரச்சினைகள் பெண் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்ல ; அவை வரலாற்றுப் பிரச்சினைகளும், பண்பாட்டுப் பிரச்சினைகளும் ஆகும். மேலும் அனைத்து மதங்களும், கோட்பாடுகளும் பெண்களை அடிமைப்படுத்த முனைகின்றன என்பதை பிம்பம், ஆளுகை என்ற கதைகள் மூலம் ஜெயகாந்தன் நிறுவியுள்ளார். பெண்களைச் சுய சிந்தனை உடையவர்களாக, தமக்குச் சரி என்று பட்டதைத் தைரியமாகச் செய்பவர்களாக, அறிவாற்றல் உடையவர்களாக வேறு சில சிறுகதைகளில் படைத்துள்ளார்.
பௌருஷம் என்ற கதையில், முறைப் பெண்ணைத் தாலி கட்டிப் பட்டணத்துக்கு அழைத்துச் சென்ற ரிக்சாக்காரக் கணவன், மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றபோது, அவள் புருஷனின் கன்னத்தில் அடித்துவிட்டு, ஊருக்குத் திரும்பி வந்து, முன்பு தன்னை நேசித்த ஒருவனை அடைகிறாள். தன்னைக் கெடுக்க நினைத்த கணவனை ‘அவனும் ஒரு ஆம்பிளையா? அவன் ஆம்பிளையா இருந்தா இல்லே அவனுக்கு நான் பொண்டாட்டியா இருக்க?’ என்று ஆவேசத்தோடு கூறுகிறாள்.
கற்பு நிலை என்ற கதையில், ராஜம் என்ற பெண்ணை மணந்த சங்கரன், வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறான். அவன், நெடுநாள் கழித்து ராஜம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, அவளுடைய தங்கை மீனா, திருமணம் ஆகாமலே விதவைக் கோலத்தில் இருப்பதைப் பார்க்கிறான். அதைக் கண்டு அதிர்ந்த சங்கரன், ‘இது என்ன கோலம்’ என்று கேட்க, தனக்குத் திருமணம் பேசப்பட்டு, கணவனாக வரப்போகிறவன் திடீரென்று இறந்து விட்டதால், தான் கன்னியாகவே விதவைக் கோலம் ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறாள். மேலும், பேச்சோடு பேச்சாக அவனது தகாத செய்கையைச் சுட்டிக் காட்டுகிறாள். ‘என்ன பண்றது. புருஷாளெல்லாம் உங்கள மாதிரி இருக்கிறதாலே, பெண்களுக்கு இதுதான் கெதி. கன்னியாகவே விதவையாகிடணும்’ என்று குத்தலாகச் சொல்கிறாள். மேலும், ‘என் வாழ்க்கை வீணாகியதென்று வருத்தப்படறேளே, முப்பத்து முக்கோடித் தேவர்கள் சாட்சியாய், அக்னி சாட்சியாய், தாங்கள் தாலி கட்டினேளே அந்தப் பொண்டாட்டியின் வாழ்க்கை பற்றி யோசித்தேளோ?’ என்று கேட்கிறாள். திருமணம் என்ற சடங்கோ, சாஸ்திரமோ, சாதியோ, சட்டமோ ஓர் ஆணின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கவில்லை. ஒரு பெண்ணின் ஆன்மீக வாழ்க்கைக்கும் உத்திரவாதம் இல்லை என்ற கருத்தை இக்கதை மூலம் தெரிவிக்கின்றார் ஜெயகாந்தன். இவ்வாறு, ஆணாதிக்கப் போக்கை எதிர்த்துப் பெண்களையே தம் கதைகளில் வாதிட வைத்துள்ளார்.
மனித வாழ்வில் பணம் எவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் மனித வாழ்க்கை எங்ஙனம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஜெயகாந்தன் பல கதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். என்னை நம்பாதே, சலிப்பு, பித்துக்குளி, விளக்கு எரிகிறது, தர்க்கம் ஆகிய சிறுகதைகள் இதற்குச் சான்றுகளாகும். விளக்கு எரிகிறது என்ற சிறுகதையில், எழுத்தாளர் மருதநாயகத்தின் கற்பனையைப் பணம் எந்த அளவு சிதைக்கிறது என்பதை நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
என்னை நம்பாதே என்ற சிறுகதையில், கணவன் எப்படியும் சாகத்தான் போகிறான் என்று தெரிந்தவுடன், அவனுக்கு மேற்கொண்டு வைத்தியம் செய்து காசைச் செலவு செய்வதைவிட, அவன் இறந்தவுடன் தான் அனாதையாக நிற்கப்போவதை நினைத்து மனைவி கணவனுக்குத் தெரியாமல் சேமிக்கத் தொடங்குகிறாள். அதே சமயம், சாகக் கிடக்கும் கணவனும், தான் வாழப்போவது சிலநாள்தானே. அதனால் பணத்தையெல்லாம் மருத்துவருக்குத் தருவதைவிட, தன் அன்பு மனைவியின் பிற்கால வாழ்க்கைக்குப் பயன்படட்டும் என்று அவளுக்குத் தெரியாமல் சேர்த்து வைக்கிறான். இப்படி, செத்துக் கொண்டிருப்பவனை விட, வாழ இருப்பவளின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவல நிலைக்கு மனிதனைப் பணம் தள்ளுகிறது என்பதை இக்கதை வழி ஜெயகாந்தன் எடுத்துக் காட்டுகிறார்.