Primary tabs
- 1.3 முப்பொருள் அமைவு
முல்லைத் திணையில் அமைந்த முல்லைப்பாட்டைப் பாடிய புலவர் காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். கலித்தொகையில் உள்ள முல்லைக் கலிப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் ஆவார். ஐங்குறுநூற்றில் முல்லைத் திணை பற்றிய நூறு பாடல்களைப் பாடியவர் பேயனார் என்னும் புலவர். ஏனைய அகத்திணை நூல்களில் உள்ள முல்லைத்திணைப் பாடல்களைப் பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர். இப்பாடல்களின் துணைகொண்டு முல்லைப் பாடல்களில் முப்பொருள் அமைந்திருக்கும் தன்மையை இப்பகுதி விளக்குகிறது.
முதற்பொருளாகிய நிலமும் பொழுதும் பாடல்களில் அமைந்துள்ள சிறப்பைக் காணலாம். பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய கார்ப்பருவம் வந்தது. ஆனால் அவன் வரவில்லை. தலைவிக்கு வருத்தம் மிகுந்தது, தோழியிடம் கூறி ஆறுதல் பெற எண்ணுகிறாள்.
இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவண ரோ?எனப்
பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்குஎயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே (குறுந்தொகை : 126)(நசைஇ = விரும்பி; இவண் = இங்கு; எவண் = எங்கு; பெயல்= மழை; முகை = மொட்டு; எயிறு = பல்வரிசை; நகுமே = சிரிக்குமே)
“தோழி! இன்பத்திற்கு உரிய இளமையின் அருமையைத் தலைவர் எண்ணிப் பார்க்கவில்லை. பொருள் வளத்தை விரும்பி என்னைப் பிரிந்து சென்றவர் இன்னும் வரவில்லை. நறுமணம் தரும் குளிர்ந்த கார்காலம் “எங்கேடி அவர்?” என்று கேட்பது போல் முல்லை அரும்புகளாகிய பற்களைக் காட்டிச் சிரிக்கின்றதே!”
கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைத் திணைக்கு உரிய பெரும்பொழுதான கார்காலம் நறுந்தண் கார் என இப்பாடலில் வெளிப்படுவதைக் காணுங்கள். ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல் இது.
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
(முல்லைப்பாட்டு : அடி 6)(புன் மாலை = வருத்தம் தரும் மாலைப் பொழுது)
என்னும் அடியில் பிரிந்தோர்க்குத் துன்பம் தரும் மாலை என்று சிறுபொழுது சுட்டப்படுவதைக் காணலாம்.
இனி, முல்லைத் திணைக்கு உரிய காடு என்னும் நிலமும், கார்ப்பொழுதும் பாடலின் ஒரே அடியில் அமைவதைக் காணலாம். ‘கார்காலத்தில் வருவேன் என்று கூறிய தலைவன் வரவில்லை. ஆனால் கார்காலம் வந்துவிட்டதைக் காடு கூறிவிட்டது. பொய் கூறாத் தலைவன் ஏன் வரவில்லை?’ என மனத்துக்குள் வருந்தும் தோழியைத் தேற்றுவது போலத் தலைவி பேசுகிறாள்.
புதுப்பூங் கொன்றைக்
கானம், கார்எனக் கூறினும்
யானோ தேறேன்,அவர் பொய்வழங் கலரே
(குறுந்தொகை : 21)“புதிய கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் இக்காடு, 'கார் காலம் வந்துவிட்டது’ என்று சொல்கிறது. ஆனாலும் நான் நம்ப மாட்டேன்; அவர்பொய் சொல்ல மாட்டார்” என்கிறாள். இங்குக் கானம் (காடு) என நிலமும் கார் எனப் பொழுதும் குறிக்கப்படுவதைக் காணலாம். ஓதலாந்தையார் பாடிய பாடல் இது.
