Primary tabs
-
1.3 அச்சுக் கலையும் இதழ்களின் தோற்றமும்
இன்றைய இதழ்களின் வடிவத்திற்கு உறுதுணையாக இருப்பவை காகிதமும் அச்சு இயந்திரமும் ஆகும். இவற்றின் வருகையும் வளர்ச்சியும் இதழியலின் வருகைக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பவை எனலாம்.
மல்பெரி மரத்தின் பட்டைகளில் இருந்து சீனர்கள் காகிதம் செய்யும் கலையைக் கண்டறிந்தனர். சீனர்களிடம் இருந்தே பிற நாட்டினர் காகிதம் செய்யும் கலையைத் தத்தம் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
காகிதம் போன்றே அச்சுக்கலையின் பிறப்பிடமும் சீனா என்றே உலக வரலாறு சுட்டுகிறது. மர எழுத்துக்களில் மைதடவி அவற்றை அழுத்தினர். ஆகவேதான் அச்சு வழிப்பட்ட இதழியல் துறை பிரஸ் (Press) எனப்படுகிறது.
- உலகின் மிகப்பழைய இதழ்
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மரப்பலகையில் செதுக்கிய இதழ்கள் சீனாவில் வெளியாயின. கிஸ்போ, பீகிங் நியூஸ், பீகிங் கெஜட் முதலியன அவ்வாறு வெளியான இதழ்களாகும். கி.பி.1835 வரை வெளியான பீகிங் நியூஸ் இதழுக்கு 1200ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த இதழே உலகின் மிகப்பழைய இதழாகக் கருதப்படுகிறது.
1.3.1 அச்சு இயந்திரமும் முதல் இதழும்
450இல் ஜான் கூடன்பர்க் (John Gutenberg) என்ற ஜெர்மானியர் முதன் முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார். அதன் காரணமாக முதல் அச்சிதழும் ஜெர்மனியில் இருந்தே வெளிவந்தது. முதலில் ஜெர்மனியில் முழுமையான இதழ்களாக இல்லாமல் துண்டுப் பிரசுரங்களை (News Pamphlets) வெளியிட்டனர். பல்லாண்டுகள் கழித்து 1609இல் ஜெர்மனியின் ஸ்ட்ராஸ்பெர்க் நகரிலிருந்து உறவு (Relation) என்ற இதழ் வெளிவந்தது. இதுவே உலகின் முதல் அச்சிதழ் ஆகும்.
பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பல நாடுகளில் இதழ்கள் வெளியாயின. அரசியல், பொருளாதாரச் செய்திகளை நூல் வடிவத்தில் வெளியிட்டனர். வாணிப நிறுவனங்கள் செய்திக் கடிதங்களைச் சுற்றுக்கு விட்டன.
1622ஆம் ஆண்டில் தி வீக்லி நியூஸ் (The Weekly News) என்ற பெயரில் இங்கிலாந்தின் முதல் மாத இதழ் தொடங்கப்பட்டது. 11.3.1708இல் எலிஸபெத் மாலெட் (Elizabeth Mallet) என்ற பெண்மணி இங்கிலாந்தில் தினசரிச் செய்திகள் (The Daily Courant) என்ற நாளிதழைத் தொடங்கினார். இதுவே இங்கிலாந்தின் முதல் நாள் இதழாகும். 1785ஆம் ஆண்டு ஜான் வால்டர்(John Walter) என்பார் தொடங்கிய தினசரி உலகப் பதிவேடு என்ற நாளிதழே லண்டன் டைம்ஸ் எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குகிறது.
தொடக்கக் காலத்தில் அச்சுக்கலை அறிந்தவர்களே இதழாசிரியர்களாக இருந்தனர். 1788ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அச்சகத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். தண்டனையை அனுபவிப்பதற்காகக் கப்பலில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டார். அக்கைதியால் ஆஸ்திரேலியாவில் முதல் இதழ் தொடங்கப்பட்டது.