தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மருதத் திணையின் இயல்புகள்

  • 3.4 மருதத் திணையின் இயல்புகள்


    பரத்தை ஒழுக்கம், அது தொடர்பான வாயில் மறுத்தல், புதுப்புனல் ஆடல், ஊடல் தணிவித்தல் போன்றவையும் பிள்ளைத்தாலி அணிதல் போன்ற சமூக நிகழ்ச்சிகளும் மருதத் திணைப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

    3.4.1 பரத்தைமை ஒழுக்கம் 


    மருதத் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்துப் பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்வான். இத்தகு பரத்தைமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்வாள் தலைவி. மருதத் திணைப் பாடல்களில் பரத்தைமை ஒழுக்கம் பெரிதும் குறிக்கப்படுகிறது. மருதத் திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதை அறிவீர்கள். தலைவியின் ஊடலுக்குத் தலைவனின் பரத்தைமை ஒழுக்கமே காரணமாகச் சொல்லப்படுவதால், மிகப் பெரும்பாலான மருதத் திணைப் பாடல்களில் தலைவனின் பரத்தைமை ஒழுக்கமே உள்ளடக்கம் ஆகிறது.

    தலைவன் தன் இல்லத்துக்குச் செல்ல மறந்து பரத்தையோடு தங்குகிறான். ஒருநாள் பரத்தை நின் இல்லத்திற்குச் சென்று வா” என்று கூறுகிறாள். தன் இல்லம் நாடி வருகிறான் தலைவன், பரத்தை விரும்பிச் சொன்னதால் நீ இங்கு வர வேண்டாம் அவளது வீட்டிலேயே தங்கிவிடு. அது எமக்கும் நல்லது” என்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி.

    நினக்கே அன்றுஅஃது எமக்குமார் இனிதே

    நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை
    வேண்டிய குறிப்பினை ஆகி
    ஈண்டுநீ அருளாது ஆண்டுஉறை தல்லே
    (ஐங்குறுநூறு - 46)

    (நயந்த = விரும்பிய; நுதல் = நெற்றி; அரிவை = பெண் (பரத்தை); உறைதல் = தங்குதல்; ஆண்டு = அங்கு)

    தோழி கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல் ஒன்றில் (பாடல் எண் : 45, ஆலங்குடி வங்கனார்) தலைவன் காலையில் புறப்பட்டு, விரைவாகச் செல்லும் தேரின் மீது ஏறித் தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரை நாடிப் போகிறான் என்னும் செய்தி இடம் பெறுகிறது. பரத்தையரை நாடிப் போகும் போதே தலைவியும் தோழியும் அதனை அறிந்திருக்கின்றனர் என்பதை இங்குக் காண்கிறோம்.
     

    3.4.2 வாயில் மறுத்தல்


    பரத்தையிடம் சென்று வந்த தலைவன், தலைவியின் ஊடலுக்கு அஞ்சுவான். தான் தன் இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன் பாணனை அனுப்பித் தோழி மூலமாகத் தன் கருத்தைத் தலைவிக்குத் தெரிவிப்பான். தலைவனின் வருகைக்காகத் தூது வரும் பாணன் வாயில் எனப்படுவான். பாணனின் வேண்டுகோளைத் தோழி மறுத்தலே வாயில் மறுத்தல் எனப்படும். பாணன் முதலியோர் மட்டுமன்றித் தோழியும் தலைவியிடம் வாயிலாக இருப்பதுண்டு. வாயில் மறுப்பதும், வாயில் நேர்வதும் (நேர்தல் = ஏற்றல்) தலைவியின் மனநிலைக்கு ஏற்ப அமையும்.

    தலைவன் அனுப்பிய தூதர் தலைவியிடம் வந்தனர். அப்போது தலைவி இவ்வாறு கூறி வாயில் மறுக்கிறாள் :

    அம்ம வாழி தோழி மகிழ்நன்
    ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்
    அழுப என்ப அவன் பெண்டிர்
    தீஉறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே

    (ஐங்குறுநூறு - 32)

    “தோழியே, கேள் ! நம் இல்லத்தை நோக்கி மகிழ்நன் (தலைவன்) ஒருநாள் வந்தான். அவன் பெண்டிர் அதனைப் பொறுக்காமல் தீயில் பட்ட மெழுகைப் போன்று உடனே மனம் கலங்கினர்; ஏழுநாள் வரை அழுது தீர்த்தனர் என்று பலரும் கூறுவர்” என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். ஒருநாள் தலைவன் பிரிந்தால் ஏழுநாள் பரத்தையர் துன்புறுவர் - அதனால் அவன் இங்கு வரவேண்டாம் என்ற குறிப்பில் தலைவி வாயில் மறுக்கின்றாள்.