14 வகைக் கருப்பொருள்களில் சிலவற்றை இங்குக் காணலாம். மாவலி வார்த்த நீர் தன் கைகளில் விழுந்த அளவிலேயே பெரிய உருவமாக வளர்ந்தவன் திருமால். ‘அத்திருமாலைப் போன்று மேகம் கடல்நீரைக் குடித்து மலை உச்சியில் தங்கியது. உலகத்தை வளைத்தது. விரைந்து பெரிய மழையைப் பொழிந்தது’. முல்லைப்பாட்டின் இத்தொடக்கம் முல்லை நிலத் தெய்வமான திருமாலை உவமை வழியாகக் குறிப்பிடுகிறது.
இடைச்சிறுவன் பால் விற்றல், ஆடு மேய்த்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் காட்சியை நற்றிணைப் பாடலில் காணலாம். நுண்ணிய பல மழைத் துளிகள் அவன் உடலின் ஒருபுறத்தை நனைக்கின்றன. கையில் கோலூன்றி அதன்மேல் கால்வைத்து அவன் நடுங்கி, ஒடுங்கி நிற்கிறான். வாயைக் குவித்துச் சீழ்க்கை ஒலி எழுப்புகிறான். அதனைக் கேட்டு ஆட்டுத் தொகுதி வேற்று நிலம் புகாமல் முல்லைக் காட்டிலேயே நிற்கின்றது.
பால்நொடை இடையன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்
தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவி னதுவே... (நற்றிணை : 142)(நொடை= விலை; துவலை = மழைத்துளி; மடிவிளி = சீழ்க்கை; சிறுதலை = ஆடு; தொழுதி = தொகுதி; ஏமார்த்து = மயங்கி; அல்கும் = தங்கும்)
நற்றிணையின் இப்பாடல் ஆயச்சிறுவனை நம் கண்முன் காட்டுகிறது. ஆடு மேய்த்தல், பால் விற்றல் முதலிய முல்லை நில மக்களின் தொழிலையும் நமக்குக் காட்டுகிறது. இடைக்காடனார் என்னும் புலவர் பாடிய பாடல் இது.
மழையில் நனைந்து குளிரால், நடுங்கும் ஆயச்சிறுமி தன் கைகளால் தோளை இறுக அணைத்துக் கொண்டு, தாய்ப் பசுக்களின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கன்றுகளிடம் “தாயர் இப்போதே வந்திடுவர்” என்று ஆறுதல் கூறுகிறாள். இது முல்லைப்பாட்டு காட்டும் காட்சி.
பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள்
இன்னே வருகுவர் தாயர் என்போள்(அலமரல் = வருத்தம்; சுவல் = தோள்; அசைத்தல் = கட்டிக் கொள்ளுதல்)
மழை தொடங்கியது; தலைவன் வரவில்லை, தலைவி வருந்துகிறாள். ஆறுதல் கூறும் தோழி, “காரணம் இல்லாது மழையைப் பெய்யும் மேகத்தைக் கண்டு கார்ப்பருவ மேகம் எனத் தவறாக எண்ணுகிறது, கொன்றைமரம். அறியாமையால் மலர்கின்றன கொன்றை மலர்கள். இதைக் கண்டு நீ இது கார்ப்பருவம் என்று வருந்தாதே” என்று தேற்றுகிறாள்.
பேதையங் கொன்றைக் கோதை நிலைநோக்கி
எவன்இனி மடந்தைநின் கலிழ்வே ?
(ஐங்குறுநூறு : 462)(பேதையங் கொன்றை = அறியாமையால் மலர்ந்த கொன்றை; கோதை = மாலை; கலுழ்தல் = கலங்குதல்)
இப்பாடலில் கொன்றை மரம், கொன்றைப் பூக்கள் ஆகிய கருப்பொருள்கள் இடம் பெறுகின்றன.
தண்நறும் பிடவமும் தவழ்பொடித் தளவமும்
வண்ணவண் தோன்றியும் வயங்குஇணர்க் கொன்றையும்
(கலித்தொகை-102 : 2-3)என்ற முல்லைக்கலிப் பாடல் அடிகள், பிடவம், முல்லை, தோன்றி, கொன்றை முதலிய முல்லை நிலத்துக்கு உரிய மலர்களைச் சுட்டுகின்றன.
