Primary tabs
1.5 புதுவகை நாடகங்கள்
நாடகம் ஒரு கலை வடிவம்; குறிப்பிட்ட பண்பாட்டின் அழகியல் வெளியீடு; சமூகச் சிந்தனைகளின் வெளிப்பாட்டு ஊடகம். இந்த மூன்றின் சேர்க்கையாகத் தமிழ் நாடகம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது.
தமிழில் வெளிவந்த முதல் சமுதாய நாடகம் டம்பாச்சாரி விலாசம் இதன் ஆசிரியர் காசி விசுவநாத முதலியார். இவர், பிரம்ம சமாஜ நாடகம்; தாசில்தார் நாடகம் என மேலும் இரு நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.
காசி விசுவநாத முதலியாரைத் தொடர்ந்து ராமசாமி ராஜா என்பவர் பிரதாப சந்திர விலாசம் என்னும் நாடகத்தை 1877ஆம் ஆண்டு எழுதி அரங்கேற்றினார். இவர்களைத் தொடர்ந்து பலர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினர்.
இந்த நாடகங்களிலெல்லாம் நாடகக் கதையை முதலில் பாடலாகப் பாடுவர். பின்னர் அப்பாடலை உரைநடையால் விளக்கிக் காட்டுவர். இவ்வாறு பாடும்போதும் பேசும்போதும் நடிகர்கள் தங்கள் மனப்போக்கிற்கேற்பப் பாடலையும் வசனங்களையும் கூட்டிக் குறைத்துப் பாடினர். பேசினர். சில, புதிய நாடக சபைகளின் வருகையால் இக்குறைபாடுகள் நீங்கின.
1875ஆம் ஆண்டு வாக்கில் சென்னையை நோக்கி இரண்டு புதிய நாடகக் கம்பெனிகள் வந்தன.
1) சாங்கிலி நாடக சபை
2) பார்சி நாடகக் கம்பெனிசாங்கிலி நாடக சபை பூனாவிலிருந்து சென்னைக்கு வந்தது. சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இவர்கள் நாடகங்கள் நடத்தினர். நாடகம் தொடங்குமுன், விநாயகர், சரஸ்வதி ஆகியோருக்குப் பூஜை செய்துவிட்டு, சூத்திரதாரனும் விதூஷகனும் நாடகக் கதையைச் சுருக்கமாகச் சபையினர்க்கு எடுத்துக் கூறும் வழக்கம் இச்சபையினரால் ஏற்பட்டது.
பார்சி நாடகக் கம்பெனியால், நாடகத் திரைச் சீலைகளை அமைப்பதில் புதிய மாற்றம் ஏற்பட்டது.
இந்த மாற்றங்களை எல்லாம் மனத்தில் கொண்டு புதுமுறையில் நாடகங்கள் நடத்தி வெற்றி கண்டவர் கோவிந்தசாமி ராவ் என்பவராவார். தமிழ் நாடகம் புத்துயிர் பெற்றதில் இவர் பங்கு கூடுதலானது ஆகும்.
அமெச்சூர் நாடக சபைகள் தோன்றிய பின்னர் தமிழ் நாடக உலகில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. 1891 ஆம் ஆண்டு சுகுணவிலாச சபை என்னும் அமெச்சூர் நாடக சபை முதலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர், பல சபைகள் தோன்றின. பல புராண, இதிகாச, சமூக நாடகங்கள் தமிழ் நாட்டு நாடக மேடைகளில் அரங்கேறின.