தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6.2

  • 6.2 நவீனக் கலைப் பாணிகள்

    இந்திய சுதந்திரத்திற்குப் பின் நவீன ஓவியம் புதிய
    கோணத்தில் படைக்கப்பட்டது. தொடக்கக் கால நவீன ஓவிய
    முயற்சிகளில் மரபு சார்ந்த கதைப் பாத்திரங்களை வரைதல், தனி
    நபர்களை வரைதல், இயற்கைக் காட்சிகளை வரைந்து காட்டல்
    ஆகியவற்றைக் காண முடிந்தது. பிற்காலத்தில் நவீன ஓவியம்
    என்பது பார்ப்போர் எளிதில் புரிந்து கொள்ள இயலாத நிலையை
    அடைந்தது. நவீன     ஓவியத்தில்     மரபு சார்ந்த
    வெளியீட்டுக்கு முக்கியத்துவம்     அளிக்கப்     படாததும்;
    ஓவியனைச் சுற்றிச் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகள்
    ஓவியங்களுக்குக் கருவாக     அமைந்ததுதான். ஓவியனின்
    எண்ணங்கள், கற்பனை இவற்றால் உருவாகும் நவீன ஓவியத்தை;
    அதனைப் பார்ப்போர் தம் அறிவு, சிந்தனை, இரசனை
    ஆகியவற்றின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள இயலும்.
    எனவே, நவீன ஓவியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில்
    திரும்பத் திரும்ப அத்தகு ஓவியங்களைப் பார்த்துப் பார்த்து
    அவற்றோடு பழக வேண்டும். அப்பொழுதுதான் கொஞ்சம்
    கொஞ்சமாக அந்த ஓவியக் கருத்து மனத்தில் பதிந்து புரியத்
    தொடங்கும். மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோவின் படைப்புகள்
    கூட அவர் காலத்திலேயே எதிர்ப்புகளுக்கு உள்ளாயின.

    விடுதலைக்குப் பின் தமிழகத்தின் கலைப் போக்குகளை
    நான்கு பாணிகளாக வகைப்படுத்துவர். அவை

    (1) ஐரோப்பியக் கலை மரபுப் (Academic) பாணி
    (2) அகப்பதிவு இயல் (Impressionism) பாணி
    (3) வங்காளக் கலைப் பாணி
    (4) தற்காலக் கலைப் பாணி
    6.2.1 ஐரோப்பியக் கலைமரபுப் (Academic) பாணி

    தமிழகத்தில் ஐரோப்பியக் கலை மரபுப் பாணியானது பெரும்
    தாக்கத்தை ஏற்படுத்தியது. பல சிற்பக் கலைஞர்கள் இப்பாணியைப்
    பின்பற்றினர். தேவி பிரசாத் ராய் சௌத்திரி இப்பாணிக் கலை
    வெளிப்பாடுகளையே அதிகம் பின்பற்றியவர் ஆவார். சென்னைக்
    கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பின் வெற்றி சிற்பம் இவர்
    படைத்த ஐரோப்பியப் பாணிச் சிற்பமே.
    6.2.2 அகப்பதிவு இயல் பாணி

    விரைந்து கடந்து போகும் கண நேர மனப் பதிவுகளைப்
    பல்வேறு வண்ணச் சேர்க்கைகளில் தடுத்து நிறுத்தி, ஒழுங்கற்ற
    சிறுசிறு தீற்றல்களில் வரைவது அகப்பதிவு இயல் ஓவியம்
    ஆகும். அதாவது, பொருளைப் புலன்வழிக் கண்ட விதமாகக்
    காட்டாமல், அப்பொருள் ஓவியனின் மனத்தில் எவ்வாறு
    பதிவானதோ அவ்வாறே வெளிப்படுத்துவது. இதில் தர்க்கத்துக்கு
    உட்பட்ட மரபான உருவ அமைப்புகளைப் பார்க்க முடியாது.
    இன்றைய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் பொருள்கள் நாம்
    இயல்பாகக் காணும் வடிவத்தில் இல்லாமல், தெளிவற்ற,
    வேறுபட்ட வடிவங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். இது
    அகப்பதிவு இயலின் செல்வாக்கைக் காட்டுகிறது.
    6.2.3 வங்காளக் கலைப் பாணி

    இந்தியாவின் பழைய கலைப் பாணிகளைக் கண்டுபிடித்து
    அக்கலைப் பாணிகளுடன், (சான்றாக அஜந்தா, எல்லோரா
    ஆகிய கலைப் பாணிகளுடன்) சீன, ஜப்பானிய மற்றும் கீழைத்
    தேசக் கலைப் பாணிகளையும் கலந்து கலைப் படைப்புகள்
    படைக்கப்பட்டன. இதுவே வங்காளக் கலைப் பாணி எனப்படும்.
    இதைப் பின்பற்றித் தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த
    கலைப் பள்ளி ஓவியர்கள்; பட்டீசுவரம், திருப்பருத்திக் குன்றம்,
    சித்தன்ன வாசல் முதலிய இடங்களில் உள்ள பழம்பெரும் ஓவியப்
    பாணிகளிலிருந்து தங்களுக்கான பாணிகளை உருவாக்கினர்.
    6.2.4 தற்காலக் கலைப் பாணி

    தற்கால நவீனச் சிந்தனைகளுக்கு ஏற்பப் படைப்புகளை
    உருவாக்குதலே தற்காலக் கலைப் பாணியாகும். பணிக்கர், தனபால் போன்றோரின் தாக்கத்தினால், கலைஞர் பலர்
    தத்தமக்கு என்று தனித்துவம் உள்ள கலைப்பாணிகளை
    உருவாக்கிக் கொண்டனர். சோழ மண்டல ஓவியக் கிராமத்தைச்
    சேர்ந்த கலைஞர் பலர் தற்காலக் கலைப் பாணியில் பல
    சிற்ப, ஓவியங்களை உருவாக்கியுள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:45:08(இந்திய நேரம்)