Primary tabs
2.1 பாரதியார்
பாரதியார்பாரதி 1882, டிசம்பர் 11ஆம் நாள் திருநெல்வேலியிலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். தந்தை சின்னசாமி, தாய் இலட்சுமி அம்மையார். இளமைப்பெயர் சுப்பிரமணியன். செல்லப்பெயர் சுப்பையா. தம் ஐந்தாம் வயதிலேயே தாயை இழந்தார்.
1893ஆம் ஆண்டு அவரது 11வது வயதில் எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ்சபையில் அவரைச் சோதித்து அவர் புலமையை வியந்து ‘பாரதி’ (கலைமகள்) என்ற பட்டத்தை வழங்கினர். அன்று முதல் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப் பெற்றார். அவருக்குப் பதினோராம் வயதிலேயே திருமணம் ஆயிற்று. மனைவியின் பெயர் செல்லம்மாள்.
1898-1902 வரை காசியில் அத்தை குப்பம்மாளுடன் வசித்து வந்தார். அப்பொழுது பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். காசி இந்து பாடசாலையில் சமற்கிருதமும், இந்தியும் பயின்றார்.
1902ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் வந்து தங்கினார். மதுரையிலிருந்து வெளிவந்த விவேகபானு என்னும் இதழில் தனிமை இரக்கம் என்ற தலைப்பில் அவருடைய முதல்பாடல் அச்சேறியது.
1904 முதல் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் ‘இந்தியா’ என்ற வார இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். சுதேசகீதம், நாட்டுப் பாடல், விடுதலைக் கும்மி எனப் பாடல்களை எழுதுவதில் ஆர்வம் காட்டுபவராகவும், தீவிர அரசியல்வாதியாகவும் விளங்கினார்.
தமது தீவிரமான கருத்துகளைச் சுதேசமித்திரனில் வெளியிட முடியாததால் சக்கரவர்த்தினி என்ற இதழைத் தொடங்கினார். ஆங்கிலேயர் அவரைக் கைது செய்ய முயன்றதால் அவர் புதுச்சேரிக்குச் சென்றார். பின்னர் தமிழகம் திரும்பினார். கைதும் ஆகி, விடுதலையானார். சென்னையில் அவரது வாழ்க்கையின் இறுதிக் கட்டம் அமைந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையிடம் அன்பு காட்டிப் பழகி வந்தார். ஒருநாள் மதம் பிடித்திருந்த அந்த யானை அவரைத் துதிக்கையால் தூக்கி எறிந்தது. காயமடைந்த பாரதியார் சிறிது சிறிதாகத் தேறினார். பிறகு நோய்வாய்ப்பட்டிருந்து 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் அவர் மறைந்தார்.