Primary tabs
6.4 அறிவியலாட்சியும் வாழ்வியல் மாற்றங்களும்
2022-இல் அறிவியல் ஆட்சி ஏற்பட்டால் அப்பொழுது நாடு எப்படி இருக்கும் என்பதையும், மக்களின் வாழ்வில் அறிவியல் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த நாவல் சித்திரிக்கிறது. இந்நாவலில் இடம்பெறும் குழந்தை பிறப்பு, அரசியல் கட்சி, அரசாங்க நடைமுறைகள், குற்றத்திற்குத் தண்டனை, விளையாட்டு ஆகியவற்றை ஒரு சில உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தலாம்.
6.4.1 குழந்தை பிறப்பு
இந்நாவல் சுட்டும் அறிவியல் ஆட்சி உலகத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளவும் அரசாங்க அனுமதி தேவை. இந்த நிலையில் நிலா, சிபி இருவருக்கும் ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கிடைக்கிறது. மணி என்ற பெயரும் நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டெழுத்துப் பெயர் நிலாவிற்குப் பிடிக்கவில்லை. அவள் ‘சோமசுந்தரேசுவர சுப்ரமணி’ என்று பெரிய பெயராக வைக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அனுமதி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள படி 2022-ம் ஆண்டு ஜூன் இருபத்தைந்திற்குள் குழந்தை பிறக்கவில்லையென்றால் அனுமதி நீடிக்கப்படுவதற்கு அரசின் மக்கட்தொகை கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு உடனே தெரிவிக்க வேண்டும். ஆண்குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கிடைத்து, பிறப்பது பெண் குழந்தையாக இருந்தால் உடனே அரசாங்கத்திற்குத் தெரிவித்து அக்குழந்தையை ஒப்படைக்க வேண்டும். பிறந்த பெண் குழந்தையை அரசாங்கம் காற்று ஊசி ஏற்றிக் கொன்று விடும். குழந்தை பெற்றுக் கொள்ளவும், பெற்ற குழந்தைக்குப் பெயரிடவும் மக்களுக்கு உரிமையில்லை. பெண்குழந்தை பிறப்பு தடுக்கப்பட்டு மக்கட்தொகை கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அறிவியல் ஆட்சி உலகத்தில் நிகழ்வதாக இந்நாவல் குறிப்பிடுகிறது.
6.4.2 அரசியல் கட்சிகளும் அரசாங்கமும்
ஜீவாவின் ஆட்சியில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் அனுமதி தேவை. தெருக்களில் மக்கள் அனுமதிக்கப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக ஊடாடிக் கொண்டிருந்தார்கள். முதன் முதலாக மக்கட்பெருக்கம் சரிய ஆரம்பித்த சாதனை! போதிய மக்கள், போதிய கோதுமை, ஜீவாவின் சாதனை! இவ்வாட்சி பொதுவுடைமை. ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் ஆட்சியாக உள்ளது. அந்த அறிவியல் ஆட்சியின் எதிர்கட்சியாக மக்களாட்சி திரும்ப வரும் கழகம் என்றொரு அமைப்பு ஏற்பட்டு, அந்தக் கழகம் ஜீவாவின் ஆட்சி முறையைத் தீவிரமாக எதிர்க்கிறது.
