Primary tabs
- 4.5 இலக்கிய நயங்கள்
நெய்தல் திணைப் பாடல்களில் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை முதலிய இலக்கிய நயங்கள் சுவையூட்டும் தன்மையை இப்பகுதியில் அறியலாம்.
நண்பர்களே ! நாம் முன்பு கண்ட புன்னை மரத்தைத் தங்கையாகக் கருதும் நற்றிணைப் பாடல் (172) கற்பனைக்கு நல்ல சான்று.
தலைவனது பிரிவால் வருந்தும் தலைவி ஒருத்தியின் காம நோய்க் கொடுமையைக் காட்டும் அம்மூவனார் பாடிய குறுந்தொகைப் பாடலில் அமைந்துள்ள கற்பனை நயத்தைக் காண்போம்.
பிரிவு வேதனையால் இரவு முழுதும் உறக்கம் இன்றித் தவிக்கிறாள் தலைவி. அவளுக்குத் துணையாக, ஆறுதல் சொல்ல அந்த இரவில் யாரும் இல்லை. இரவு முழுதும் இடைவிடாமல் கடல் அலைகளின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இடைவிடாமல் துன்ப அலை வீசிக் கொண்டிருக்கும் தன் உள்ளத்துக்கும் கடலுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகக் காண்கிறாள் தலைவி. கடலை நோக்கிக் கேட்கிறாள் : “கடலே ! கரையில் உள்ள வெண்மை நிறமுடைய தாழம் பூக்களை அலைகள் மோதி மோதி அலைக்கழிக்கின்ற இந்த இரவு முழுவதும் உனது வருத்தமான குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நீ யார் மீது கொண்ட காதல் காரணமாக இத்துன்பத்துக்கு ஆளானாய்?”.
யாரணங் குற்றனை கடலே.....
வெள்வீத் தாழைத் திரையலை
நள்ளென் கங்குலும் கேட்கும்நின் குரலே
(குறுந்தொகை - 163 : 1, 4-5)‘கடலும் யாரையோ காதலித்துக் காம நோயால் புலம்புகிறது’ என்ற தலைவியின் எண்ணம் கவிஞரின் அழகிய கற்பனையில் இருந்து எழுந்திருக்கிறது.
கலித்தொகைப் பாடலொன்று சொல்வன்மைக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் சான்றாகின்றது.
தலைவியின் உறவினர் மணத்துக்குச் சம்மதிக்கின்றனர். தலைவனும் சம்மதிக்கின்றான். ஆனால் காலம் தாழ்த்துகின்றான். விரைந்து மணக்குமாறு தோழி கூறுகிறாள்.
“இல்வாழ்வு நடத்துதல் என்பது வறியவர்க்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்து உதவுதலாகும்; ஒன்றைப் பாதுகாத்தல் என்பது கூடியவரைப் பிரியாமல் இருத்தலாகும்; மக்கள் பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதலாகும்; அன்பு என்பது, தன் சுற்றம் கெடாது இருக்கச் செய்தலேயாகும். அறிவு என்பது அறியாதவர் தம்மைப் பார்த்துச் சொல்லும் சொல்லைப் பொறுத்தலேயாகும்” என்று பலவாறாக மனித வாழ்விற்குத் தேவையான பண்புகளைப் பட்டியல் இடுகிறாள் தோழி.
ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்புஎனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்
அன்புஎனப் படுவது தன்கிளை செறாஅமை
(கலித்தொகை - 133 : 6-9)(அலந்தவர் = வறியவர் (ஏழையர்); பாடு = உலக ஒழுக்கம், மரபு; கிளை = சுற்றம்; செறாஅமை = பகை கொள்ளாமை )
‘பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்’ என்பது எத்தகைய சொல் இனிமையும் பொருள் சிறப்பும் கொண்டு அமைந்துள்ளது என்பதை நோக்குங்கள்!
உவமை நயம் சிறக்கும் நெய்தல் பாடல்கள் பல. சான்றாகச் சிலவற்றைக் காணலாம்.
