Primary tabs
- 3.2 மருதத் திணையின் முப்பொருள்கள்
முதற்பொருள் என்பன நிலமும் பொழுதும்; கருப்பொருள், தெய்வம், மக்கள், விலங்கு மற்றும் இயற்கைப் பொருள்கள்; உரிப்பொருள் நிலத்திற்குரிய மக்களின் ஒழுக்கம். இவற்றைச் சென்ற பாடங்களில் அறிந்தீர்கள். மருதத் திணைக்கு உரிய முப்பொருள்களையும் இப்பகுதியில் அறியலாம்.
மருதத் திணைக்கு உரிய நிலம் வயலும், வயலைச் சார்ந்த பகுதியும் ஆகும்.
மழைக்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற் காலம் ஆகிய ஆறு காலங்களுமே மருதத் திணைக்கு உரிய பெரும்பொழுது ஆகும். இவ்வாறு ஆண்டு முழுவதுமே மருதத்தின் பெரும்பொழுது ஆகின்றது.
அதிகாலை இரண்டு மணி முதல் காலை ஆறு மணிவரை உள்ள நேரத்தை வைகறை என்று கூறுவர். வைகறை நேரம்தான் மருதத்திணைக்கு உரிய சிறுபொழுது ஆகும்.
மருதத்திணைக்கு உரிய கருப்பொருள்களை இனி அறியலாம்.
தெய்வம்:இந்திரன்மக்கள்:ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி,
உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்பறவை:நாரை, நீர்க்கோழி, அன்னம், குருகுவிலங்கு:எருமை, நீர்நாய்ஊர்:பேரூர், மூதூர்நீர்:ஆறு, மனைக்கிணறு, பொய்கைபூ:தாமரை, குவளை, கழுநீர்ப்பூமரம்:மருதம், காஞ்சி, வஞ்சிஉணவு:செந்நெல், வெண்ணெல்பறை:மணமுழா, நெல்லரிகிணைபண்:மருதப்பண்யாழ்:மருதயாழ்தொழில்:நெல்லரிதல், கடாவிடுதல், குளத்திலும்
ஆற்றிலும் புனலாடல்
ஊடலும், ஊடல் தொடர்பான நிகழ்வுகளும் மருதத் திணைக்கு உரிய உரிப்பொருள் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சிறு கோபத்தைத்தான் ஊடல் என்று சொல்கிறோம். ஊடல் என்பதைப் புலவி என்றும் சொல்லலாம். மருதத் தலைவன் பொருட் பெண்டிர் என்று அழைக்கப்படும் பரத்தையரை நாடிச் செல்வான். பின் தன் வீட்டிற்கு அவன் வரும்போது தலைவி அவன்மீது ஊடல் கொள்வாள். இத்தகு ஊடல், ஊடல் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் மருதத்திணைப் பாடல்களில் இடம்பெறும்.