தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தத்துவக் கவிதைகள்

 • 1.3 தத்துவக் கவிதைகள்

  வாழ்வின் இன்பங்கள்-துன்பங்கள், மேடுகள்-பள்ளங்கள் எல்லா அனுபவங்களிலும் எல்லை தாண்டி நின்றவர் கண்ணதாசன். அனுபவங்களின் சாறு தத்துவமாகத் திரள்கிறது. அது சிலவேளைகளில் சித்தாந்தம் ஆகிறது. சில வேளைகளில் ஆன்மிகம் ஆகிறது.

  1.3.1 சம உடைமைத் தத்துவம்

  4ஆம் தொகுதியில் உள்ள ஒரு பானையின் கதை என்ற கவிதையில் ஓர் ஏழைக் குடும்பத்தின் வறுமை நிலையைச் சோற்றுப் பானையே கதையாய்ச் சொல்கிறது. அருமையான வறுமை ஓவியம் இது. கவிதையின் இறுதியில்

  இப்படியே பசிநீளும் என்றால் இது
  என்ன சுதந்திர பூமி ? - ஏன்
  இத்தனை ஆயிரம் சாமி ? - ஒரு
  கைப்பிடியில் பலபூட்டை உடைத்து இன்று
  காத்திடுவோம் எங்கள் வீட்டை - பழி
  தீர்த்திடுவோம் இந்த நாட்டை!

  என்று கொதிக்கிறது பானை. வறுமை பொறுமையை மீறச் செய்கிறது. புரட்சியை எழுப்பிடும் சித்தாந்தக் குரலாக ஒலிக்கிறது.

  நெருப்பின் மக்களே என்ற கவிதையில் இந்தக் குரல் போர் முழக்கமாக ஒலிக்கிறது.

  நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே - இனி
  நேருக்கு நேர்நின்று பார்ப்போம் - சம
  நீதிக்குப் போர்ப்படை சேர்ப்போம்

  சமஉடைமைப் புரட்சித் தத்துவம் பேசுகிறது. வீரச்சுவை பொங்குகிறது.

  1.3.2 ஆன்மிகத் தத்துவம்

  தன் உள்ளம் அறியத் தவறு செய்தவன் வருந்துகிறான். சிந்திக்கிறான். திருந்துகிறான், தத்துவம் பிறக்கிறது. கடுகு போல் சிறுத்து இருந்த உள்ளம் கடவுள் படைப்பிலேயே பெரிய உள்ளமாக விரிகிறது. கடவுளின் அரசாங்கமாக ஆகிறது. ஞான பூமியாய் ஆகிறது. இதை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்:

  எறும்புத் தோலை உரித்துப்
  பார்க்க யானை வந்ததடா - என்
  இதயத் தோலை உரித்துப் பார்க்க
  ஞானம் வந்ததடா.

  நண்பர்களே! கண்ணதாசனின் தத்துவப் பாடல்களைப் பற்றிப் பெரிய ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளன. சான்றுக்காகச் சில பாடல் பகுதிகளையே நாம் பார்த்தோம்.

  மொத்தமாகப் பார்க்கும் போது, இவர் கவிதைகளில் உலகப் பொருள்கள் எல்லாமே உள்ளடக்கம் ஆகி இருக்கின்றன எனக் கூறலாம்.

  பிற்காலத்தில் படைத்த கவிதைகள் பெரும்பாலும் பக்தி - கடவுள் நம்பிக்கை சார்ந்தவையாகவே அமைந்தன. 5, 6 ஆம் தொகுதிகளில் இவ்வகைக் கவிதைகளே நிறைந்து உள்ளன.

  தன்மதிப்பீடு : வினாக்கள் - I
  1)
  கண்ணதாசன் நடத்திய இதழ்களில் புகழ்பெற்ற இலக்கிய இதழ் எது?
  2)
  கண்ணதாசனின் சிறந்த குறுங்காவியங்கள் இரண்டின் பெயர் சொல்க.
  3)
  கவிஞனின் சொற்களில் மிகுதியான மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்வது ஏன்?
  4)
  பிரிந்த காதலர்கள் மீண்டும் சேரும் நிலையை எப்படி உருவகம் செய்து, உயர்த்திப் பாடுகிறார் கண்ணதாசன்?
  5)
  தமக்கு ஞானம் வந்த முறையைக் கண்ணதாசன் எவ்வாறு பாடுகிறார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 09:54:33(இந்திய நேரம்)