தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல்லாக்கம்

  • 1.3 சொல்லாக்கம்

    மரபு வழிப்பட்ட இலக்கண, இலக்கியப் படைப்புகள் மூலம் வெளிப்படும் தமிழ்மொழியானது, இன்று பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் மாற்றம் பெறுவதுடன், அறிவியல் மொழியாகவும் வளம் பெறும்போது, தமிழ்மொழியை நவீனச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. பல்வேறு துறைக் கருத்துகளையும் பதிய சிந்தனைகளையும் எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கிட ஒரு மொழியின் தன்மையானது, நெகிழ்ச்சியுடன் இருத்தல் வேண்டும். குறிப்பாக உயர்கல்வியில் பயன்படுத்தப்படும் ஒரு மொழிக்கு வளமையான சொற்களஞ்சியம் தேவை. புதிது புதிதான சொல்லாக்கங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் இன்றைய தகவல் உலகின் புதிய சிந்தனைப் போக்குகளையும் ஆய்வுகளையும் தமிழில் மொழிபெயர்க்க இயலும்.

    பிறமொழிகளிலிருந்து ஒருமொழிக்குச் சொற்களை மொழிபெயர்க்கையில், அம்மொழியில் இல்லாத சொற்களைப் புதிதாக மொழிபெயர்த்து அல்லது ஒலிபெயர்த்துப் புதிய சொற்களை உருவாக்குதல் சொல்லாக்கம் எனப்படுகிறது. புதிய கருத்தினை விளக்குவதற்காக உருவாக்கப்படும் சொற்கள், சுருக்கமானவையாகவும், இலக்கண அமைதிக்கு ஈடு கொடுப்பவையாகவும் இருக்க வேண்டும். சுருங்கக் கூறின், புதிய கருத்துகள் அல்லது பொருள்களை வெளிப்படுத்தும் சொற்களை உருவாக்கும் நிலையினைச் சொல்லாக்கமஎன்று வரையறுக்கலாம். அது செய்முறை, விளைவு என்ற கூறுகளைக் கொண்டது என்பது மொழியியலாளர் கருத்து.

    1.3.1 சொல்லாக்கத்தின் நோக்கம்

    ஒப்பீட்டளவில் இன்று மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாகச் சொல்லாக்கம் விளங்குகிறது. நாளும் மாறிவரும் அறிவியல், தொழில்நுட்பத்தின் விளைவாகத் தகவல் தொடர்பியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இன்று தகவல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஒரு மொழியின் வளர்ச்சியென்பது இத்தகைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உள்வாங்கிக் கொண்டு,     செறிவாக,     வெளிப்படுவதாகும். குறிப்பாக இணையகங்களின் பக்கங்களில் அதிகபட்சமான இடத்தினைப் பிடித்துள்ள மொழிகளே, நன்கு வளர்ச்சியடைந்தவைகளாகக் கருதிட இயலும். இந்நிலையில் கருத்தியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் சொற்கள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்ற மொழிகளே உச்ச நிலையினை அடைய முடியும்.

    தமிழைப் பொறுத்த வரையில், ''ஆட்சி மொழியாகவும் உயர்கல்வியில் பயிற்று மொழியாகவும் தமிழே இடம்பெற வேண்டும்'' என்பதால், புதிய சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய முயற்சிகள், தமிழ்மொழியின் வளர்ச்சி வேகத்தினைத் தூண்டுகின்றன; சொற்களஞ்சியம் பெருகிடக் காரணமாக அமைகின்றன.


    1.3.2 சொல்லாக்க வகைகள்

    மனித குல அறிவானது தொடக்கத்தில் கல்வெட்டுகள், சுடுமண் கற்கள் போன்றவற்றில் பதிவாயிற்று. நாளடைவில் ஓலைச்சுவடிகள், மரப்பட்டைகள், தோல்கள் மூலம் பதிவான கருத்துகள் அடுத்த தலைமுறைக்குப் பயன்பட்டன. காகிதம் கண்டறியப்பட்டதும் அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பும் ஆவணங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தின. இன்று கணினியின் பயன்பாட்டில் இணையகங்களில் கருத்துப் பரவல் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பம், சமூக அறிவியல், கலை, இலக்கியத் துறைகளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஊடகங்களில் வெளிவரும் ஆவணங்களைக் கண்டறிவது இயலாதது. இந்நிலையில் மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமான சொற்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் சொல்லாக்க முயற்சிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சொற்கள் தோன்றுகின்ற துறைகள் மாறுபடினும், அவை தோன்றுகின்ற முறைகளில் பொதுமைப் பண்புகளைக் காணமுடிகின்றது. தமிழைப் பொறுத்தவரையில் சொல்லாக்க முயற்சியில் பின்வரும் மூன்று வகைகளைக் காணமுடிகிறது.

