Primary tabs
-
1.4 இந்திய இதழியல் வரலாறு
ஐரோப்பியர்களின் வருகையால் இந்தியாவில் விளைந்த நன்மைகளுள் ஒன்று இதழ்களின் தோற்றமாகும். இந்தியச் சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரையும் தொடர்பு கொள்ளுவதற்காக அவர்கள் இந்திய மொழிகளைப் பயின்றனர்; தங்களது மத போதனைகளை அம்மொழிகளில் நூல்களாக வெளியிட்டனர்.
1577ஆம் ஆண்டு கோவாவில் போர்த்துகீசியரால் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ்நூல் அச்சானது. இதுவே இந்தியாவின் முதல் அச்சு நூலாகும்.
கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஆங்கிலேயர்கள்தான் இந்திய இதழ்களின் தொடக்க முயற்சியாளர்கள் ஆவர். 1766ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகிய வில்லியம் போல்டஸ் என்பார் தமது இதழியல் முயற்சியை அறிக்கையாக வெளியிட்டார். வணிக வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டுவதோடு, தனிப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் தம்மிடம் உள்ளதாக போல்ட்ஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஆங்கிலேய அரசாங்கம் அவரை இந்தியாவிலிருந்து வெளியேற்றியது. இவ்வாறு இந்தியாவில் முதல் இதழியல் முயற்சி அடக்கு முறைக்கு ஆளானது.
கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 1780ஆம் ஆண்டு சனவரி 29ஆம் நாள் பெங்கால் கெசட் அல்லது கல்கத்தா அட்வர்டைசர் என்ற செய்தி இதழை வெளியிட்டார்.
12”(inches)x 8”(inches) அளவில் இரண்டு பக்கங்களில் வார இதழாக ஆங்கில மொழியில் பெங்கால் கெசட் வெளியானது. இங்கிலாந்து இதழ்களில் வெளியான செய்திகள், விளம்பரங்கள், கடிதங்கள் முதலியன இவ்விதழில் இடம் பெற்றன. ஆங்கில அரசின் முறையற்ற செயல்களையும், அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எள்ளல் நடையில் ஹிக்கி தமது இதழில் வெளியிட்டார். ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ், அவரது மனைவி, உச்ச நீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே முதலியோர் பற்றியும் செய்திகளை வெளியிட்டார். அதனால் அரசின் அடக்குமுறைக்கு ஆளானார் ஹிக்கி. இரண்டே ஆண்டுகளில் 1782 மார்ச் மாதம் பெங்கால் கெசட் இதழ் நின்றது. எனினும், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, இந்தியச் செய்தித்தாள்களின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
இந்திய இதழ்கள் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய முப்பெரு நகரங்களிலிருந்து வெளிவந்தன. 1780ஆம் ஆண்டு பி.மெஸ்ஸின்க், பீட்டர் ரீட் ஆகிய இருவரும் கல்கத்தாவிலிருந்து இந்தியா கெசட் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டனர். இவ்விதழ் ஆங்கில அரசின் ஆதரவு இதழாக வெளிவந்தது. 1784இல் கல்கத்தா கெசட், 1785இல் ஓரியண்டல் மேகஸின் அல்லது கல்கத்தா அம்யூஸ்மென்ட், 1785இல் பெங்கால் ஜர்னல் ஆகிய ஆங்கில இதழ்கள் கல்கத்தாவிலிருந்து வெளிவந்தன.
1785ஆம் ஆண்டு மெட்ராஸ் கூரியர் என்ற ஆங்கில வார இதழ் சென்னையிலிருந்து வெளியானது.
1789இல் பாம்பே ஹெரால்ட், 1790இல் பாம்பேகூரியர், 1791இல் பாம்பே கெசட் முதலிய ஆங்கில வார இதழ்கள் பம்பாயிலிருந்து (இன்றைய மும்பை நகரம்) வெளிவந்தன.
1818இல் திக்தர்சினி என்ற வங்க மொழி இதழும், 1821ஆம் ஆண்டு மீரட் அல் அக்பர் என்ற பாரசீக மொழி இதழும், 1822ஆம் ஆண்டு மும்பாய்னா சமாச்சார் என்ற குஜராத்தி மொழி இதழும் வெளிவந்தன.
இந்திய இதழ்கள் தொடக்கத்தில் சமயப் பிரச்சாரங்களையும், ஆங்கிலேய அரசின் செய்திகளையும் மட்டுமே வெளியிட்டன. காலப் போக்கில் பிற செய்திகளும் இவ்விதழ்களில் வெளியாயின.