கவிஞர்கள் தாங்கள் பாடுகின்ற பாடலில் பெரும்பாலும்
ஒரு பொருளையே அமைத்துப் பாடுவர். சில நேரங்களில் ஒரே
பாடலில் இருவேறு பொருள் அமையுமாறும் பாடுவர். தமிழில்
ஒரு சொல் பல பொருள் உணர்த்துவதும் உண்டு. அதே
போல ஒரு சொல்தொடரும் வெவ்வேறு வகையாகப் பிரிப்பதற்கு
ஏற்ற வகையில் அமையும்போது பல பொருள் தருவது உண்டு.
இத்தகைய சொற்களையும் தொடர்களையும் கவிஞர்கள் ஒரு
பாடலில் அமைத்து இரு வேறுபட்ட பொருள்களைப் பாடத்
தலைப்பட்டதன் விளைவாகவே சிலேடை அணி தோன்றியது.
இதனை 'இரட்டுற மொழிதல்' என்று கூறுவர். இரண்டு
பொருள்பட மொழிதலால் இவ்வாறு கூறப்பட்டது.
5.3.1 சிலேடை அணியின் இலக்கணம்
ஒரு வகையாக நின்ற சொற்றொடர் பல வகையான
பொருள்களின் தன்மை தெரிய வருவது சிலேடை என்னும்
அணி ஆகும். இதனை,
ஒருவகைச் சொற்றொடர் பலபொருள் பெற்றி
தெரிதர வருவது சிலேடை ஆகும்
(தண்டி, 76)
என்ற தண்டியலங்கார நூற்பாவால் அறியலாம்.
. சிலேடை அணியின் வகைகள்
சிலேடை அணி செம்மொழிச் சிலேடை என்றும்,
பிரிமொழிச் சிலேடை என்றும் இரு வகைப்படும்.
ஒரு சொற்றொடரில் உள்ள சொற்கள் பிரிக்கப்படாமல்
அப்படியே நின்று பல பொருள் தருவது செம்மொழிச்
சிலேடை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயிலப் - பொங்குஉதயத்து
ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும்
நீர்ஆழி நீள்நிலத்து மேல்
அருஞ்சொல் பொருள்
இப்பாடல் சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாகப்
பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள் சூரியனோடு
பொருத்திப் பார்க்கும்போது, ஒரு பொருளையும், சோழனோடு
பொருத்திப் பார்க்கும் போது வேறு ஒரு பொருளையும்
தருகின்றன.
சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது :-
கரங்கள் - கதிர்கள், கற்றைகள்;
இரவு - இருள்;
பங்கயம் - தாமரை;
மாதர் - காதல்;
நலம் - அழகு;
பயிலல் - உண்டாதல்;
பொங்குதல் - மேல் நோக்கி வளர்தல்;
உதயம் -தோற்றம்;
ஓர் ஆழி -ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர்;
வெய்யோன் - சூரியன்;
உயர்ந்த நெறி - வான் வழி (விண் விசும்பு).
சோழனோடு பொருத்திப் பார்க்கும்போது:-
கரங்கள் - கைகள்; இரவு - வறுமை;
பங்கய மாதர் - தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்;
நலம் - செல்வம்; பயிலல் -பெருகுதல்; பொங்குதல் - மேம்படுதல்; உதயம் - பொருள் வருவாய்; ஓர் ஆழி - தனி ஆணைச் சக்கரம்; வெய்யோன் - விரும்பப்படுபவனாகிய சோழன்;
உயர்ந்த நெறி - உயர்ந்த ஒழுக்கமாகிய நெறி.
