தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.3 கதை மாந்தர்கள்

  • 1.3 கதை மாந்தர்கள்

    சிறுகதை, புதினம் இரண்டிலுமே அவற்றின் சிறப்புக்கு ஒரு வகையில் காரணமாவது ஆசிரியர் படைக்கும் கதைமாந்தர்கள் ஆவர். இவர்கள் படைப்பாளியின் கற்பனையிலே படைக்கப்பட்டாலும் உயிருள்ளவர் போல் அழியாச் சித்திரமாய் உள்ளத்திலே பதிந்து விடுகிறார்கள். ஆர்.சூடாமணியின் பல சிறுகதைகளில் கதைமாந்தர் தமக்கே உரிய சிறப்புக் குணங்களினால் சிறந்து நிற்கின்றனர். படைப்புக் கலைஞர்கள் தாம் பார்க்கின்ற மனிதர்கள், அவர்கள் நடை, உடை, பாவனைகள், மற்றவர் சொல்லக் கேட்டு அறியும் அனுபவங்கள், தம்மைப் பாதித்த மற்றவர்களின் இயல்புகள், குணங்கள், சிறப்புகள் இவற்றை எல்லாம் கலை உணர்வோடு தக்க இடத்தில் பொருத்தும் போது சிறந்த கதை மாந்தர்கள் உருவாகின்றனர்.

    1.3.1 சிறுவர்கள் குழந்தைகள்

    சூடாமணியின் சிறுகதைப் படைப்புகளில் பலவகையான கதைமாந்தர்கள் சிறப்பிடம் பெற்று நம் நினைவில் நிற்கின்றனர். ஆசிரியர் குழந்தைகள், சிறுவர்கள் மனநிலையை நன்கு உணர்ந்தவராய்த் தாம் இருப்பதையும், அவர்கள் எப்படிப்பட்ட மனநிலையையும் மாற்றி மனத்தை லேசாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கும் இயல்பு படைத்தவர்கள் என்பதையும் தம் படைப்புகளில் அழகாக காட்டுகிறார்.

    • சுதந்திரம்

    குழந்தைப் பருவத்தில் இருக்கும் சுதந்திரம் வளர வளரப் பறிபோய் விடுகிறது என்ற உண்மையை உணர்ந்த ஒரு பெண்ணை நடன விநாயகர் (கல்கி - 1996) கதையில் பார்க்கிறோம். தான் இழந்த சுதந்திரத்தின் அருமையை அப்போது உணர்கிறாள் நந்தினி.

    குழந்தை, சுதந்திரம் ஒரே பொருளில் இரண்டு சொற்கள், என்று தான் இழந்த சுதந்திரத்தைச் சிறுமியிடம் காணும்போது ஆற்றாமையால் வருந்துகிறாள் நந்தினி.

    • தனிமை

    பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளி விட்டு வந்தவுடன் தாயுடன் இருக்க. தன் தாய் அலுவலகம் செல்வதால் தான் மட்டும் தனியே இருக்கும் சூழ்நிலையை வெறுக்கும் சிறுவன் பிரபுவின் மனநிலையை விளக்குவது விட்டுட்டு விட்டுட்டு (கல்கி - 1997) .

    தனியாக இருப்பதை வெறுத்த சிறுவன் பிரபு அதன் எதிரொலியாக சிகரெட் பிடிக்கிறான். அதை எதிர்த்த பெற்றோரிடம் "தனியாக உக்காந்து எனக்குப் போரடிக்கிறது ஸ்கூல்லேருந்து வந்தா வீட்ல அம்மா கிடையாது. வேற யாரும் கிடையாது. எத்தனை நேரம் ராஜு வீட்டுலே போய் உட்கார்ந்திருக்கிறது. அவன் அம்மா எத்தனை நல்ல ஆன்ட்டி. ராஜுவை விட்டுப் போறதே இல்லை. நீதான் என்னை விட்டுட்டு விட்டுட்டுப் போயிடறயே? அப்புறம் நான் என்ன பண்ணா உனக்கென்ன" (பக். 136, சூடாமணி கதைகள்).

