தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.1 நாமக்கல் கவிஞர்

  • 5.1. நாமக்கல் கவிஞர்

    தேசிய எழுச்சியோடு நடைபோட்டவர்; விடுதலை வரலாற்றில் இடம் பெற்றவர். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தவர்.

    நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

    5.1.1 நாமக்கல் கவிஞரின் பிறப்பும் வாழ்க்கையும்

    தந்தை வெங்கட்ராமப் பிள்ளை, தாய் அம்மணி அம்மாள் ஆகிய இருவருக்கும் 19.10.1888 இல், நாமக்கல்லில் பிறந்தார்.

    வெங்கட்ராமர், இள வயதில் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தார். இவர் ஏழு பெண் குழந்தைகளுக்குத் தந்தை. ஒருமுறை, வெங்கட்ராமர், தம் வேலை தொடர்பாக, காவல் துறை ஆய்வாளர் ஒருவரைப் பார்க்க வந்திருந்தார். ஆய்வாளரின் மூன்று வயது ஆண் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த வழியே வந்த குதிரை வண்டி ஒன்றின் கீழ்க் குழந்தை அகப்பட்டுக்கொண்டது. வண்டிக்காரன் வண்டியை நிறுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த வெங்கட்ராமர் ஒரே தாவாகத் தாவிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டார். அவ்வண்டியில் வந்தவர் ஆய்வாளர் சுந்தரராசுலு தான். தன் குழந்தையைக் காப்பாற்றிய வெங்கட்ராமரைப் பாராட்டி அவருக்கு காவல்துறை பணிக்குப் பரிந்துரைத்தார். அந்த வேலையில் சேர்ந்த வெங்கட்ராமர் பின் தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றார். இந்தச் சூழலில்தான் வெங்கட்ராமருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்.

    5.1.2 கல்வியும் புலமையும்

    நாமக்கல் கவிஞர் பிறப்பதற்கு முன்னரே அவருடைய தாயார் பலராலும் புகழப்பட்டார். பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்று பலர் வாழ்த்தினர். ‘சிறந்த அறிவாளியாகவும் நிறைந்த ஆயுள் உடையவராகவும் விரிந்த புகழுடையவராகவும் உம் மகன் விளங்குவான்’ என்று அந்தணர் ஒருவர் பாராட்டியது அனைத்தும் கவிஞர் வாழ்வில் உண்மையாயிற்று.

    ‘எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, கவிஞர் தமிழ் நாட்டில் கவிதை உலகில் தனிப்பெரும் மன்னராக, அரசவைக் கவிஞராக விளங்கினார். இதற்குக் காரணம் அவர் இளமைப் பருவத்தில் பெற்ற கல்வியாகும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கு நாமக்கல் கவிஞர் சிறந்த சான்றாவார்.
     

  • கல்வி
  • ஆரம்பக் கல்வி : நம்மாழ்வார் பள்ளி, நாமக்கல்.
    உயர்நிலைக் கல்வி : கோவை மெட்ரிகுலேஷன் பள்ளி.
    கல்லூரிக் கல்வி : பிஷப் ஈபர் கல்லூரி, திருச்சி.
     

  • திருமணம்
  • கவிஞருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி முத்தம்மாள். அவர் வயிற்று வலியால் 1924இல் இறந்து விடுகிறார். அவர் வேண்டுகோளுக்கேற்ப, அவர்தம் தங்கை சௌந்தரம்மாளை மணக்கிறார் கவிஞர். அவர் மூலமாகப் பிறந்த குழந்தைகள் ஐவர். பெண்கள் இருவர்; ஆண்கள் மூவர்.
     

  • ஓவியப் புலமை
  • நாமக்கல் கவிஞர் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்மாழ்வார் என்ற ஆசிரியர் ஒரு கணக்குக் கொடுத்திருந்தார். எல்லா மாணவர்களும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இராமலிங்கம் மட்டும் அன்றைய நாடக விளம்பரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த கமலஇந்திரசபா நாடகப் படத்தைப் பார்த்து, பார்த்துத் தம் பலகையில் எழுதிக் கொண்டிருந்தார். ஆசிரியர் கணக்கைக் காட்டச் சொன்னார். இராமலிங்கம் ஓவியத்தைக் காட்ட பளீர் என அடி விழுந்தது. உயர்நிலைப் பள்ளியிலும் இது தொடர்ந்தது.

