Primary tabs
- 1.2 படைப்பும் சிறப்பும்
சிறுகதை அளவில் சிறியது என்றாலும் அது சொல்லுவதும் உணர்த்துவதும் அதிகம். எளிய உரைநடை வடிவில் அமைவதால் விரைவில் மக்களைச் சென்றடையும் சிறப்பு இவ்விலக்கியத்துக்கு உண்டு. இன்றைய அவசர யுகத்தில் வாசகர் தேவையை நிறைவு செய்யும் இலக்கியமாக இது இருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் அதிகம் பரவியுள்ளது. ‘சிறுகதையில் குதிரைப் பந்தயம் போல் தொடக்கமும் முடிவும் சுவை மிக்கனவாக இருக்க வேண்டும்’ என்பர் செட்ஜ்விக் என்னும் மேலை நாட்டுத் திறனாய்வாளர். சிறுகதைக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு ஒருமைப்பாடு ஆகும்.
ஏதேனும் ஒன்று, ஒரு மனச்சலனம், ஒரு மாற்றம், ஒரு பார்வை, ஒரு கணிப்பு என்ற ஏதாவது ஒன்று மட்டுமே நோக்கமாகக் கொண்டு சிறுகதை நிகழ்வுகள் சுவைபட அமைய வேண்டும். இவ்விலக்கணங்களுக்கு ஏற்றாற்போல் அமைந்து வாசகர்களுக்குச் சுவை பயப்பன ஆர்.சூடாமணியின் கதைகள்.
மன நிலைகள், மன உணர்வுகள் என்று சொல்லப்படும் நிலையும், சுவையுமே சிறுகதை வடிவைச் சிறப்பிக்கின்றன. மனித சமுதாயத்தைப் பாதிக்கும் சில உணர்வுகள் சொல்லப்படும் நிலையில் கருத்து விளக்கக் கதைகளாகின்றன.
காலிழந்த ஒரு மனிதன், அவனுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. உணர்ச்சிகள் உண்டு. ஆனால் அவனை யாரும் உணர்ச்சி உள்ளவனாகவே நினைக்கவில்லை. தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டக் கூடிய ஒரு வடிகாலாகவே அவனை நினைக்கின்றனர் என்பதை விளக்கும் கதை வடிகாலன் (அமுதசுரபி தீபாவளி மலர். 1997.)
தொலைக்காட்சி விளம்பரங்கள் மக்கள் கவனத்தைச் சுண்டி இழுக்கின்றன. இந்த விளம்பர மோகத்திற்குக் குழந்தைகள், சிறுவர், முதியவர், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் அடிமையாகின்றனர். விளம்பரம் பார்த்துப் பார்த்துத் தன் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இளம்பெண் ஒருத்தி ஆசை வழி மனம் செல்ல எவ்வாறு அல்லல்படுகிறாள் என்பதை எடுத்துரைப்பது ஆசை வழி மனம் செல்ல (கல்கி. 1998.)
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த அடிப்படையில் வெளிவரும் சிறுகதைகளை உணர்வுச் சிறப்புக் கதைகள் என்கிறோம். குறிப்பிட்ட ஓர் உணர்வு எழுவதற்கான சூழல், உணர்வின் விளைவு, உணர்வு தரும் அனுபவம் என்று பல கோணங்களில் இவ்வகைக் கதைகளைப் பாகுபாடு செய்யலாம். பெண்ணின் உணர்வுகள், முதியவர் உணர்வுகள், இளைஞர் உணர்வுகள், சிறுவர் உணர்வுகள் என்று உணர்வுகளை முதன்மைப்படுத்தி ஆசிரியர் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். எனினும் இவர் கதைகளில் சிறுவர் சிறுமியர் உணர்வுகளைச் சொல்லும் பாங்கு நம் மனத்தைத் தொடுகிறது. இயல்பாக அமைவதால் அவை சிறந்த சிறுகதைகளாகி விடுகின்றன. பூப்பெண் என்ற கதை மிகச் சிறந்தது. (இந்தியா டுடே. 1997.)
