Primary tabs
-
6.0 பாட முன்னுரை
தமிழகக் கலை வரலாற்றில் விசயநகர - நாயக்கரது ஆட்சிக்
காலத்திற்குப் பின் தோன்றி வளர்ந்த கலையை இக்காலக் கலை
எனலாம். இங்கு இக்காலம் என்பது ஐரோப்பியரது காலம் மற்றும்
இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து இன்று வரையிலான
காலத்தைக் குறிக்கும். பொதுவாக நவீனச் சிற்ப, ஓவியக்
கலைகளின் வளர்ச்சி நிலையை இந்திய விடுதலைக்கு முன்,
விடுதலைக்குப் பின் எனப் பிரித்துக் காண்பர். மரபு சார்ந்த சிற்ப,
ஓவியக் கலைகள் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தில்,
மேற்கத்திய சிற்ப, ஓவியக் கலைகளின் தாக்கத்தினால் மாபெரும்
மாற்றம் நிகழ்ந்தது. அதன் காரணமாகக் கலைஞர்கள் புது
விதமான சிற்ப, ஓவியங்களைப் படைக்கத் தொடங்கினர்.
இ்ப்பாடத்தில், மரபிலிருந்து புதுமையை நோக்கி நகர்ந்த
சிற்ப-ஓவியக் கலைகளையும், கலைப் படைப்பாளிகளையும் பற்றிக்
காணலாம்.