அரசன் பணிப்பதால் தலைவன் போர்வினை முடிக்கச் செல்வான்; அல்லது இல்லற வாழ்வுக்குத் தேவையான பொருள் தேடச் செல்வான். அவன் வரும் காலத்தை எதிர்நோக்கி ஆற்றி இருப்பாள் (பொறுமையுடன் காத்திருப்பாள்) தலைவி. இதுவே முல்லைத் திணை உரிப்பொருள். பாடல்களில் தலைவி பொறுமையுடன் காத்திருத்தல், பருவம் கண்டு வருந்துதல், தோழி தலைவியைத் தேற்றுதல், தலைவன் வினை முடிந்து திரும்பி வருதல் போன்ற நிகழ்வுகளாக இவ்வுரிப்பொருள் அமைக்கப்பட்டிருக்கும்.
. தலைவி துயருடன் ஆற்றியிருத்தல்
கார்காலத்துப் பெருமழை மாலைக் காலத்தில் வந்தது. ஆண் மான்கள் பெண் மான்களைத் தழுவியவாறு மயக்கம் மிகுந்து காட்டில் மறைந்து ஒடுங்குகின்றன. ஆண் யானைகள் தத்தம் பெண் யானைகளோடு சேர்ந்து அழகிய மலைப் பக்கங்களை அடைந்தன. பொன்னைப் போன்ற என் மேனியின் அழகு, பிரிவினால் சிதையும்படி செய்த தலைவன் இன்னும் வரவில்லையே, இன்னமும் வராவிடில் என் இனிய உயிர் என்னாகும்? எனத் தலைவி வருந்தி இருக்கிறாள்.
· தோழி தேற்றல்வருந்தும் தலைவியைத் தோழி, “உன்னைப் பிரிந்து நீடித்து அங்கிருக்க மாட்டார் தலைவர். விரைவில் வருவார்” எனத் தேற்றுகிறாள்.
இனையல் வாழி தோழி எனையதூஉம்
நிற்றுறந்து அமைகுவர் அல்லர்
(ஐங்குறுநூறு : 461)(இனையல் = வருந்தாதே; எனையதூஉம் = சிறிதளவும்; நிற்றுறந்து = உன்னைப் பிரிந்து)
· தலைவன் தலைவியை எண்ணி இருத்தல்
பாசறையில் இருக்கும் தலைவன் தலைவியின் நிலையை எண்ணிப் பார்க்கிறான். ‘நம்மைப் பிரிந்து போன நம் தலைவனின் நிலை எப்படி இருக்கிறதோ என மயக்கம் அடைந்திருப்பாள் தலைவி. கண்ணீர் சிந்தி அழுது துன்பத்துடன் ஆற்றி இருப்பாள் அவள்’ என்று தன் நெஞ்சிற்குக் கூறுகிறான் தலைவன். இப்பாடலைப் பாடிய புலவர் மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன் தேவனார்.
எவன்கொல் மற்றுஅவர் நிலை?என மயங்கி
இகுபனி உறைக்கும் கண்ணொடு இனைபுஆங்கு
இன்னாது உறைவி
(அக நானூறு-164 : 8-10)(இகுபனி உறைக்கும் = கண்ணீர் சிந்தும்; இனைபு = அழுது உறைவி = தங்கியிருப்பவள்)
· தலைவன் வினைமுடிந்து திரும்புதல்வினைமுடிந்து தலைவியைக் காணப் பேராவலுடன் திரும்பும் தலைவன் பாகனை நோக்கி, “தலைவியின் துயரம் தீரவும், அவள் அழகு மீளுமாறு நான் தழுவவும் விரைந்து செல்லவேண்டும். விரைந்து தேரைச் செலுத்து” என்கிறான்.
அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
(ஐங்குறுநூறு : 485)(அரும்படர் = பெருந்துன்பம்; நலம் = அழகு; முயங்க = தழுவ; ஏமதி = செலுத்து; வலவ = பாகனே)