இப்பாடலின் பொருள்
'கடல் சூழ்ந்த புவி மீது சூரியன், தன்னுடைய சிவந்த
கதிர்களால் இருளைப் போக்கும் திறன் மிக்கவன்; தாமரை
மலர்கள் காதலிக்கும் அழகு உண்டாக, மேல் நோக்கி வளரும்
தோற்றத்தை உடையவன்; ஒற்றைச் சக்கரத்தை உடைய தேரில்
உயர்ந்த வான வெளியில் வலம் வருபவன்' எனவும்,
'கடல் சூழ்ந்த புவி மீது சோழன், தன்னுடைய சிவந்த
கைகளால் உலகில் உள்ளவர்களுடைய வறுமையைப் போக்கும்
திறன் மிக்கவன்; தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின்
செல்வம் பெருக மேம்படும் பொருள் வருவாயை உடையவன்;
தனி ஆணைச் சக்கரத்தை உடையவன்; உலகத்தாரால்
விரும்பப்படும் இயல்பு உடையவன்; சான்றோர் வகுத்த உயர்ந்த
ஒழுக்க நெறியில் நடப்பவன்' எனவும், இப்பாடல் இரு
பொருள் கொள்ளப்படும்.
. அணிப் பொருத்தம்
இப்பாடலில் உள்ள சொற்கள் பிரிக்கப்படாமல், அப்படியே
நின்று, சூரியன், சோழன் ஆகிய இருவருக்கும் பொருந்துமாறு
பொருள் தருவதால் இது, 'செம்மொழிச் சிலேடை' ஆயிற்று.
ஒரு சொற்றொடரில் உள்ள சொற்களை வேறுவேறு
வகையாகப் பிரித்துப் பல பொருள் கொள்வது பிரிமொழிச்
சிலேடை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா அரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம்
சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்
நந்தும் தொழில்புரிந்தார் நாடு
அருஞ்சொல் பொருள்
இப்பாடல், சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர் நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள், பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத் தருகின்றன.
சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
தள்ளா இடத்து - அழகு கெடாத விளைநிலத்தில்;
ஏர் - பகட்டேர் அதாவது உழும் எருது;
தடம் - பெரிய;
தாமரை - தாமரை மலர்;
எள்ளா - இகழாத;
அரி - நெற்சூடு;
மானிடர் - உழவர்;
மிகுப்ப - திரட்ட;
உள்வாழ்தேம் - உள்ளே உண்டாகிய தேன்;
சிந்தும் - பொழியும்;
நந்தும் தொழில் புரிந்தார் - விரும்பும் பணி செய்தோர்.
சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
விடத்தேர் - முள்ளுடைய ஒருவகை மரம்;
தள்ளா - அசையாத;தடம் - மலை; சிந்தும் - அழியும்;
தா மரை - தாவுகின்ற மரை என்னும் மான்; எள்ளா - இகழாத;
அரி மான் - சிங்கப் போத்து, ஆண் சிங்கம்; இடர் - துன்பம்; மிகுப்ப - செய்ய; உள்வாழ்தேம் - உள்ளத்தில் வாழும் நாடு;
நந்தும் தொழில் புரிந்தார் - வேறுபடும் தொழில் செய்தோர்.
இப்பாடலின் பொருள்
அழகு கெடாத விளைநிலங்களில் உளதாகிய பகட்டேர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரைப் பொருந்தவும், இகழப்படாத நெற்கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உளதாகிய தேன் பொழியும் பெருமையை உடையது, எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் விரும்பும்படி நடந்தோருடைய நாடு.
அசையாத விடத்தேர் என்னும் முள்மரங்களை உடையதாய், பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மான்களை உடையதாய், இகழப்படாத ஆண் சிங்கங்கள் துன்பமுறுத்த, நல்லோர் உள்ளங்களில் வாழும் இடங்கள் எல்லாம் அழிவுபடும் தன்மையை உடையது. எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் வெறுக்கும்படி நடந்தோருடைய நாடு.
. அணிப் பொருத்தம்
இப்பாடலில் உள்ள சொற்கள், சோழனுடைய நண்பர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் ஒரு வகையாகவும், பகைவர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் வேறொரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருள் தருவதால் இது, 'பிரிமொழிச் சிலேடை' ஆயிற்று.
தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் சிலேடை அணி மிகச் சிறப்பாகப்
பாடப்பட்டிரு ப்பதைக் காணலாம். தனிப்பாடல்கள் பாடிப்
புகழ் பெற்ற கவிஞர்களுள் ஒருவர் காளமேகப் புலவர். இவர்
வைக்கோலுக்கும் யானைக்கும், ஆமணக்குக்கும் யானைக்கும்,
பாம்புக்கும் வாழைப் பழத்துக்கும், பாம்புக்கும் எலுமிச்சம்
பழத்துக்கும், பாம்புக்கும் எள்ளுக்கும் என்றவாறு சிலேடை அணி
அமைத்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஒரு சான்று
காண்போம்.
பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை
எடுத்துக்காட்டு:
ஆடிக் குடத்து அடையும்; ஆடும்போதே இரையும்;
மூடித் திறக்கின் முகம்காட்டும்; - ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரில் பிண் ணாக்குண்டாம்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது
(பிண்ணாக்கு என்னும் சொல், பாம்பிற்கு ஆகுங்கால் 'பிள் + நாக்கு' = பிண்ணாக்கு, பிளவுபட்ட நாக்கு என்றும், எள்ளுக்கு ஆகுங்கால் எள்ளுப் பிண்ணாக்கு என்றும் இருவேறு பொருள் தரும். மற்றச் சொற்கள் அப்படியே நேராக நின்று பாம்பிற்கும் எள்ளுக்கும் பொருந்துமாறு இரு வேறு பொருள் தரும்.)
இப்பாடலின் பொருள்
'பாம்பானது, படம் எடுத்து ஆடிக் குடத்தினுள் புகும்; படம் எடுத்து ஆடும்போதே சீத்து, சீத்து என ஓசை உண்டாக்கும்; குடத்தில் இட்டு மூடிய பின் மூடியைத் திறந்து பார்த்தால் தனது தலையை எடுத்துக் காட்டும்; அது ஓடி ஒருவர் தலையைத் தீண்டுமானால் அவர்க்குப் பரபர என்ற உணர்ச்சி உண்டாகும்; அதற்குப் பிளவுபட்ட நாக்கும் உண்டு.'
'எள்ளானது, செக்கில் ஆட்டப்பட்டுக் குடத்திலே அடைக்கப்படும்; செக்கில் ஆட்டும் போதே இரைச்சல் ஓசையை உண்டாக்கும்; குடத்தில் எண்ணெயை அசையாமல் வைத்து மூடித் திறந்து பார்த்தால் அது பார்ப்பவருடைய முகத்தைக் காட்டும்; எண்ணெயைத் தலையில் ஊற்றித் தேய்த்தால் குளிர்ச்சியான உணர்ச்சி உண்டாகும்; எண்ணெய் ஆட்டும் போது எள்ளுப் பிண்ணாக்கு உண்டாகும்.'
ஆதலால் இவ்வுலகில் பாம்பும் எள்ளும் சமம் என்று கூறுவாயாக.
. அணிப் பொருத்தம்
இப்பாடலில், காளமேகப் புலவர் சொற்களைப் பாம்பு, எள் ஆகிய இரண்டனுக்கும் பொருந்துமாறு அமைத்துப் பாடியதால் இது, சிலேடை அணி ஆயிற்று.
தன்மதிப்பீடு : வினாக்கள் - I
உதாத்த அணியின் இலக்கணம் யாது?
உதாத்த அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
உதாத்த அணிக்கு அமைந்த மற்றொரு பெயர் யாது?
அவநுதி அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சிலேடை அணியின் இலக்கணம் யாது?
சிலேடை அணிக்கு உரிய வேறொரு பெயர் யாது?
செம்மொழிச் சிலேடை என்றால் என்ன?
பிரிமொழிச் சிலேடை என்றால் என்ன?