‘நண்டு தாக்குவதால் துறையில் வாழும் இறால் மீன் புரளும் இடம் தொண்டி. இனிய ஆரவாரம் நிறைந்த அத்தொண்டி போன்றது இவளது நெற்றி’ என்கிறார் அம்மூவனார் (ஐங்குறுநூறு - 179). ஓர் ஊரைச் சொல்லி அதைப் போன்றது நெற்றி என்று ஏன் சொல்ல வேண்டும்? “அழகாலும், இன்பத்தாலும் இனிய ஆரவாரங்கள் நிறைந்த தொண்டிக்கு ஒரு சிறு துன்பம் நேர்ந்தாலும், அது ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதுபோலக் காதல் துயரால் இவளது நல்ல நெற்றி பசலை கண்டால், மற்றவர்க்குக் களவுக் காதல் தெரிந்துவிடும். இவள் நாணம் உடையவள் என்பதால் உயிர்வாழ மாட்டாள். அதனால் வளம் மிகுந்த தொண்டி போன்ற இவளது அழகு மிகுந்த நெற்றியில் பசலை வரக் காரணமாக இருக்காதே. விரைவில் மணந்து கொள்” என்று குறிப்பாகத் தலைவனிடம் உணர்த்த இவ்வாறு கூறுகிறாள்.
உவமையைச் சொல்வதில்,
கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே
(ஐங்குறுநூறு - 184)என்ற தொடர் சிறக்கின்றது. கடலை விடப் பெரியது அவர் கொண்ட காதல் என்று தலைவி கூறுவது இலக்கிய இன்பம் தருகிறது.
நெய்தல் நில மக்களுக்கு ஏற்ற, அவர் தம் வாழ்க்கை முறைக்கு ஏற்ற உவமையை எடுத்தாள்வது உண்டு.
புறங்காட்டி ஓடாத கொள்கையை உடைய மன்னன் ஒரு பாசறை அமைக்கின்றான். அதில் உள்ள யானைகளின் பொன்னால் ஆன முகத்திரைகள் (முகபடாங்கள்) ஆடுகின்றன; ஒளிவிடுகின்றன. அதைப்போல் கடலில் பரதவர் மீன் பிடிக்கப் பயன்படுத்தும் தோணிகளில் (படகுகளில்) விளக்குகள் ஒளி சிந்துகின்றன. (அகநானூறு - 100 : 5-10, உலோச்சனார்)
இந்த உவமை பரதவர்கள் புறங்காட்டி ஓடாதவர்கள், அவர்தம் படகுகள் யானைபோல் பலம் வாய்ந்தவை என்ற கருத்துகளையும் உணர்த்துகின்றது.
அகநானூற்றின் 130-ஆவது பாடல் உள்ளுறைக்குச் சான்றாகிறது.
தலைவி ஒருத்தி மீது காதல் கொண்டு வாடும் தலைவனின் வேறுபாடு கண்டு இகழ்கிறான் பாங்கன் (தோழன்). அவனிடம் தலைவன் மறுமொழி கூறுகிறான்; தலைவியைப் பார்த்த இடத்தைக் கூறுகிறான்.
கடற்கரையில் தாழையின் மணம் நன்கு பரவிப் புலால் நாற்றத்தைப் போக்கும் இடம் அது என்கிறான். தலைவியின் காதல் பார்வை தலைவனின் கட்டுப்பாடு (நிறை) முதலியவற்றைப் போக்கிவிட்டது என்பது இந்த வருணனையின் உள்ளுறைப் பொருள்.
அலைகள் கொண்டுவந்து கரையில் வீசியுள்ள முத்துகள் குதிரையின் ஓட்டத்தைத் தடுக்கும் என்கிறான். தலைவியின் காதல் அவன் நெஞ்சத்தைக் தடுத்து நிறுத்தியது என்பது உள்ளுறை. (அகநானூறு - 130 : வெண்கண்ணனார்)
நற்றிணைப் பாடலில் (63, உலோச்சனார்) தோழியின் கூற்றில் உள்ளுறை அமைகின்றது. தலைவன் - தலைவி காதலை ஊரார் அலர் (பழி) தூற்றுவதன் காரணமாக விரைவில் தலைவியை மணம் புரியுமாறு தோழி தலைவனிடம் வேண்டுகிறாள். அப்போது,
‘கழிச்சேற்றில் (உப்பங்கழிச் சகதியில்) ஓடும் குதிரைகளின் உடம்பிலே பட்ட சேறு கடல்நீரால் கழுவப்படும்’ என்று ஒரு வருணனை சொல்கிறாள்.
களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைவி, தலைவன் இருவர் மீதும் படிந்த அலர்ப்பழி, அவ்விருவரும் இணையும் திருமணத்தால் நீக்கப்படும் என்பதை உள்ளுறையாக உணர்த்துகிறது இவ்வருணனை.