- பூப்பெண்
ஓர் அம்மன் கோவில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி. மருத்துவ மனைக்குச் சென்று கொண்டிருந்த காவேரியம்மாள் தன் மகனுக்குப் பிடிக்குமே என்று பிஞ்சு வெண்டைக்காய் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பூ விற்கும் சிறுமி “என்ன ஆயா பூ வாங்கலியா? காய் மட்டும் தான் வாங்குவியா?” என்று வலிய அழைக்கிறாள். உரையாடல் தொடர்கிறது. பேச்சு வாக்கில் காவேரியம்மாள் சிறுமியைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். பூவுக்குப் பணம் கொடுத்த பின்னர் ‘உன் பேரென்ன?’ என்று கேட்கிறாள். சிறுமி நிமிர்ந்து பார்த்தாள் ‘என்ன அப்படிப் பார்க்கறே?’ ‘உன் பேரென்ன?’ ‘இந்திரா’. அன்று முதல் வாரம் தோறும் சிறுமியிடம் ஒரு முழம் பூ வாங்கும் பழக்கம் தொடர்ந்தது.
ஒரு நாள் முதியவள் கையில் வைத்திருந்த பூவினால் சிறுமியின் முகம் அதிர்ச்சியில் வாடிவிட்டது. ‘என்னை விட்டுவிட்டு எப்படி வேறொருவரிடம் பூ வாங்கலாம்’ என்று கேட்கிறாள்.‘உன்னிடமே வாங்குவதாக எழுதிக் கொடுத்திருக்கிறேனா?’ என்று கேட்டவுடன் வேதனைப்படும் சிறுமியைக் கறிகாய்க்காரர் சமாதானம் செய்கிறார்.
‘ஏன் பாப்பா? இதுக்குப் போய்ச் சொணங்கிப்போற. அவங்க தர்ற ரெண்டு ரூபாயிலயா நீ மாடி வீடு கட்டப் போற. ஒனக்கும் அவங்களுக்கும் சொந்தமென்ன? பந்தமென்ன! இவங்க என்னவாம் பெசல் உனக்கு?’
“இவங்க மட்டும் தான் என் பேரைக் கேட்டாங்க” இந்த ஒரு வரி பூ விற்கும் பெண்ணின் உணர்வுகளை முழுமையாக வாசகர்க்கு உணர்த்திவிடுகிறது அல்லவா? பூ விற்கும் சிறுமியின் மனத்தில் யாராவது தன் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் என்ற ஏக்கம், தன் பெயரைக் கேட்டதனால் அவர்கள் மீது சொந்தம் கொண்டாடும் உரிமை, எல்லாமே இனி இழந்து விட்டோமோ என்ற வருத்தம் - அனைத்தையும் உணர்த்தும் ஆசிரியர் இத்துடன் கதையை முடித்துவிடவில்லை.
சிறுமி பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த காவேரியம்மாள் மனம் நெகிழ்ந்து போய் ‘காலில் முள் குத்திடிச்சு. சகுனம் சரியில்லை எதிர்ல வந்த குழந்தை கிட்ட அந்தப் பூவைக் கொடுத்திட்டு அப்படியே திரும்பிட்டேன். இந்தாம்மா பொண்ணு, இந்திரா வழக்கம்போல் மொழம் முல்லை கொடு’ பேசிக்கொண்டே தன் கையடக்கப் பர்சைத் திறந்தாள். சிறுமியை நேராகப் பார்க்கவில்லை. பார்த்தால் அழுதுவிடுவோமோ என்று பயமாயிருந்தது - என்று காவேரி பூப் பெண்ணின் மனத்தைப் புரிந்து கொண்ட நிலையைக் குறிப்பதாகக் கதை நிறைவு பெறுகிறது.