    பெற்றோரிடம் இருக்க வேண்டும் என்ற ஆதங்கம், பக்கத்து வீட்டாரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சமூகச் சூழல் எவ்வளவு ஆழமாகச் சிறுவர்களிடம் பதிந்து கிடக்கிறது என்பதையே சிறுவனின் பேச்சில் சுட்டிக் காட்டுகிறார் சூடாமணி.

    1.3.2 பெண்கள்

    பெண்களின் பிரச்சினைகள், அவர்தம் சிறப்பியல்புகள் இவர் சிறுகதைகளில் கருப்பொருள்கள் ஆகின்றன.


     
    • உறுதி

    எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் கணவனால் பெண்படும் துன்பத்தைப் படம் பிடிக்கிறது (நாய், சிறுகதை தினமணி கதிர் - 1988). நாள்தோறும் தன் சந்தேகப் பார்வையாலும் கேள்விகளாலும் மனைவியைத் துளைத்து எடுக்கிறான் கணவன். "இப்படிச் சாக்கடையாய் இருக்கிறதே உங்க மனசு?" என்கிறாள் மனைவி. "என் உத்தரவு இல்லாம நீ எவன் கூடவும் பேசக் கூடாது, என் உத்தரவு இல்லாம நீ வாசப் பக்கமே வரக்கூடாது" என்று சொல்ல, “உன் உத்தரவு இல்லாம நான் மூச்சு விடலாமா? இல்லே அதையும் உன்னைக் கேட்டுக்கிட்டுதான் செய்யணுமா?” என்று வெறுப்பும் இகழ்ச்சியும் மேலிடும் தீக்கோளமாய் மனைவி பதில் சொல்கிறாள். எத்துன்பத்தையும் எதிர் கொள்ளும் உறுதியான மனநிலை கொண்ட பெண்ணை இங்குக் காண்கிறோம்.

    • குற்ற உணர்வு

    இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் வெளியே அலுவல் பார்ப்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. குடும்பத்தில் பெண்ணுக்குரிய கடமைகளாகச் சமுதாயம் நினைத்திருப்பதை மாற்றாமல் இருக்கிறது. இதனால் ஸ்வாதி என்ற பெண்ணுக்கு ஏற்படும் குற்ற உணர்வையும் இன்னல்களையும் எடுத்துரைப்பது விட்டுட்டு, விட்டுட்டு சிறுகதை.
     

    • நேர்மையும் துணிச்சலும்

    அலுவலகம் செல்லும் இளம்பெண் பானுவின் பாத்திரப் படைப்பும், மானேஜர் கார்த்திகேயன் மனைவி விமலாவின் பாத்திரப் படைப்பும் சிறப்பாக அமைவது ‘பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவை’ சிறுகதையில் (கல்கி. 1997). மணமான மானேஜர் கார்த்திகேயன் தன் அலுவலக ஸ்டெனோ பானுவை விரும்புவதும் அவளை அடையத் துடிப்பதும் அதற்கான விலையாகப் பத்தாயிரம் ரூபாய்ப் பட்டுப்புடவையைப் பரிசளிப்பதாகச் சொல்வதும், அவளுக்குச் சினத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. இதை மறுத்தால் நீ வேலையை இழக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்துகிறான். கார்த்திகேயனிடம் பணியவும் கூடாது வேலையும் நிலைக்க வேண்டும் என்று துணிவுடன் செயலாற்றுகிறாள் பானு.

    திட்டமிட்டபடி ஓட்டலுக்கு வரும் கார்த்திகேயன் அங்குத் தன் மனைவியைப் பார்த்துத் திடுக்கிடுகிறான். பானு தன் மனைவியைச் சந்தித்து எல்லா விவரமும் கூறியுள்ளதை அறிகிறான். விமலா கார்த்திகேயனிடம் “உங்க எண்ணம் பலிக்கவில்லை என்று கோபத்தில் இந்தப் பெண்ணை நீங்க வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது மறுபடியும் இவங்க கிட்ட வம்பு பண்ணினாலோ, உங்க நடத்தையைப் பற்றி நானே தில்லியில் உங்க எம்.டிக்குத் தெரிவிப்பேன், இது மிரட்டல் இல்லை” என்று எச்சரிக்கிறாள்.

