தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சமுதாய நோக்கு

  • 4.4 சமுதாய நோக்கு

    நாவலில் மக்கள் ஒரு சமூக அமைப்பின் கட்டுக்கோப்பிலிருந்து இன இழிவுகளைப் போக்கிட வேறோர் சமூக அமைப்பை எவ்வாறு நாடுகிறார்கள் என்பதை ஆசிரியர் தெளிவாகவே கூறுகிறார். இந்நாவல் சமுதாய நோக்கில் எழுதப்பட்டுள்ளது. சாதி ஒழிப்பு இயக்கங்கள் பார்க்கத் தவறியதும், தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்கத் தவறியதும் ஆன செய்திகள் இந்நாவலிலே விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாமல் கூறப்படுகின்றன.

    4.4.1 மதமும் சாதியும்

    மானுட வாழ்வில் மதம் வகிக்கும் இடத்தையும், அதிலிருந்து மாறுபட்டு, சாதியம் வேர்ப்பிடித்திருக்கும் வித்தியாசத்தையும், சாதி இழிவுகளுக்கு மதமாற்றம் தீர்வாகாது என்பதையும், சாதியத்தின்முன் கிறித்தவம் தோற்றுப்போகிறது என்பதையும் புதிய ஜனநாயகப் புரட்சியே சாதி ஒழிப்பின் நிபந்தனை எனவும் இந்த நாவலில் சுட்டப்படுகிறது.

    இந்நாவலில் இடம்பெறும் கீழ்ச்சாதி மக்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்குப் பல எதிர்ப்புகளை எதிர்நோக்கி, கோயில் கட்டுவதற்கு உழைப்பைக் கொடுத்து இரவு பகலாகக் கண்விழித்து சாதி இழிவுகளைப் போக்க நினைக்கின்றனர். ஆனால் அங்கும் உயர் சாதியினர் மதத்தில் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்போது பாதிரியார் உயர் சாதியினருக்கு ஆதரவாகவே போக நேர்கிறது. மதத்திலிருந்து சாதியம் பிரியும் இடத்தை ஆசிரியர் இந்நாவலில் தெளிவாகக் காட்டியுள்ளார்.

    • சாதி ஏற்றத்தாழ்வு

    வேதம் சொல்லிக்கொடுக்க வரும் சந்தியாப்பிள்ளை உபதேசியாருக்குத் தண்ணீர் தேவைபட, தம்பன் ஒருவனை அனுப்பித் தூய்மையான பாத்திரத்தில் பூக்கண்டர் வீட்டில் தண்ணீர் கொண்டுவா என்கிறார். எனவே மதம் மாற்றம் சாதிமாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவு.

    இந்நாவலில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தாங்களாகவே தாழ்வாக நினைக்கின்றனர் என்பதை நடப்பியல் தன்மையோடு ஆசிரியர் காட்டுகிறார்.

    4.4.2 பெண்கள் நிலையும் எதிர்ப்பும்

    நன்னியனின் மகள் சின்னி பல வருடங்களாக தம்பாப்பிள்ளையின் வீட்டில் தங்கி அடிமையாக வேலை செய்கிறாள். தம்பாப்பிள்ளையின் மருமகன்கள் சின்னியிடம் தவறான முறையில் நடந்து கொள்ள, இதையறிந்த பெற்றோரும் சகோதரரும் அவளைத் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிடுகின்றனர். அவர்கள் பலமுறை வந்து அழைத்தபோதும் சின்னியை அனுப்பாததால் நன்னியனுக்குத் தண்டனை தருகின்றனர். இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட பெண்கள், “இண்டைக்கு நன்னி மகளுக்கு வந்தது நாளைக்கு எங்கடை தங்கச்சியாருக்கும் வரும்! எங்கடை பத்துப் பெட்டைகள் (இளம் பெண்கள்) நயினார் வீடுகளில் இருக்குதுகள்... எங்கடை பெட்டைக் குஞ்சுகள் இவங்களுக்குப் பொடுதடியேளா (வைப்புகளா) கேக்கிறேன்” என்று பொங்கி எழுகின்றனர், சின்னிக்கு ஏற்பட்ட நிலையை, தாய், தகப்பன், அண்ணன், தம்பி என்று அனைவரும் சேர்ந்து பேசக்கூடிய விஷயமா? என்று ஆசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். இதன்மூலம் வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை செய்யச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை வெளிப்படுகிறது. இதுபோன்று வேறுசில நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்குத் தீங்கிழைக்கின்றமை எடுத்துக்காட்டப் படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:29:10(இந்திய நேரம்)