சிறுவர்களின் கள்ளம் கபடமற்ற மனநிலை, அன்பையே எதிர்பார்த்து, அன்புக்கு ஏங்கும் மனநிலை, என்று பல கோணங்கள். சிறுவர்களின் மன உணர்வுகள் இவர் சிறுகதைகளில் படம் பிடிக்கப்படுகின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றாற்போல் சிறுவர்களின் உணர்வுகளும் விருப்பங்களும் மாறி நிற்கும் நிலையினைச் சுவைபடச் சொல்லும் சிறுகதை கோடைக் காலக் குழந்தைகள் (சௌராஷ்டிர மணி தீபாவளி மலர் 1994.)
- கோடைக்காலக் குழந்தைகள்
‘நாளுக்கு நாள் வெயில் ஏறும் மே மாதத் தொடக்கம். மோகன், ராஜி இருவரையும் இக்கோடை விடுமுறைக்கு அவர்கள் பெற்றோர் கொடைக்கானலுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியில் அவர்கள் பேச்சும் அதுபற்றியே இருந்தது. வெப்பத்தைத் தணித்துக் கொள்ள, தெருவில் ஐஸ்கிரீம் விற்கும் பையனைக் கூப்பிட்டான் மோகன். மோகனின் வயதுள்ள அச்சிறுவன் ஐஸ்கிரீம் வகைகளைச் சொல்லுகிறான். மோகனும் ராஜியும் ஆளுக்கொரு சாக்கோபார் வாங்கிக் கொண்டார்கள். அம்மா தனக்கு ஐஸ்கிரீம் வேண்டாமென்று சொல்லிப் பணம் கொடுக்க, பெற்றுக் கொண்ட சிறுவன் ‘இன்னிக்கு வியாபாரம் மோசமில்லை’ என்றான். திருப்தியுடன்.
மோகன் ‘நாங்கள்ளாம் ஜில்லுனு கொடைக்கானல் போகப் போகிறோம் தெரியுமா? இங்கே வெயில் சகிக்க முடியலே, எனக்கு வெயில் பிடிக்காது’ என்று அறிவித்தான்.
‘எனக்குப் பிடிக்கும்’ என்றான் ஐஸ்கிரீம் பையன் அமைதியாக. ‘கோடைக்காலமாய் இருக்கிறதனாலதான் ஐஸ்கிரீம் கம்பெனி என்னை வேலைக்கு எடுக்குது. வெயில் நாளில் விற்பனை அதிகம். என்மாதிரி அதிகப்படி ஆளுங்க தேவைப்படும்......
ஐஸ்கிரீம் விக்கிற பணத்தில் கமிஷன் கொடுப்பாங்க. வீட்டுக்குப் போய் அப்பா அம்மா கிட்ட குடுப்பேன். கொஞ்சம் நல்லா சாப்பிடலாம். வெயில் இருக்கிற வரைக்கும் எனக்குக் கவலையில்லீங்க. வெயிலை எனக்குப் பிடிக்கும்!’ என்றான். அவன் மீண்டும் சைக்கிளில் ஏறப்போனபோது அம்மா தனக்கும் ஒரு சாக்கோபார் கேட்டு வாங்கிக் கொண்டாள். காசை வாங்கிக் கொண்டு ‘எப்பவுமே கோடைக்காலமாயிருந்தா எத்தினி நல்லாயிருக்கும்’ என்றான். வாசகர்க்கு உணர்த்தப்படும் உணர்வுகளைக் கதை மாந்தரும் உணர்ந்து கொள்வதைக் கதையின் இறுதிப் பகுதி தெரிவிக்கிறது.
மோகன் மீதமிருந்த சாக்கோபார் குச்சியை வெறித்துப் பார்த்துவிட்டு ஜன்னல் வழியாய் வெளியே வீசி எறிந்தான். இனி உளவியல் சிறப்புக் கதைகளைப் பார்ப்போமா?.
