தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முரண்பாடுகள்

 • 1.5 முரண்பாடுகள்

  நண்பர்களே! கண்ணதாசனின் கவிதைகளின், எளிமையை, இனிமையை, அழகை, தெளிவை இதுவரை பார்த்தோம்.

  மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
  மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன் - நான்
  நிரந்தரம் ஆனவன் அழிவதில்லை - எந்த
  நிலையிலும் எனக்கு மரணம் இல்லை

  என்று இறந்த பின்னும் சாகாமல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் கண்ணதாசன். புகழை மணந்து கொண்டவர்.

  இவரது கவிதைகள் அனைத்தையும் ஒருசேரப் படிப்பவர்களுக்கு ஒரு கருத்துத் தோன்றலாம்.

  1.5.1 அரசியல் கருத்துகள்

  ‘முன்னுக்குப்பின் முரண்படுகிறார் இவர். முரண்பாடுகளின் மொத்த உருவகமாகக் காணப்படுகிறார்’ என்பதே அது. இதற்கு என்ன காரணம்?

  அரசியல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டார். மாறும் கட்சிகளின் கொள்கைகளை விளக்கத் தம் கவிதையை, எழுத்தைப் பயன்படுத்தினார். இதனால் பல முரண்பாடுகள் கொண்டவராகக் காட்சியளிக்கிறார்.

  பகுத்தறிவு இயக்கத்தில் இருந்தபோது கடவுள் இல்லை என்னும் நாத்திகக் கருத்துகளைப் பாடினார். பிற்காலத்தில் தேசிய இயக்கத்தில் சேர்ந்த பின்னர், படித்தாலே மனம் உருகும் பக்திப் பாடல்கள் பாடிக் குவித்தார்.

  திராவிட இயக்கத்தில் இருந்தபோது ஆட்சிமொழிச் சட்டத்தை எதிர்த்தார். போராடினார். போராட்டங்களைக் காவியப் பொருள் ஆக்கிக் கவிதைகள் படைத்தார். ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட மொழியை நையாண்டிச் சொற்களால் வசை பாடினார். தேசிய இயக்கத்துக்கு மாறிச் சென்றபின் கருத்துகளை மாற்றிக் கொண்டார். முன்பு தூற்றியவை எல்லாவற்றையும் போற்றிக் கவிதை பாடினார்.

  போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
  தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
  ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
  எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்

  என்னும் பெருமித உணர்வு கொண்டவர் கண்ணதாசன். அதனால் உள்ளே எப்படியோ அப்படியே வெளியிலும் வாழ்ந்தவர்.

  • அகமும் புறமும்

  வெளிவேடம் இட்டு நடிக்காமல் வாழ்ந்தவர். தம் கவிதைகளிலும் இப்படியே தம்மை வெளிப்படுத்தினார். இதனால்தான் கருத்துகளில் முரண்படுவதுபோல் கவிதைகளில் காட்சி அளிக்கிறார்.

  இந்த முரண்பாடுகள் தம் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று அவரே கூறியிருக்கிறார்.

  நண்பர்களே! கண்ணதாசனின் கவிதைகளை அவரது வாழ்க்கையுடன் சேர்த்து வைத்துப் படியுங்கள். அப்போது இந்த முரண்பாடுகளை உணர மாட்டீர்கள். பொய்களால் முகமூடி இட்டுக்கொண்டு வாழத் தெரியாத ஓர் உயர்ந்த தமிழ்க்கவிஞரை அடையாளம் கண்டுகொள்வீர்கள். உணர்வுகளைத் தொட்டு இன்பம் தரும் அவரது அழகிய கவிதைகளில் உள்ளம் கரைந்து விடுவீர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 17:14:58(இந்திய நேரம்)