Primary tabs
1.4 தமிழ் நாடகம்
தமிழ் நாடகத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. 2500 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே நாடகம் பற்றிய குறிப்பு வருகிறது.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்என்பது தொல்காப்பியம்.
நாடகம் என்பது வளர்ந்து வரும் ஒரு கலை. எந்த ஒரு கலையையும் திட்டமிட்டு வளர்க்க வேண்டுமானால் அக்கலை தொடர்பான கோட்பாடுகளை வளர்க்க வேண்டும். தமிழைப் பொறுத்தவரையில் தமிழ் நாடகக் கட்டமைப்பையும் ஒழுங்கு முறையையும் கூறும் நாடக இலக்கண நூல்கள் நிறைய உண்டு.
முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல் ஆகிய நாடக இலக்கண நூல்கள் இருந்தமை பற்றிப் பழந்தமிழ் நூல்கள் சுட்டுகின்றன. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் பரதம், அகத்தியம் ஆகிய இரண்டு நாடக இலக்கண நூல்களைச் சுட்டுகிறார். பரிதிமாற் கலைஞர் என்னும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகவியல் என்னும் நூலை எழுதினார். விபுலானந்த அடிகள் மதங்க சூளாமணி என்னும் நாடக ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். தமிழ் நாடக வளர்ச்சிக்கு இந்த ஆராய்ச்சி நூல்கள் பெருந்துணை புரிவனவாகும்.
தமிழ் நாடக வளர்ச்சி நிலைகளைச் சிலப்பதிகாரம் தான் முதன் முதலில் சுட்டிக் காட்டுகிறது. வேத்தியல், பொதுவியல் ஆகிய கூத்து வகைகளும் அகக்கூத்து, புறக்கூத்து ஆகியனவும் மாதவி ஆடிய பல்வகைக் கூத்துகளும் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன. தமிழ் நாடக வளர்ச்சியில் இது ஒரு நிலை.
பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகிய அடிப்படைகளில் தமிழ் நாடகம் வளர்ச்சி அடைந்தது இன்னொரு நிலை.
குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம், விலாசம் எனக் கதைகளின் அடிப்படையில் நாடகம் வளர்ச்சி அடைந்தது மூன்றாம் நிலை.
இவை அனைத்தும் அடிப்படையாகக் கொண்டும் வட இந்தியாவிலிருந்து புதிதாக வந்த நாடக அமைப்புகளையும் தழுவிப் புதிய நாடக அமைப்பைப் பெற்றது 19 ஆம் நூற்றாண்டு நிலை.