தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

என் இனிய இயந்திரா - புதினம்

  • 6.2 என் இனிய இயந்திரா - புதினம்

    என் இனிய இயந்திரா என்ற புதினத்தின் கதைக்கரு, கதாபாத்திரங்கள், கதைப்பின்னல், கதைச் சுருக்கம், அறிவியல் ஆட்சியில் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றோடு இந்நாவலில் கையாளும் உத்திமுறைகளைப் பற்றியும் இங்கு விரிவாகக் காணலாம்.

    • அறிவியல் நாவல்

    அறிவியல் வளர்ச்சி அதனால் அமைந்த இயந்திரங்களின் முன்னேற்றம், அவற்றால் வாழ்க்கையில் ஏற்பட்ட வேகம், இம்மூன்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இலக்கியத்தில் ஒரு மாறுதலை விளைவித்தன. வாழ்க்கையில் புதுமைகளையும் அவற்றால் நேர்ந்த போராட்டங்களையும் விளக்க இலக்கியம் உதவுகிறது. அந்த வகையில் கி.பி.2022-இல் அறிவியல் ஆட்சி நடந்தால் அப்பொழுது நாட்டின் நிலை நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை ஆகியவை எப்படியிருக்கும் என்பதை சுஜாதா என் இனிய இயந்திரா என்ற நூலில் தீர்க்க தரிசனமாகப் படைத்துள்ளார்.

    அறிவியல் (Scientific) யுகம் இது. எங்கும் எதிலும் அறிவியல் ஊடுருவும் நேரம். எனவே மக்கள் இலக்கியமாகிய நாவலிலும் விஞ்ஞானம் நுழைந்ததில் வியப்பில்லை. அறிவியல் நுட்ப நுணுக்கங்களைத் திட்டத்தோடு கதையின் ஊடே எளிதே, இனிதே விளையாட்டாக இவரது நாவல்கள் விளக்கிச் செல்கின்றன. துப்பறியும் பாங்கும், பாலுணர்வும் அறிவியல் நுட்பங்களும் இவர் கதையில் கலந்து வரக் காணலாம். இவரது கதைகள் பழமையில் அறிவியலைப் புகுத்திப் புதுமை ஒளிவீசச் செய்து ஒரு திருப்பத்தை உருவாக்கியுள்ளன. பாமரரும் விமானம், கம்ப்யூட்டர் போன்றன பற்றிக் கதையோடு தெரிந்து கொள்கின்றனர்.

    6.2.1 கதைக்கருவும் கதை உருவாகியதும்

    இனி இந்நாவலின் கதையின் கருவைப் பற்றியும், கதை எவ்வாறு உருவாகியது என்பதையும் பார்ப்போம்.

    • கதைக்கரு

    சமுதாய மாற்றம் என்பது ஆட்சி மாற்றத்தால் ஏற்படுவது. ஆட்சி மாற்றத்தின் விளைவுகள் மக்கள் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தக் கூடியது. உலக நாடுகளின் வரலாற்றில் முடியாட்சி மாறி மக்களாட்சி ஏற்பட்டதால் உண்டான விளைவுகளை இன்றைய நடைமுறை காட்டுகின்றது. அதுபோல் இன்றைய மக்களாட்சி மாறி அறிவியல் ஆட்சி நடைபெற்றால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதே இந்நாவலின் கரு ஆகும். இந்நாவல், புதிய திருப்பத்தை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க நாவலாகும்.

    என் இனிய இயந்திரா நாவலில் கதைத்தலைவியாக நிலா படைக்கப்பட்டுள்ளாள். இவளைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இந்தப் புதினத்தின் வழி அறிவியலை முதன்மையாகக் கொண்டு மனித உரிமைகள், வாழ்வியல் முறைகள் முதலியன எவ்வாறு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. என்பதைத் தெளிவாக சுஜாதா எடுத்துக்காட்டுகிறார். அறிவியல் ஆற்றலே தனிமனித மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

    • கதையின் கதை

    இந்த நாவல் ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபோது அவ்வப்போது வாசகர்களிடமிருந்து சுஜாதாவிற்கு ஊக்குவிக்கும் கடிதங்கள் வந்தன. அதில் பலர், “விஞ்ஞானத்தை வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள். ஒரு ஐ.ஐ.டி மாணவர் இதில் குறிப்பிட்டிருக்கும் “ஹலோ கிராப்பி” எவ்வாறு சாத்தியமில்லை என்று பூச்சி பூச்சியாகக் கணக்கெல்லாம் போட்டு விளக்கியிருந்தார் என்று நாவல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள சுஜாதா அவற்றிற்குப் பின்வருமாறு விளக்கங்களைத் தருகிறார்.

