தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l2-4.6 பரியாய அணி

  • 4.6 பரியாய அணி
         தான் கருதியதைக் கூறாது, அப்பொருள் தோன்றுமாறு
    வேறு ஒன்றைக் கூறுவது பரியாயம் என்னும் அணி ஆகும்.


    கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப்
    பிறிதுஒன்று உரைப்பது பரியா யம்மே
    (தண்டி, 72)
    (பரியாயம் - ஒன்றுக்குப் பதிலாக, சாமர்த்தியமாக வேறொன்றைச் சொல்லல்)

    எடுத்துக்காட்டு

    மின் நிகராம் மாதே! விரைச்சாந்து உடன்புணர்ந்து நின் நிகராம் மாதவிக்கண் நின்று அருள் நீ; -
    தன் நிகராம்
    செந்தீ வரமலரும் செங்காந்தள் போதுடனே
    இந்தீ வரம்கொணர்வல் யான்
    (மின் = மின்னல்; விரை = நறுமணம்;
    சாந்து = சந்தனமரம்; மாதவி குருக்கத்திக் கொடி; போது = மலர்; இந்தீவரம் = குவளை மலர்.)

    இப்பாடலின் பொருள்

        'மின்னலை ஒத்த மாதே! நறுமணம் கமழும் சந்தன
    மரத்தில் படர்ந்து, உனக்கு நிகராகி நிற்கின்ற இக் குருக்கத்திக்
    கொடியின் கீழே நீ நிற்பாயாக. தனக்கு நிகரான சிவந்த
    தீயின் ஒளி தெரியும்படி மலர்ந்த சிவந்த காந்தள் மலருடனே,
    குவளை மலரையும் யான் சென்று பறித்து வருகிறேன்' என்று
    தோழி தலைவியிடம் கூறுகிறாள்.


    . அணிப்பொருத்தம்

        தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிட்ட
    பகற்குறி இடத்தில் தலைவியைக் கொண்டுவந்து நிறுத்துகின்றாள்
    தோழி. அப்போது தான் அங்கே    நிற்பது அவர்கள்
    இன்பத்துக்குத் தடையாகும் என்று அவ்விடத்தை விட்டு
    நீங்கிச் செல்லக் கருதுகிறாள். அதனை நேரடியாகக் கூறாமல்,
    'காந்தள் மலரையும் குவளை மலரையும் பறித்து வரும் வரை
    நீ இங்கே குருக்கத்திக் கொடியின் கீழே இருப்பாயாக' என்று
    சாமர்த்தியமாக வேறு ஒன்றைக் கூறியதால் இப்பாடல் பரியாய
    அணி ஆயிற்று.

        பரியாய அணியின் இலக்கணத்தைப் பார்க்கும்போது
    அதுவும் ஒட்டு அணியும் ஒற்றுமை உடையன போலத்
    தோன்றும். தான் கருதிய கருத்தை மறைத்தலில் பரியாய
    அணிக்கும் ஒட்டு அணிக்கும் வேற்றுமை இல்லை. எனினும்,
    ஒட்டு அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதனோடு
    உவமையாகக் கூடிய பிறிதொரு கருத்தைக் கூறுவது, பரியாய
    அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதற்கு வேறான
    பிறிதொரு கருத்தைக் கூறுவது.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:57:20(இந்திய நேரம்)