உளவியல் அடிப்படையில் அமையும் சிறுகதைகளையும் இவர் படைத்துள்ளார். எளிமையான உளவியலை எடுத்துரைக்கும் சிறப்பை இவருடைய உளவியல் கதைகளில் காணலாம்.
- ஒரு மனநிலை
ஒரு மனநிலை (தினமலர் தீபாவளி மலர். 1992) என்ற சிறுகதையில் ராதா என்ற பெண்ணின் ஒரு குறிப்பிட்ட மனநிலையை விளக்கி வர்ணித்திருப்பதைப் பாருங்கள்.
முதன் முதலில் பஸ்சில்தான் ஒருவன் அவளைப் ‘பாட்டி’ என்று கூப்பிட்டான். ‘பாவம் நின்றுகிட்டே வரீங்களே பாட்டி இப்படி உட்காருங்க’ என்று எழுந்து இடம் விட்டான். இப்படித் தொடங்குகிறது ஒரு மனநிலை என்ற சிறுகதை. முதன் முதலில் தனக்கு வயதாகி விட்டதென்று அறிந்து உணரும் மனநிலையின் வியப்பு, அதிர்ச்சி, வருத்தம், இலேசான உலுக்கல் என்று படிப்படியாக அது விரிவதைச் சித்திரிக்கிறது. இச்சிறுகதை, கற்பனையின் உச்சமாக ராதா நினைப்பதைப் பாருங்கள் ‘ஒரு குழந்தையை தீர்க்காயுசாய் இரு என்று வாழ்த்தும்போது நரையும் டென்ச்சரும், கைத்தடியும் கண்ணாடியும் உனக்கு வரட்டும் என்று தானே அர்த்தம்? முதுமையை ஏற்றுக் கொள்ள அஞ்சும் மனம் எப்படிக் கற்பனை செய்கிறது பாருங்கள். முதலில் ஏற்கத் தயங்கிய மனம் காலப் போக்கில் பக்குவமாக மாறி விடுகிறது. காலம் மனநிலையை மாற்றும் ஆற்றல் பெற்றதல்லவா?
- உள் உணர்வு
ஜெயகுமாரி நிர்மலா வீட்டில் வேலை செய்யும் சிறுமி. அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று ஒற்றை விரலை உயர்த்திக் காட்டுகிறாள். எதனால் இவ்வாறு செய்கிறாள் என்பதை உளவியல் ரீதியில் விளக்கும் கதைதான் உயர்த்திய விரல் (கல்கி. தீபாவளி மலர். 2000.) இவள் முன்னால் வேலை செய்த வீட்டின் எஜமானி முதல் நாள் இரவு 8 மணிக்குக் கொல்லைக் கதவைப் பூட்டி விட்டால் மறுநாள் காலை கதவைத் திறக்கும் வரை காத்திருக்க வேண்டும். அடக்கப் பார்த்துப் பார்த்துத் தவிக்கும் நிலை, இரவு நெருங்குகிறதே என்று பீதி கொள்ளும் நிலை என்று சிறுமி பட்ட துன்பமும் அதன் விளைவுகளும் கூறப்படுகின்றன. இப்போது இந்தப் புதிய வீட்டில் இருக்கும் சுதந்திரம் தான் அடிக்கடி ஒற்றை விரலை உயர்த்தச் சொல்கிறது. எப்போது வேண்டுமானாலும் கழிப்பறை செல்லலாம் என்ற சுதந்திரத்தை இப்படி அனுபவிக்கிறாள் என்று உளவியல் ரீதியில் சிறுமியின் உணர்வுகள் விளக்கப்படுவதைக் காணலாம்.