    (1) புதிய சொற்களை உருவாக்குதல்
    (2) துறைச் சொற்களை உருவாக்குதல்
    (3) மொழிபெயர்ப்பின் மூலம் சொல்லாக்கம்

    • புதிய சொற்கள் உருவாக்கம்

    பண்டைக் காலத்தில், ஒன்றிலிருந்து இன்னொன்றினை வேறுபடுத்திக் காட்டிட, இடுகுறியாகப் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் ஏதேனும் ஒரு காரணம் கருதிப் பெயரிடும் மரபினால் புதிய சொற்கள் தோற்றுவிக்கப்பட்டன. இன்று புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, அவற்றை மக்களிடையே அறிமுகப்படுத்தும் நிலையில் புதிய சொற்கள் அதிக அளவில் உருவாக்கப்படும் நிலை உள்ளது.

    எடுத்துக்காட்டு :

    இடுகுறிப் பெயர்
    -
    கல், மரம், தீ
    காரணப் பெயர்
    -
    மின்னல், எழுத்தாணி, ஒற்று
    புதிய சொற்கள்
    -
    கணினி, வானொலி, குறுந்தகடு, இணையகம்.
     
    • துறைச் சொல்லாக்கம்

    சொல்லாக்கத்தில் இன்று முக்கிய இடம் வகிப்பது துறைச் சொல்லாக்கம். இது கலைச்சொல்லாக்கம் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் வழங்குகின்ற சிறப்புச் சொற்கள், அத்துறையின் பன்முகத் தன்மையினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. பொதுவாகக் கலைச்சொற்கள், அத்துறை சார்ந்தவர்களுக்கே எளிதில் விளங்கும் இயல்புடையன; எனினும் அவை துல்லியமான கருத்தினை வெளிப்படுத்தும் நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பொதுவாகத் துறைச் சொற்கள் பொருள் மயக்கத்திற்கு இடம் தராமல், கருத்து வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்திருக்கின்றன.

    இலக்கியத் துறையில் பயன்படும் துறைச் சொற்களின் அட்டவணை பின்வருமாறு :

    Gynocriticism
    -
    பெண்ணியத் திறனாய்வு
    Semantic
    -
    பொருண்மை
    Point of view
    -
    கருத்துக் கோணம்
    Parody
    -
    நையாண்டிப் போலி
    Narrator
    -
    கதை சொல்லி

    இவை போல ஒவ்வொரு துறையிலும் கருத்தினைப் புலப்படுத்திடத் தமிழில் ஆயிரக்கணக்கான சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    • மொழிபெயர்ப்புச் சொற்கள்

    புதிய அறிவியல் தொழில்நுட்பம் மேலைநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு அறிமுகமாகும்போது, அத்தொழில் நுட்பத்தினைத் தமிழில் தரும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது, புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. மூல மொழியில் எந்தப் பின்புலத்தில் ஒரு சொல் வழங்கப்படுகிறதோ, அதனைக் கருத்தில் கொண்டு பெறுமொழியில் மொழியெர்ப்பது வழக்கிலுள்ளது. கலைச்சொல்லாக்கத்தில் இடம்பெறும் சொற்கள் புதிதாக விதிவிலக்காக, மொழிபெயர்க்கப்படுகின்றன. ஏற்கனவே வழக்கிலிருக்கும் பண்டைத் தமிழ்ச் சொற்களையும் அப்படியே பயன்படுத்துவது வழக்கிலுள்ளது.

    எடுத்துக்காட்டு :

    Pilot
    -
    வலவன்
    Nurse
    -
    செவிலி
    Age
    -
    அகவை
    Web
    வலை

    இம்முறைக்கு மாறாக மொழிபெயர்ப்பின் மூலம் பெரிய அளவில் சொல்லாக்கம் தமிழில் நடைபெறுகின்றது.

    எடுத்துக்காட்டு :

    Software
    -
    மென்பொருள்
    Hardware
    -
    வன்பொருள்
    Compact Disk
    -
    குறுந்தட்டு
    Anthropology
    -
    மானிடவியல்

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமானவை யாவை?
    2.
    சொல் பற்றிய இளம்பூரணரின் கருத்து யாது?
    3.
    ‘கிளவி, மொழி, சொல்’ என்று மூன்று சொற்களின் மூலம் சொல்லினைக் குறிக்கும் இலக்கண நூல் யாது?
    4.
    சொல்லாக்கத்தின் தேவைகள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 13:53:01(இந்திய நேரம்)