    தன் கணவனாக இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகின்ற, அத்தகையவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவும் தயாராகின்ற நேர்மையான பெண்ணாக விமலாவைப் படைத்துள்ளார் சூடாமணி.

    • தன்மானம்

    ராஜாமணி பதினெட்டு வயதில் திருமணமாகி 21 வயதில் கணவனால் கைவிடப்பட்டவள். 51 வயது வரை தன் வாழ்க்கையைச் சிரமப்பட்டுக் கழித்தவள். பெற்ற குழந்தையை இழந்து, தந்தையை இழந்து, கணவனாலும் கைவிடப்பட்டு, சமையல் வேலை செய்து காலம் கழித்தவள். அவள் இறந்தபோது வீட்டுச் சொந்தக்காரர் மருமகன் கொள்ளி போடுகிறான். அப்போது ஒருவர், ராஜாமணியின் கணவர், அவனுக்கு நன்றி சொல்கிறார். ராஜாமணி என்ற அந்தப் பெண்ணின் தன்மானம், மரியாதை, கம்பீரம் அனைத்தையும் உணர வைக்கிறார் ஆசிரியர். இதுவரை யாரிடமும் சொல்லாத உண்மைகளை ராஜாமணியின் கணவர் சொல்கிறார்.

    கணவனுக்காக அவள் மூன்றாண்டுகள் அவனுக்கும் சேர்த்து உணவு சமைத்து விட்டுக் காத்துக் கிடந்தாள். அந்த ஏமாற்றம் தந்த துயரம், விரக்தி இவற்றுக்கிடையே முப்பதாவது வயதில் அவளுடைய கணவன் அவளைத் தேடி வந்தபோது அவனைப் புறக்கணிக்க வைத்தது. அவள் கணவனுடன் சென்று வசதியாய் இருந்திருக்கலாம். தன் மனத்துக்குச் சரி என்று தோன்றியதற்கேற்ப முடிவெடுத்து ஏற்றுக் கொண்ட வாழ்க்கை என்பதை மரியாதைக்குரிய, கம்பீரமான அவளுடைய அந்தரங்க பொக்கிஷமாய் வைத்திருந்தாள். அவள் இறந்தபோது அவள் கணவன் தெரிவித்த பின்னரே வாசகர்க்கு உணர்த்தும் உத்தியில் ஒரு பெண்ணின் மனஉறுதி சாம்பலுக்குள் இருக்கும் தீக்கங்குபோல வெளிப்பட்டதை உணர்த்துகின்றார் சூடாமணி. (சாம்பலுக்குள். தினமணி மகளிர் மலர். 1997).

    1.3.3 முதியவர்கள்

    கூட்டுக் குடும்பமுறை மாறிவரும் சூழ்நிலையில் வீட்டு முதியவர்கள் படும் துன்பங்களைக் காட்டுவது நண்பர் திருமலை (கல்கி - 1993).

    • பிள்ளைகள் மனநிலை

    திருமலாச்சாரி தன் நண்பரைப் பார்க்கச் சென்ற பொழுது அவர் முதியோர் இல்லத்தில் இருப்பது தெரிய வருகிறது. அவர் மகன் அவரைப் பற்றி மகா பிடிவாதக்காரர் என்றும், மற்றவர்களுடன் ஒத்துப் போவதில்லை என்றும் விமர்சிக்கிறான். ஆனால், நண்பர் சௌரியோ அப்பாவி, பரம சாது. அவரைப் பற்றிய அவர் மகன் மதிப்பீடும் முதியோர் இல்லத்திற்கு அவரை அனுப்பிய செயலும் நெஞ்சைப் பாரமாய் அழுத்த வீடு வந்து சேர்கிறார். மருமகள் அவரை அன்போடு விசாரிக்க ‘நான் கொடுத்து வைத்தவன்மா’ என்று நெகிழ்ந்து போகிறார். நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்பது போல், எல்லாப் பிள்ளைகளுமே பெற்றவர்களை முதியவர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் நன்றி கெட்டவர்கள் அல்லர், நல்ல பிள்ளைகளும் உண்டு என்ற உண்மையை உணர்த்துவது நண்பர் திருமலை கதை.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 12:11:51(இந்திய நேரம்)