தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    ''யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்னும் விரிந்த சிந்தனை வேண்டும் என்று எண்ணுகிற காலம் இது. அறிவியலின் வியத்தகு ஆற்றலால் உலகமே உள்ளங்கையில் அடங்கி விட்ட யுகம் இது. இலக்கியம், அறிவியல், தருக்கவியல், பொருளியல், சமூகவியல், உளவியல், அரசியல் எனப் பல்வேறு துறைகள் உள்ளன. ஒரு துறையில் மட்டும் புலமை கொள்ளாமல் எல்லாத் துறைகள் பற்றியும் ஓரளவாயினும் அறிந்திருத்தல் நலம். இதற்காக எல்லா மொழிகளையும் கற்றறிதல் என்பது இயலாத செயல். இதனை எளிதாக்கத் துணை நிற்கும் மிகச் சிறந்த கருவியே ''மொழிபெயர்ப்பு'' என்பது சாலப் பொருந்தும்.

    பிற மொழிகளில் உள்ள கதைகள், கட்டுரைகள், புதினங்கள், நாடகங்கள், கவிதைகள், திறனாய்வுகள், வரலாற்று நூல்கள், பாட நூல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்தல் என்பது ஒரு சீரிய பணியாகும். நாளிதழ், வார, திங்கள் இதழ்கள் போன்ற ஏடுகளின் அலுவலகங்களுக்கு ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் வரும் செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை மொழிபெயர்த்தல் இன்றியமையாததாகும். ஒரு மொழியைக் கருத்துலகின் கால வேகத்துக்கு ஏற்புடையதாக வளமாக்குவதில் மொழிபெயர்ப்பின் பங்கு மிகப் பெரிதாகும். மொழிபெயர்ப்பில், கலாச்சாரம் அல்லது பண்பாட்டுப் பரிமாற்றமும் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய பகுதி என்பது மொழிபெயர்ப்பாளனின் மனத்தில் பதிய வேண்டும்.

    அறிவியல் மொழிபெயர்ப்பாக இருந்தால் உண்மைச் செய்திகள் உரிய செறிவோடு தரப்படுதல் வேண்டும். கவிதை மொழிபெயர்ப்பு சற்று மாறுபட்ட தன்மையுடையது. ''ஒரு கவிஞனின் உள்ளம் ஒரு மொழியில் உயிரோட்டமாக உருக்கொண்டதனை, மற்றொரு மொழியில் உயிரோட்டமாக வேறொரு கவிஞன் உருக்கொடுப்பதுவே கவிதையின் உண்மையான மொழிபெயர்ப்பு'' என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறிச் செல்வது இங்குச் சிந்தித்தற்குரியது. இரு மொழி அறிந்த ஒருவர் எல்லாத் துறைசார் மொழிபெயர்ப்புகளையும் செய்துவிட முடியும் என்று கருதுவது பொருத்தமான முடிவு அல்ல.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:32:26(இந்திய நேரம்)