தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • 2.4 மொழிபெயர்ப்புக்காக ஒரு ‘டைஜெஸ்ட்’ (தொகுப்பு)

    கலைமகள் உரிமையாளரான திரு.என். ராம ரத்தினம் அவர்களுக்கு வெகுகாலமாகவே ரீடர்ஸ் டைஜெஸ்ட் போன்று தமிழில் இதழ் ஒன்று வெளியிட வேண்டுமென்ற விருப்பம் இருந்து வந்தது. தம்முடைய தந்தை நடத்தி வந்த Madras Law Journal என்ற சட்ட இதழை இவர் தொடர்ந்து நடத்தினார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லுநரான அவர் 1947 இல் தனது ஆர்வத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். 1950 சனவரியில் கண்ணன் இதழ் தொடங்கப்பட்டது. பின்னர் மஞ்சரியைத் தொடங்கினார். அப்போது கலைமகளின் துணை ஆசிரியராக விளங்கிய கா.ஸ்ரீ. ஸ்ரீயின் பரிந்துரையின் பேரில் தி.ஜ.ர. ஆசிரியராக, மஞ்சரி வலம் வரத் தொடங்கியது. ஆங்கிலக் கட்டுரை, கதைகளை மிகவும் எளிதாக மொழிபெயர்த்த தி.ஜ.ர. விடுதலை வீரர்; வ.ரா.வின் சீடர்; காந்தி பக்தர். இந்தத் தகுதிகளுடன் பன்மொழி வல்லுநருமாக இருந்தார்.

    இந்நிலையில் வங்கமும், தமிழும், ஆங்கிலமும் நன்கறிந்து புலமை பெற்றுத் தேறிய த.நா.சேனாபதி அவர்கள் துணை ஆசிரியர் ஆனார். இவர் பெசன்ட் பள்ளி ஆசிரியர் பதவியை விடுத்து மஞ்சரி துணை ஆசிரியர் ஆனார். பின்பு கலைமகள் ஆசிரியரான கி.வா.ஜ.வின் அறிவுரைப்படி தாகூர் நூல்களை மொழிபெயர்த்தார். காளிதாசன், ஷேக்ஸ்பியர் போன்ற ஆசிரியர்களின் படைப்புகள் குறித்து கி.சந்திரசேகர் எழுதியும், பேசியும் வந்தார்.

    கி.சாவித்திரி அம்மாள், கி.சரசுவதி அம்மாள் இருவரும் வங்கமொழி நன்கறிந்த இலக்கிய வாதிகள். இவர்களில் சாவித்திரி அம்மாள் தாகூரின் ஒரு நாவலை வீடும் வெளியும் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். பிரேம்சந்தின் இந்திச் சிறுகதைகளைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்தார். காண்டேகரின் படைப்புகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்தார். மலையாள, கன்னட, தெலுங்கு மொழிப் படைப்புகளும் தமிழாக்கம் பெற்று மஞ்சரியில் வெளிவந்தன. இவ்வடிப்படையில் மஞ்சரி என்ற இதழ் மொழிபெயர்ப்புப் படைப்புக்களுக்காகவே உருவெடுத்தது என்றால் மிகையாகாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:32:41(இந்திய நேரம்)