    மற்றொரு நிகழ்ச்சியையும் இங்கே சுட்டிக்காட்டலாம். கல்லூரியில் ஆங்கிலக் கட்டுரை ஒன்று எழுத முதல்வர் பணித்தார். அதை எழுதி முடித்துவிட்டு, இராமலிங்கம், முதல்வர் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருப்பதை அப்படியே வரைந்தார். இதைப் பார்த்த முதல்வர் அவரைப் பாராட்டினார். கட்டுரை எழுதிய திறத்தையும், ஓவியம் வரைந்த திறத்தையும் பாராட்டி, பைபிளையும் கட்டுரை எழுதுவது எப்படி என்ற ஒரு நூலையும் பரிசாகத் தந்து, ஓவியக் கலைப் பயிற்சியை விடாமற் செய்து வருமாறு ஊக்கப்படுத்தினார்.

    இராமலிங்கம் பிள்ளை, தம் நண்பரும் சிறந்த வழக்குரைஞருமான நாகராஜ ஐயங்காரின் தூண்டுதலால் திரு. இராமகிருட்டிணர், திரு. விவேகானந்தர், திலகர், அரவிந்தர், லஜபதிராய் முதலிய தலைவர்களைப் படமாக வரைந்தார். அந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி அமைத்தார். ஓவியப் புலமை கைவரப் பெற்றவர் கவிஞர் என்பதை இதனால் அறிய முடிகின்றதல்லவா?
     

  • ஓவியத்தின் மூலம் வருமானம் ஈட்டல்
  • கவிஞர் இராமலிங்கத்தின் ஆசான் திரு.வி. லட்சுமணன் தம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அவருடைய படத்தை நாமக்கல் நகர மண்டபத்தில் திறந்து வைக்க, அவருடைய மாணவர்கள் விரும்பினர். அதற்கு இராமலிங்கம் பிள்ளை படம் வரைந்து கொடுத்தார். அப்படம் நகர மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொழில் துறையில் வருவாயும், வெற்றியும் இராமலிங்கத்துக்கு தேடிக் கொடுத்த படம் இதுவாகும்.

    இதுவரையில் இராமலிங்கத்தின் பிறப்பு, சூழல், கல்வி, திருமணம், ஓவியப்புலமை ஆகியவற்றைப் பார்த்தோம்.

    இனி, கவிஞரின் படைப்புகளைப் பற்றி அறியலாம்.

    5.1.3 படைப்புகள்

    நாமக்கல் இராமலிங்கம் அவர்கள் மிகச் சிறந்த கவிதைகள் பலவற்றைப் பாடியுள்ளார். அவை தேசிய உணர்வை வெளிப்படுத்தும் உன்னதமான பாடல்கள். உரைநடை நூல்கள் பலவற்றையும் படைத்துள்ளார். மேலும் புகழ்வாய்ந்த புதினங்களையும் எழுதியுள்ளார்.
     

  • கவிதை
  • 1) தேசபக்திப் பாடல்கள், 1938.
    2) பிரார்த்தனை, 1938.
    3) தமிழன் இதயம், 1942.
    4) காந்தி அஞ்சலி, 1951.
    5) சங்கொலி, 1953.
    6) கவிதாஞ்சலி, 1953.
    7) மலர்ந்த பூக்கள், 1953.
    8) தமிழ்மணம், 1953.
    9) தமிழ்த்தேன், 1953.
    10) நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960.
    11) அவனும் அவளும்
     

  • உரைநடைக் கட்டுரைகள்
  • 1) தமிழ்மொழியும் தமிழரசும், 1956.
    2) இசைத்தமிழ், 1965.
    3) கவிஞன் குரல், 1953.
    4) ஆரியராவது திராவிடராவது, 1947.
    5) பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948.
    6) திருக்குறள் - உரை
    7) கம்பன் கவிதை இன்பக் குவியல்
     

  • புதினம்
  • 1) மலைக்கள்ளன், 1942.
    2) தாமரைக்கண்ணி, 1966.
    3) கற்பகவல்லி. 1962.
    4) மரகதவல்லி, 1962.
    5) காதல் திருமணம், 1962.
    6) மாமன் மகள்

புதுப்பிக்கபட்ட நாள் : 13-11-2017 15:45:51(இந்திய நேரம்)