    தலைவியின் ஊடலைத் தீர்க்க வந்த பாணன், தலைவன் தவறு இல்லாதவன் எனக் கூறி அவளிடம் வாயில் வேண்டுகிறான்; தலைவனின் தேர் பரத்தையர் சேரிக்குச் சென்றதில்லை என்கிறான். அவனிடம் தலைவி, “மாயத் தலைவனின் வாய்மொழியை நம்பித் தன் நலம் துறக்கத் துணிந்த மற்றோர் பரத்தையும் இருப்பாள். அங்கு நீ போ. அவள் ஊடலை நீ தீர்ப்பாயாக” என்று சொல்கிறாள். இவ்வாறு தன் ஊடலை மிகுதியாக்கி வாயில் மறுக்கின்றாள் அகநானூற்றுத் தலைவி. (அகநானூறு : 146 : உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார்)
     

    3.4.3 புதுப்புனல் ஆடல்


    ஆற்றில் பெருகி வரும் புது வெள்ளம் கண்டு மகிழ்ந்து நீராடி மகிழும் வழக்கம் மருத நிலத்து மக்களிடம் உண்டு.

    தோழியும் தலைவியும் இணைந்து புதுப்புனலில் நீராடியதைக் கலித்தொகைத் தலைவி இவ்வாறு கூறுகிறாள் :

    புனைஇழை நோக்கியும், புனல்ஆடப் புறம்சூழ்ந்தும் (கலித்தொகை - 76 : 1)

    (இழை = அணி; புறம் = வெளியில்)

    “நன்கு செய்யப்பட்ட என் அணிகளைத் திருத்தினான் தலைவன். நாம் நீரில் ஆடும்போது நமக்கு ஒரு துன்பம் வாராமல் வெளியில் காவல் காத்தான் அவன்” - என்பது இப்பாடல் வரியின் பொருள்.

    முன் ஒருநாள் தலைவியுடன் புதுப்புனல் ஆடிய தலைவன், “இனி நான் பரத்தைமை ஒழுக்கத்தை மேற்கொள்ள மாட்டேன்” என்று உறுதி கூறினான். அவன் இன்று பரத்தையரோடு புனல் ஆடுகிறான் என்பதைத் தலைவி கேள்விப்படுகிறாள். அவனுக்கு நெருக்கமானோர் கேட்கும்படி அவள் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள் :

    “தோழியே ! கேள். வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்து இருக்கின்ற இடம் பெருந்துறை. அத்துறையில் நீராடும்போது, உடன் நீராடுவோர் அறியும்படி, ‘இனிப் பரத்தைமையை விரும்பேன்’ என்று சூள் (உறுதி, சபதம்) உரைத்தான் தலைவன். அதை மறவாமல் கடைப்பிடித்தல் தனக்குக் கடமை அன்று என அவன் கூறுவானோ?” (ஐங்குறுநூறு- 31)

    தலைவன் தலைவியோடும் புனல் ஆடுகிறான்; பரத்தையிடம் செல்லும்போது பரத்தையோடும் புனல் ஆடுகிறான் என்ற உண்மையை இங்குக் காண்கிறோம்.

    மகிழ்நன்
    மருதுஉயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
    பெண்டிரொடு ஆடும் என்ப

    (ஐங்குறுநூறு - 33 : 1-3)

    இப்பாடலில் தலைவன் பரத்தையரோடு புதுப்புனல் ஆடுவது குறிக்கப்படுகிறது.

    மகிழ்நன், மருத மரங்கள் நீண்டு உயர்ந்து பூக்கள் விரிந்து கிடக்கும் நீர்த்துறையில் “பரத்தையரோடு நீராடுகின்றான் எனச் சொல்வர்” என்பது இதன் பொருள்.
     

    3.4.4 ஊடல் தணிதல்

    ஊடல் கொள்வதை மட்டுமின்றி ஊடல் தீர்ப்பதையும் ஊடல் தீர்வதையும் மருதத் திணைப் பாடல்களில் காணலாம். ஊடல் தீர்வதற்குத் தலைவியின் மனநிலை, பெற்ற புதல்வனிடத்துக் கொண்ட பாசம் ஆகியன காரணங்கள் ஆகின்றன.