- உள் உறுத்தல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை நோயின் கடுமை தாள முடியாமல் மூட்டைப் பூச்சி மருந்தைக் குடித்து இறந்து போகிறார். அவருடைய மகன் சேது தந்தையின் விருப்பத்தைப் புறக்கணித்து விட்டு ஹேமாவைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அவர் விருப்பம்போல் நடந்து கொண்டிருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பாரோ? இது மகனின் உள் உறுத்தல். தந்தையின் சொல்லை மீறி ஆன்மீகம் தேடி ஆசிரமம் சென்ற மகள் தாரிணி, தான் பணிவிடை செய்து கொண்டு பக்கத்தில் இருந்திருந்தால் அப்பாவைக் காப்பாற்றியிருக்கலாமோ என்று வருந்துகிறாள். மருமகள் ஹேமாவை ஹார்லிக்ஸ் கொண்டு வரத் தாமதமானதென்று மாமனார் கோபிக்க, பதிலுக்கு ஹேமாவும் ‘நான் போட்டால்தான் சோறு‘ என்று சொல்லிவிட்டாள். புற்றுநோயால் இறந்தாரென்று உலகம் நினைக்கிறது. ஆனால் மகன், மகள், மருமகள் மூவர்க்கும் அவரவர் செய்த தவறு அவரவர் உள்ளத்தை உறுத்துகிறது என்று உளவியல் ரீதியில் சொல்லப்பட்ட கதை உள் உறுத்தல் (அமுத சுரபி தீபாவளி மலர். 1999.)
1.2.4 புராண இதிகாசக் கதைகள்பெரும்பாலான புராண இதிகாசக் கதைகள் மக்கள் அறிந்தவையே. அத்தகைய கதைகளைப் புதிய கோணத்தில் சிந்தித்துக் கதை படைப்பவர்களில் சிறப்பிடம் பெற்றவர் புதுமைப்பித்தன். தன் அன்று இரவு, சாப விமோசனம், அகலிகை கதைகள் மூலம் புதிய சிந்தனைகளை வாசகரிடையே எழுப்பியவர். சூடாமணியின் சில படைப்புகளிலும் அப்படிப்பட்ட சிந்தனைகளைக் காணலாம்.- தேவகியின் நிலை
தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது மைந்தன் கண்ணன். அவன் மாமன் கம்சனை அழிப்பான் என்பது புராணம் கூறும் செய்தி. திருமாலின் அவதாரமாகக் கண்ணன் இப்பூவுலகில் பிறந்தான் என்பதும் நாம் அறிந்ததே. தேவகியின் வயிற்றில் பிறந்த இந்தத் தெய்வப் பிறப்புக்காக முதல் ஏழு குழந்தைகளைப் பறிகொடுத்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்ற புதிய கோணத்தை (விலை. சதங்கை. 1994.) என்ற இக்கதை நமக்குக் காட்டுகிறது.
கம்சன் அழிந்த பின்னர், சிறை செய்யப்பட்டிருந்த தேவகியும் வசுதேவரும் விடுதலை பெற்று வெளியே வருகிறார்கள். கண்ணனும் பலராமனும் பெற்றோரை அணைத்துக் கொண்டு அழுதனர். தேவகியின் உயிர் நாளங்களிலிருந்து பல ஆண்டுகளாக அழுத்திக் கிடந்த துயரச் சுமை தெறித்து விழுந்தது. தெய்வப் பிறவி தோன்றும் பொருட்டு ஏழு பிஞ்சுகளைப் பெற்றுப் பெற்று உடனுக்குடன் பலி கொடுத்த கொடுமை தேவகியை வாட்டுகிறது.
குழந்தை ஒவ்வொன்றையும் பிறந்த உடனேயே உன்னிடம் கொடுத்து விடுகிறேன் என்று கம்சனுக்கு வசுதேவர் வாக்களித்தது எவ்வளவு கொடுமை! பிறந்த உடனேயே குழந்தையைச் சாகக் கொடுக்கப் போகிறோம் என்பது தெரிந்தே ஒவ்வொரு முறையும் கருவுற்று - இறைவனுக்கே என்றாலும் இந்தப் பலிகள் நியாயமா? "ஐயோ என் குழந்தைகளே, என் குழந்தைகளே" என்று கதறி அழுகிறாள் தேவகி. கண்ணன் தாயைத் தேற்ற இயலாமல் ஒரு சாட்சி மாத்திரமாய்ப் பார்த்துக்கொண்டு ஒதுங்கி நின்றான்.
