Primary tabs
-
4.4 குடிமையும் குன்றுவ செய்யாமையும்
‘இன்மை’ என்றால், ‘இல்லாமை’ என்று பொருள்படும். நல்ல
குடியில் தோன்றியவர்களிடம் எந்த எந்த இயல்புகள் இல்லாமல்
இருக்கின்றன என்பதையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.நல்ல குடியில் பிறந்தவர்களிடம் நல்ல பண்புகள் இயல்பாகவே
அமைந்திருக்கும். அதைப்போல தீய பண்புகள் இயல்பாகவே
இல்லாமலிருக்கின்றன. தன் குடும்பத்திற்கு இழுக்குச் சேர்க்கும்
செயலைச் செய்யக்கூடிய இயல்பும், நல்ல பண்பிலிருந்து தவறும்
தன்மையும் நல்ல குடியில் பிறந்தவரிடம் இல்லாமல் இருக்கின்றன
என்கிறார் வள்ளுவர்.
நல்ல உயர்குடியில் பிறந்தோர் மேலும் தன்குடிக்குப் பெருமை
தரும் செயல்களையே செய்வர். எந்தக் காரணத்திற்காகவும் தம்
குடும்பத்திற்கு இழுக்கு அல்லது கேடு வருகின்றவற்றைச் செய்ய
மாட்டார்கள். அத்தகைய குன்றுவ செய்யும் இயல்பு அவர்களிடம்
இல்லை என்கிறார் வள்ளுவர். இதனை,
(குன்றுவ = குறைய/ஒழுக்கம் குன்ற, செய்தல் இலர் =
செய்யமாட்டார்கள்)என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
உயர்குடியில் பிறந்தவர்கள், கோடிக்கணக்கான பொன்னை அல்லது
பொருளைப் பெறுவதாக இருந்தாலும், தாம் பிறந்த குடிக்கு
ஒழுக்கம் குன்றுவதற்குக் காரணமானவற்றைச் செய்யமாட்டார்கள்.• அரிச்சந்திரன்
நல்லகுடியில் பிறந்தாருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய்த்
திகழ்பவன் புராணக் கதையில் இடம்பெறும் அரிச்சந்திரன் என்னும்
மன்னன்.தன் குடிப்பெருமைக்கு எந்தச் சூழலிலும் இழுக்கு வராமல்
பாதுகாத்தவன் அரிச்சந்திரன். தன் நாட்டை இழந்த பின்னரும், தன்
மனைவியையும் மகனையும் இழந்த பின்னரும், சுடுகாட்டைப்
பாதுகாக்கும் நிலைக்கு வந்த பின்னரும், ‘பொய் சொல்ல மாட்டேன்’
என்று உறுதியாக இருந்தான் அரிச்சந்திரன். தன் நன்மைக்காகப்
பொய் சொன்னால், அதனால் தான் தோன்றிய குடிக்குப் பெரும்
இழுக்கு வரும் என அஞ்சினான். எனவே, ஆட்சிக்குரிய நாடு
போனாலும் கவலைப்படாமல். தன் குடும்பத்திற்கு இழுக்கை
ஏற்படுத்தும் ‘பொய்யைச் சொல்லமாட்டேன்’ என்று வாழ்ந்தான்
அரிச்சந்திரன். தன் குடும்ப ஒழுக்கத்தைக் கெடுக்கும் பொய்
சொல்லும் தன்மை அவனிடம் இல்லை. ஏன் என்றால் அவன்
நல்ல குடியைச் சார்ந்தவன்.
• குமணனின் செயல்
குமணன் என்ற குறுநில மன்னன் மிகுந்த கொடை உள்ளம்
கொண்டவன். தன்னிடம் வந்து பொருள் கேட்போர்க்கு ‘இல்லை’
என்று சொல்லாமல் தாராளமாக வழங்கும் பண்பாடு உடையவன்.