    பரத்தையிடம் சென்று திரும்பிய தலைவன் தலைவியை நெருங்க முயற்சி செய்தான். அப்போது தலைவி ஊடல் கொண்டு, “இனி எம்மனைக்கு வராதே. வந்ததைப்போல் போ!” என்று கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவன், “நீ இவ்வாறு பேசினால் என் உயிர் எங்ஙனம் நிற்கும்? வழி சொல்வாய்” என்கிறான். “உன் பொய்களை எல்லாம் எனக்குச் சொல்லி வருந்தாதே. முன்பே உன் வஞ்சனைகளை நான் அறிந்துள்ளேன்” என்கிறாள் தலைவி. அதற்குத் தலைவன், “என்னை வெறுக்காதே, இனிய சிரிப்பை உடையவளே, நீ என் மீது கூற விரும்பும் தீதை நான் உடையவன் அல்லன்” என்கிறான். அதைக் கேட்ட தலைவி, “நெஞ்சே! இனியும் இவனிடம் சினம் கொண்டால், தவறு செய்து விட்டேன் என்று என் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாலும் வணங்குவான். ஆதலால் இந்த ஊடல் போரில் தோற்று அதன் பயனைக் காண்போம்” என்று தன் நெஞ்சிற்குக் கூறி ஊடல் நீங்கப் பெறுகிறாள். (கலித்தொகை - 89)

    தலைவியின் மனநிலை இப்பாடலில் ஊடலைத் தீர்த்து வைக்கக் காண்கிறோம்.

    தலைவன் பரத்தையிடம் போய்த் திரும்பி வந்தான். அப்போது தலைவி தன் மகனைத் தழுவி விளையாடிக் கொண்டிருந்தாள். தலைவன் அவள் அறியாதபடி வீட்டினுள் சென்றான். அவள் அவனுடன் ஊடல் கொண்டு சினந்து உரையாடினாள். முடிவில் தலைவன், “ஏடி ! நான் தீங்கற்றவன் என்று சொன்னேன். நீ சினம் தணியாது இருக்கின்றாய். கன்றைக் கட்டின இடம் தேடிச் செல்லும் பசுவைப் போல நான் என் தந்தையின் பெயர் கொண்ட மகனை எடுத்துக் கொள்வேன்” என்கிறான். மகன் மீது அவன் கொண்ட பாசத்தால் தலைவியின் ஊடல் தீர்கின்றது.

    மேதக்க எந்தை பெயரனை யாம்கொள்வேம்
    தாவா விருப்பொடு கன்றுயாத் துழிச்செல்லும்
    ஆபோல் படர்தக நாம்

    (கலித்தொகை - 81 : 35-37)

    (மேதக்க = மேன்மை உடைய; எந்தை பெயரன் = என் தந்தையின் பெயர்கொண்ட மகன்; தாவா = கெடாத; யாத்துஉழி = கட்டப்பட்ட இடத்தில்; ஆ = பசு; படர்தக = வரும்படி)

    ஊடல் நீளாமல் தீர்க்கப் பெறுவது மருதத் திணைப் பாடல்களுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.
     

    3.4.5 பிள்ளைத்தாலி அணிதல்

    கலித்தொகைப் பாடல்களால் (பாடல் எண் 82, 85, 86) இளம் பிள்ளைகளுக்கு வைணவ முறையில் அமைந்த ஐம்படைத் தாலி அல்லது சைவ மயமான தாலி ஒன்று மார்பில் அணிவதுண்டு எனத் தெரிகிறது. அத்தாலி காளை (நந்தி) முத்திரை கொண்டது. அதில் பவளத்தால் செய்த காளை உருவும், பொன்னால் ஆன மழு, வாள்களின் உருவும் விளங்கும் என்றும் தெரிகிறது. இச்செய்தி வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை.

    பரத்தை ஒருத்தி தலைவனின் மகனுக்குக் காளை முத்திரையைக் கைக் காணிக்கையாக இடுகிறாள்.

    அவளும்
    மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து
    (கலித்தொகை - 82 : 11-12)

    கலித்தொகைத் தலைவி ஒருத்தி தன் மகனுக்கு அணிவித்திருக்கும் அணிகளைப் பற்றிச் சொல்லும்போது, ‘மகனே! நீ அணிந்தவை வெட்டாத வாள், வெட்டாத மழு ஆகியவை நெருங்கக் கட்டிய அணி, மழைக்காலத்துத் தம்பலப் பூச்சியின் நிறத்தை உடைய பவளத்தால் செய்த காளை வடிவுடைய அணி ஆகியன’ என்று கூறுவது (பாடல்- 85 : 8-11) இங்குக் குறிப்பிடத்தக்கது.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-07-2018 18:38:11(இந்திய நேரம்)