புராணக் கதைகளில் நாம் பார்க்கத் தவறியதை ஒரு தாயின் பார்வையில் வெளிப்படும் புதிய சிந்தனையால் காட்டும் ஆசிரியரின் கற்பனை, புதிய பார்வை ஆகியவற்றைப் பார்க்க முடிகிறதல்லவா?
- சகுந்தலையின் உறுதி
சகுந்தலை, துஷ்யந்தன் கதை நமக்கெல்லாம் தெரியும். துஷ்யந்தன் கண்ணே, மணியே என்று சகுந்தலையைப் புகழ்ந்தவன். அவனைத் தேடி அவள் வந்தபோது 'உன் வயிற்றில் வளர்வது யார் குழந்தையோ? அரச போகத்துக்கு ஆசைப்பட்டுச் சொந்தம் கொண்டாடிவந்திருக்கிறாய்' என்கிறான். தன்மானம் அடியுண்டதால் தளர்ந்த சகுந்தலை வழியில் தேவகன்னி மேனகையைச் சந்திக்கிறாள்.
தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் மேனகை, "விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கத் தேவேந்திரனால் அனுப்பப்பட்டவள் நான், உன் தாய்" என்கிறாள். உரையாடல் தொடர்கிறது.
"அதாவது ஒரு தவச் சிதைவின் அடையாளம்".
"ஏன் விரக்தியாய்ப் பேசுகிறாய். உன்னைத் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்லுகிறேன். உன் மகன் அங்குப் பிறப்பான்."
"நீங்கள் என் தாய் என்பது உண்மையானால்......”
“சூரிய சந்திரர் சாட்சியாய் சத்தியம்.”
“நான் பிறந்ததும் தேவலோகத்துக்கு எடுத்துச் சென்றிருக்கலாமே?”
“மானிட சிசுவைத் தேவர் உலகிலேயே வைத்திருக்க முடியுமா?”
“அதனால் என்ன செய்தீர்கள்?”
“உன் தந்தை விசுவாமித்திரர் ஏற்றுக் கொள்ளாததால் கானகத்தில் விட்டு விட்டுச் சென்றேன்.”
“நான் சாவதற்கு”
மேனகை தலை குனிந்து "என் இயலாமை" என்றாள்.
"பிறந்த குழந்தை என்ன குற்றம் செய்தது மரண தண்டனை விதிக்கப்பட?"
"பிறந்ததுமே என்னைப் புறக்கணித்தவள் எனக்கு அம்மா எப்படி ஆவாள்? நானும் அவளைப் புறக்கணிக்கிறேன்" என்கிறாள் உறுதியாக. கண்வ மகரிஷியிடம் திரும்பிச் சென்றபோது அவர் ஆறுதல் கூறுகிறார். அப்போது சகுந்தலை "என் மகன் இந்த ஆசிரமத்தில் தங்கள் புனித நிழலில் பிறப்பான். துஷ்யந்தன் வரும்போது தந்தையுடன் போக அவன் விரும்பினால் போகட்டும். ஆனால் நான் போக மாட்டேன். இங்கேயே தங்கள் அன்பு மகளாய் வாழ்வேன். தங்கள் கால்பட்ட இந்த அன்பு நிலத்திலேயே என் கடைசி மூச்சை விடுவேன்" என்கிறாள். சகுந்தலையின் உறுதியையும், பெண்மையின் தன்மானக் கனலையும் எடுத்துரைக்கும் சிறுகதை தான் தாயகம். (புதிய பார்வை. 1993)
3)தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறுகதை வகைப்பாட்டுக்கான சிறந்த நூல் பரிசினை ஆர். சூடாமணியின் எந்த நூல் பெற்றுள்ளது?