அவனுக்கும், அவனது தம்பியாகிய இளங்குமணனுக்கும் இடையே
ஏற்பட்ட பிணக்கினால், நாட்டை விட்டு விட்டு, காட்டில் வாழ்ந்து
வந்தான். குமணன் காட்டிற்குச் சென்ற பின்னரும், அவன் மீதுள்ள
கோபம் அடங்காத இளங்குமணன், அவனை அழிக்க முயன்றான்.
அதனால் குமணன் தலையைக் கொண்டு தருபவர்க்கு ஆயிரம்
பொற்காசு தருவதாக அறிவித்தான். இத்தகைய சூழலில்,
வறுமையினால் வருந்திய புலவர் ஒருவர், காட்டில் வாழ்ந்து வரும்
குமணனிடம் சென்றார். புலவரைப் பார்த்ததும், அவருக்கும்
கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று வருந்திய குமணன், தன்
தலையைக் கொய்து கொண்டுபோய், தன் தம்பியிடம் கொடுத்து,
தன் தலைக்கு உரிய விலையாகிய ஆயிரம் பொற்காசைப் பெற்றுக்
கொள்ளும்படி கூறினான் என்பது வரலாறு.குமணன், தன்னிடம் வந்த புலவரிடம் ‘நான் ஆட்சியில் இல்லை.
காட்டில் வாழும் என்னிடம் ஒன்றும் இல்லை. எனவே என்னால்
உனக்கு உதவி செய்ய முடியாது’ என்று சொல்லி, அந்தப்
புலவரைத் திரும்ப அனுப்பியிருக்கலாம். அது தவறும் அல்ல.
அதுதான் அவனது உண்மை நிலை. இருப்பினும் ‘இல்லை’ என்று
சொல்ல விரும்பாத, தன் இயல்பான பண்பிலிருந்து சிறிதும் மாற
விரும்பாத குமணன், தன் தலைக்கு உறுதி செய்யப்பட்ட ஆயிரம்
பொன்னையும் பெற்றுச் செல்லுமாறு கூறுகிறான். இது, எந்தச்
சூழலிலும் தன் பண்பிலிருந்து தவறாத குமணனின் உயர்ந்த
பண்பாட்டைக் காட்டுகிறது. இத்தகைய இயல்பையே வள்ளுவர்,
(வழங்குவது = கொடுத்து உதவுவது, உள்வீழ்ந்தக் கண்ணும் =
சுருங்கிப்போன பொழுதும், தலைப்பிரிதல் = கொடுக்கும்
தன்மையிலிருந்து நீங்குதல்)என்று குறிப்பிடுகின்றார்.
தொன்று தொட்டு வருகின்ற நல்ல குடியில் பிறந்தவர்கள்,
பிறருக்குக் கொடுக்கத் தேவையான பொருள் சுருங்கி வறுமை
எய்தியபொழுதும் கூட, தமது இயல்பான கொடுக்கும்
தன்மையிலிருந்து நீங்க மாட்டார்கள் என்பது இக்குறளின் பொருள்.தன்னைப் பாராட்டிப் பரிசில் பெற, தன்னிடம் வந்த புலவருக்குக்
கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. இருப்பினும் ‘இல்லை’ என்று சொல்லி
அறியாத பண்புடைய குமணன், தன் தலையைக் கொடுத்து உதவ
முன் வந்தது அவனது கொடுக்கும் தன்மையிலிருந்து விலகாத
அல்லது நீங்காத பண்பை வெளிப்படுத்துகிறது. அது மட்டுமல்ல,
எந்தச் சூழலிலும் ‘இல்லை’ என்று சொல்லக்கூடிய பண்பு அவனிடம்
இல்லை என்பதையும் புலப்படுத்துகிறது.நல்ல குடியில் பிறந்தவனிடம் இந்தப் பண்பு நிலைத்து நிற்கும்
என்கிறார் வள்ளுவர்.