• அரசாங்க நடைமுறைகள்
நாவலின் தொடக்கத்தில் ‘அந்த நகரமே இயந்திரக் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது, என்பதை உணர்த்தும் வகையில் அனுமதிக்கப்பட்ட மகிழ்ச்சி என்று முதலிலேயே ஆசிரியர் சொல்லி விடுகிறார். அங்கு வாழும் நபர்களுக்கு இரண்டெழுத்துக்களுக்கு மேல் பெயர்கள் இல்லை. நிலா, சிபி, ஜீனோ, ரவி, மனோ இப்படி பெயர்களுக்கும் எண்கள். நிலா என்றால் எண் 107836. சாலையில் காகிதக்குப்பை பொறுக்குவது, வீட்டு வாசல் குப்பைகளைச் சேகரிப்பது, அலம்புவது, பெருக்குவது எல்லாமே இயந்திரங்கள்தாம். மொத்தத்தில் ‘ஜீவாவின் சுபிட்ச ராஜ்யத்தில் எதுவுமே சாத்தியம்.’ கிரிக்கெட், ஹாக்கி போன்றவற்றைத் தடைசெய்து ஜேவ் என்ற விளையாட்டைச் சொல்லி தந்திருக்கின்றனர். ‘மனிதர்களும் ரோபாட்டுகளும் விளையாடும் ஆட்டம். ஜேவ் என்கிற ஒரு ரோபாட் இயங்கும். அதை மனித கட்சிக்காரர்கள் பிடிக்க வேண்டும். பிடித்துக் கொல்ல வேண்டும். இப்படித்தான் ஒரு ஜேவ் ஆட்டத்தின் போது. ஜேவ் நட்ட நடுவே அகப்பட்டு அதன் உடலில் முதல் குத்துப்பாய, குபுக்கென்று ரத்தம் பொங்கியது. பிரும்மாண்டமான விவி திரையில் தெளிவாகத் தெரிந்தது. இந்த ஆட்டத்தின் காரணம், ஜனங்களின் கொல்லும் இச்சையைத் தணிப்பதுதான் என்று ஆசிரியர் கூறுகிறார். இயந்திரமாய் மாறிவிட்ட மனிதர்கள் எப்பாடுபட்டாவது தம்முடைய இச்சையை ஏதாவதோரு வழியில் தீர்த்துக் கொள்ளத்தானே வேண்டும்! இது ஒரு வகையில் மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கையாகத் தெரிகிறது.
சோப்பு, சீப்பு முதல் வீடு போன்ற அனைத்துப் பொருள்களையும் அரசாங்கமே கொடுத்தது. அரசாங்க வண்டி சிவப்பு நிறத்தில் இருந்தது. அதிலிருந்த வானொலி ரெட் செக்ஷன், புளுசெக்ஷன் என்று அலறிக் கொண்டிருக்கும். முதியவர்கள் இறப்பதற்கு முன் ஆளுக்கொரு ட்ரம்பெட் ஊதிக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு அரசாங்க நடைமுறை இருந்தது.
அறிவியல் ஆட்சி உலகில் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு மரண தண்டனையும், நாடு கடத்தும் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
6.4.3 விளையாட்டு
நாட்டில் கிரிக்கெட் ஆட்டம் தடை செய்யப்பட்டது. அஸ்ட்ரோ புல்வெளி அமைத்து பங்கி, ஜீல் போன்ற ஆட்டங்கள் நடைபெற்றன. ஜேவ் ஆடுவதற்கு, பிடிப்பான், எடுப்பான், அடிப்பான் என்று தனித்தனி விபாகங்கள் உண்டு. மைலாப்பூர் மன்னர்கள் என்று பெயர் பெற்ற டைனமோ கட்சிக்கும் ஜேவ் என்ற ரோபாட்டுக்கும் போட்டி நடைபெற்றது. ஜேவ் நட்ட நடுவே அகப்பட்டு அதன் உடலில் முதல் குத்துப்பாய குபுக்கென்று ரத்தம் பொங்கியது. மிகப் பெரிய வி.வி.திரையில் தெளிவாகத் தெரிந்தது. இப்போது அவர்கள் யாவரும் செத்த பிராணியின் மேல் கழுகுக் கூட்டம் போலச் சூழ்ந்துக் கொள்ள, கட்சியின் தலைவன் தன் நீண்ட ஈட்டியால் அதன் துடிப்புகள் அடங்கும் வரை குத்தினான். வன்முறைக்கு ஒருவடிகால்! எல்லாருமே அந்த ஜேவ் பொம்மையைத் தத்தம் வெறுப்புக்களின் குறியீடாக நினைத்துக் கொள்ள முடியும்.
ரோபாட் சர்க்கஸ் என்பது நாட்டின் வருடாந்திர மெகா விழா! பல்வேறு திசைகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும், ரோபாட்டுகள் வந்திறங்கி சதுரங்கம், ஜேவ், ஜீக்கு, நடனம், மெட்டுக்கட்டும் போட்டி என்று எத்தனையோ நிகழ்ச்சிகள் யார் மனிதன், யார் இயந்திர ரோபாட் என்று சொல்ல முடியாதபடி மானிடர்களிடையே இயந்திரப் புழக்கம். இவ்வாறு பல்வேறு விளையாட்டுகள் அறிவியல் ஆட்சியில் நிகழ்வதாக நாவல் குறிப்பிடுகிறது.