தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l2-4.3 ஆர்வமொழி அணி

  • 4.3 ஆர்வமொழி அணி
        இதுவும் ஒருவகையால் சொல் பற்றிய அணியே
    ஆகும். உள்ளத்தில் உள்ள ஆர்வத்தைச் சொற்கள் மூலம்
    வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்த அணி ஆகும்.
    4.3.1 ஆர்வமொழி அணியின் இலக்கணம்

        ஆர்வம் = அன்பு, மகிழ்ச்சி. உள்ளத்திலே தோன்றிய
    ஆர்வத்தை வெளிப்படுத்தும் சொற்கள் அதிகம் தோன்றும்படி
    சொல்லுவது ஆர்வமொழி அணி எனப்படும்.
    ''ஆர்வ மொழி மிகுப்பது ஆர்வ மொழியே''
    (தண்டி, 68)

    எடுத்துக்காட்டு:

    சொல்ல மொழிதளர்ந்து சோரும்; துணைமலர்த்தோள்
    புல்ல இருதோள் புடைபெயரா; - மெல்ல
    நினைவோம் எனில் நெஞ்சு இடம்போதாது; எம்பால்
    வனைதாராய்! வந்ததற்கு மாறு

    (புல்ல - தழுவ; புடைபெயரா = பக்கங்களில் நீளா;
    வனைதாராய்
    = அழகிய மாலை அணிந்தவனே;
    மாறு
    - கைம்மாறு.)

    பாடலின் பொருள்:

        அழகிய மாலையை அணிந்தவனே! உனக்கு முன்னே
    நின்று மறுமொழி கூறுவதற்கு முயன்றால் எங்களுடைய
    சொற்கள் தடுமாறிச் சோர்வுபடுகின்றன; உன்னுடைய இரண்டு
    தோள்களைத் தழுவ முயன்றால் எங்களுடைய இரண்டு
    தோள்களும் பக்கங்களில் நீண்டு வளர்ந்தவை அல்ல; மெல்ல
    உன்னுடைய புகழை நினைப்போமாயின் எங்களுடைய
    உள்ளத்தில் அதற்கு இடம் போதாது; நீ எம் இருப்பிடம்
    நோக்கி வந்த உன்னுடைய இப்பெருமைக்கு யாம் என்ன
    கைம்மாறு செய்ய முடியும்?


    • அணிப்பொருத்தம்

        இப்பாடலில், தலைவி தலைவன்பால் கொண்டுள்ள
    அன்பு மிகுதியை 'மொழிதளர்ந்து சோரும், தோள் புடைபெயரா,
    நெஞ்சு இடம்போதாது' என மிகுதியான ஆர்வமொழிகள்
    கொண்டு வெளிப்படுத்துவதால் இது ஆர்வமொழி அணி
    ஆயிற்று.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1

    இலேச அணியின் இலக்கணம் யாது?

    2

    இலேச அணியின்பால் படும் அணிகள் யாவை?

    3

    வஞ்சப் புகழ்ச்சி அணி என்றால் என்ன?

    4

    வஞ்சப் புகழ்ச்சி அணி அமைந்த
    புறப்பாடலைப் பாடியவர் யார்?

    5

    நிரல்நிறை அணியின் இலக்கணம் யாது?

    6

    நிரல்நிறை அணி எத்தனை வகைப்படும்?
    அவை யாவை?

    7

    நிரல்நிறை அணியை நன்னூல் எவ்வாறு
    கூறுகின்றது?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:57:08(இந்திய நேரம்)