தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இதழியல்

  • 1.1 இதழியல்

    காரிருள் அகத்தில் நல்ல
        கதிரொளி நீதான்! இந்தப்
    பாரிடைத் துயில்வோர் கண்ணில்
        பாய்ந்திடும் எழுச்சி நீதான்
    ஊரினை நாட்டை இந்த
        உலகினை ஒன்று சேர்க்கப்
    பேரறி வாளர் நெஞ்சில்
        பிறந்தபத் திரிகைப் பெண்ணே!

    என்பது பாரதிதாசனது கவிதை! இதழ்களின் நோக்கத்தையும் சிறப்புக் கூறுகளையும் பணிகளையும் உள்ளடக்கிய இதழியல் என்ற கலைச்சொல்லின் முழுமையான    பரிமாணங்களையும் தன்னகத்தே பெற்று இக்கவிதை மிளிர்கிறது எனலாம்.     

    1.1.1 இதழியல் சொற்பிறப்பு

    ஜர்னலிஸம் (Journalism) என்ற ஆங்கிலக் கலைச் சொல் டையர்னல் (Diurnal) என்ற இலத்தீன் மொழிச்சொல்லில் இருந்து பிறந்தது. டையர்னல், ஜர்னல் என்றால் அன்றாடம் என்பது பொருள். வாஸ்கோடகாமா தமது கப்பற்பயணத்தில் அன்றாடம் நிகழ்ந்தவைகளை எழுதித் தொகுப்பாக்கினார். அத்தொகுப்பு எ ஜர்னல் ஆப் தி பஸ்டு வாயேஜ் ஆப் வாஸ்கோடகாமா (A Journal of the first voyage of Vascodagama) எனப் பெயர் பெற்றது. அன்றாடம் என்ற பொருள் தரும் சொல் காலப்போக்கில் அன்றாட நிகழ்வுகளைத் தெரிவிக்கும் இதழ்களைக் குறித்தது.

    தமிழில் முதலில் பத்திரிகை என்ற சொல் கையாளப்பட்டது. ஏடு, மலர், மடல், முடங்கல், தாள், தாளிகை, சுவடி முதலிய சொற்களும் பத்திரிகையைக் குறிக்கும். தற்போது இதழ் என்ற சொல்லும் இதழியல் என்ற சொல்லும் கலைச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    வார, மாத, ஆண்டு இதழ்களையும், கவிதை, சிறுகதை, துணுக்குகள், கட்டுரை முதலியவற்றைத் தாங்கி நிற்கும் வெளியீடுகளையும் இதழ் என்ற சொல் குறிப்பிடுகிறது. அதாவது இதழியல் என்பது இதழ் தொடர்பான எல்லாவற்றையும் உள்ளடக்கிய கலைச் சொல்லாக உள்ளது.

    1.1.2 அகராதிப் பொருள்

    ‘வெளியிடுவதற்காகவோ பதிப்பிப்பதற்காகவோ ஒலி பரப்புவதற்காகவோ நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் இதழியல்’ என்று வெப்ஸ்டர் பன்னாட்டு அகராதி (Webster) குறிப்பிடுகிறது.

    ‘பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல் எனப்படும்’ என, சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி (Chambers) சுட்டுகிறது.

    1.1.3 அறிஞர்களின் கருத்து

    ‘பொது நோக்குடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனிதநலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடைபயில்கின்றது’ என்று அமெரிக்க இதழியல் பேராசிரியரான ஹெரால்டு பெஞ்சமின் (Harold Benjamin) குறிப்பிடுகின்றார்.

    ஜி.எப். மோட் (G.F. Mott) என்பவர் விரிவாக ‘இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்கு உரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி, பொதுச் செய்திகளையும் பொதுப் பொழுதுபோக்குகளையும் முறையாக, நம்பிக்கைக்கு உரிய வகையில் பரப்பு வதாகும்’ என்று குறிப்பிடுகின்றார்.

    ‘பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும் தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும்    வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது’ என்பது பிராங் மோரேஸ் (Frank Moraes) என்பவரின் கருத்தாகும்.

    ஆர். இராமச்சந்திர ஐயர் என்ற இந்திய அறிஞர் கூறுவதாவது; இதழ்களுக்கு, குறிப்பாகச் செய்தித்தாட்களுக்கு, எழுதும் தொழிலைத் தான் முதன்முதலில் இதழியல் என்ற சொல் குறித்தது. இப்பொழுது அதனுடைய பொருளும் பரப்பும் விரிவடைந்து, செய்திகளையும் கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் தொடர்பு நிறுவனமாக மாறியும், சமுதாய விழிப் புணர்ச்சியின் ஓர் உறுப்பாக அதுவே உருவெடுத்தும், அதனுடைய நடவடிக்கைக்கு அற அடிப்படையிலும் சட்டநோக்கிலும் பொறுப்பேற்கும் அமைப்பாகவும் இதழியல் திகழ்கின்றது.’

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 09:55:32(இந்திய நேரம்)