தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெய்தல் திணையின் முப்பொருள்கள்

  • 4.2 நெய்தல் திணையின் முப்பொருள்கள்

    சென்ற பாடங்களின் மூலம் நிலமும், பொழுதும் முதற்பொருள் என்று அறிந்தீர்கள். தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், மரம், தொழில் போன்றவை கருப்பொருள்கள் என்று அறிந்தீர்கள்; நிலத்திற்குரிய தலைவன் -தலைவி ஒழுக்கமே உரிப்பொருள் என்பதையும் அறிந்தீர்கள். நெய்தல் திணைக்கு உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.

    4.2.1 முதற்பொருள்

    நெய்தல் திணைக்கு உரிய நிலம் கடலும், கடல் சார்ந்த பகுதியும் ஆகும். பெரும்பொழுது ஆறும் நெய்தல் திணைக்கு உரியன. மருதத்தைப் போலவே நெய்தலுக்கும் ஆண்டு முழுவதும் உரிய காலமாகும்.

    1) இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி)
    2) முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி)
    3) கார் காலம் (ஆவணி, புரட்டாசி)
    4) குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை)
    5) முன்பனிக் காலம் (மார்கழி, தை)
    6) பின்பனிக் காலம் (மாசி, பங்குனி)

    இவை ஆறும் நெய்தலின் பெரும்பொழுது ஆகும். நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது எற்பாடு. எற்பாடு என்றால் சூரியன் மறையும் நேரம் அல்லது ஒளி மறையும் நேரம் என்று பொருள்படும்.

    4.2.2 கருப்பொருள்

    நெய்தல் திணைக்கு உரிய கருப்பொருள்கள் :

    தெய்வம்
    :
    வருணன்
    மக்கள்
    :

    துறைவன், சேர்ப்பன், பரத்தி, பரதவர், பரத்தியர்,
    நுளைச்சி, நுளையர், நுளைச்சியர், அளவர்

    பறவை
    :
    நீர்க்காக்கை, அன்னம்
    விலங்கு
    :
    சுறா, முதலை
    ஊர்
    :
    பட்டினம், பாக்கம்
    நீர்
    :
    மணற்கேணி
    பூ
    :
    நெய்தல், தாழை
    மரம்
    :
    புன்னை, தாழை
    உணவு
    :
    மீனும் உப்பும் விற்றலால் வரும் பொருள்.
    பறை
    :
    மீன்கோட் பறை
    பண்
    :
    செவ்வழிப் பண்
    யாழ்
    :
    விளரியாழ்
    தொழில்
    :
    உப்பு விற்றல், மீன் பிடித்தல்
    4.2.3 உரிப்பொருள்


    நெய்தல் திணைக்கு உரிய உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். இரங்கல் என்றால் வருந்துதல் என்று பொருள். கடலுள் மீன் பிடிக்கச் சென்ற தலைவனை நினைத்து, காற்றும் மழையும் தொடர்வதால் அவனுக்கு ஏற்படும் துன்பத்தை நினைத்துக் கரையில் உள்ள தலைவி வருந்திக் கொண்டிருப்பாள். தலைவன் தலைவியை மணந்து கொள்ளக் காலம் நீட்டித்தல், தலைவியைக் காண வராதிருத்தல் போன்றவையும் தலைவியின் இரங்கலுக்குக் காரணங்கள் ஆகும். இத்தகைய வருத்தம், அல்லது வருத்தம் தொடர்பான செய்திகளே நெய்தல் திணையின் உரிப்பொருள் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 17-07-2018 12:49:57(இந்திய நேரம்)