    “விஞ்ஞானக் கதை (Science fiction) என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்றுச் சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது. அதன் சாலைகளில் இருளையும் ராத்திரிகளில் வெளிச்சங்களையும் தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளலாம். அதன் கடவுள்கள் ப்ரோட்டான் வடிவெடுக்கலாம். அதன் பெண்கள் மகப்பேற்றை ஒட்டு மொத்தமாக இழந்து மீசை வளர்த்துக் கொள்ளலாம். அதன் நாய்கள் ப்ளேட்டோவைப் பற்றியும் ப்ரும்ம சூத்திரம் பற்றியும் பேசலாம். ஆயிரமாயிரம் மாற்று சாத்தியக் கூறுகளை ஆராயும் அற்புதமான சுதந்திரத்தைத் தருகிறது விஞ்ஞானக் கதை. அதைப் பயன்படுத்தும் போது புதிய விளையாட்டுக்களை ஆடும் போது ஒரே ஒரு எச்சரிக்கை தான் எழுத்தில் தேவைப்படுகிறது. கதையில் இன்றைய மனிதனின் உணர்ச்சிகளுடனும் ஆசாபாசங்களுடனும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் அல்லது தொடர்பு காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு அதில் சுவாரஸ்யம் ஏற்படுகிறது” என்று தன் அறிவியல் நாவல் உருவாக்கத்திற்கான அளவுகோலை சுஜாதாவே குறிப்பிடுகிறார். இது அறிவியல் நாவலுக்கான அளவுகோலாகவும் அமைந்துவிட்டது எனலாம்.

    6.2.2 கதைச்சுருக்கம்

    எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு விதிக்கின்ற ஒரு கற்பனை உலகம், குழந்தை பெறுவதற்குக்கூட அரசாங்கத்தின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டும். இறந்து போனவரைப் பற்றிய துக்கம் மறைய வேண்டும் என்றால், இறந்தவரைப் போலவே மனித இயந்திரத்தை (Robot) அரசாங்கம் செய்து அனுப்பும். இப்படிப்பட்ட இயந்திர உலகத்தில் சிபி திடிரெனக் காணாமல் போய்விடுகிறான். அவன் மனைவி நிலா தவித்துக் கொண்டிருக்கும் போது, ரவி அவள் வீட்டிற்கு விருந்தாளியாக வருகிறான்; கூடவே ஜீனோ என்ற ரோபாட் நாய் வருகிறது. இருவரும் சேர்ந்து சிபியைக் கம்ப்யூட்டர் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். சிபி அரசாங்கத்துக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு, கதிரியக்கச் சிறையில் இருக்கிறான். நிலாவும் ரவியும் சிபியைத் தப்ப வைக்கிறார்கள். ரவி அரசாங்கத்துக்கு எதிரான சதிக்கும்பலைச் சேர்ந்தவன் என்று நிலாவைச் சிபி எச்சரிக்கிறான். நிலா இதைப் பொருட்படுத்தாது ரவியின் ஆலோசனையின் பேரில் இயந்திர உலகின் தலைவன் - சர்வாதிகாரி ஜீவாவைக் கொலை செய்ய முயல்கிறாள். முயற்சி தோல்வியடைகிறது. நிலாவும் ஜீனோவும் தப்பிக்கிறார்கள். ஜீவா மனிதனுமல்ல; இயந்திரமுமல்ல; அப்டிகல் சாதனங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு ஹோலோ பிம்பம் என்று ஜீனோ கண்டுபிடித்து நிலாவுக்குச் சொல்கிறது. உண்மையை மக்களுக்கு உரைக்கின்றாள் நிலா. நிலாவையும், எதிர்பாராதவிதமாக ஜீவாவுக்கு எதிராகச் செய்வதாக நாடகமாடிய ரவியையும், மனோவையும் வானளாவப் புகழ்கிறது மக்கள் கூட்டம். இதற்கெல்லாம் ரவியே காரணம் என்று சொல்வதற்கு முன் மக்கள் கூட்டம் ஆர்த்தெழுகிறது. புத்திசாலித்தனமாக ஜீனோ நழுவி விடுகிறது. நினைத்தபடியெல்லாம் நிலாவை ஆட்டிவைக்கிறான் ரவி. ஆனால் ரவியின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மறுபடியும் நிலாவிடம் வருகிறது ஜீனோ. நிலாவிற்கு மீண்டும் உயிர்வந்தது போல உணர்கிறாள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:31:15(இந்திய நேரம்)